2025 நவம்பர் 26, புதன்கிழமை

தேவை அர்த்தமுள்ள ‘இலங்கையர் தினம்’

R.Tharaniya   / 2025 நவம்பர் 25 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா 

அரசாங்கம் இலங்கையர் தினத்தை டிசெம்பர் மாதம் கொண்டாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது. அது தொடர்பாகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி அண்மையில் சந்திப்பொன்றையும் நடத்தியிருக்கின்றார்.  

அனைத்து இன, மத பின்னணியைக் கொண்டவர்களும் சுதந்திரமான முறையில் தங்களது அடையாளங்களுடன் ‘இலங்கையர்’ என்ற குடையின் கீழ் வாழ்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்லின நாடொன்றில் இவ்வாறான பொது உணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். பல்வேறு காரணங்களினால் இவ்விதமான தேசிய உணர்வொன்று இதுவரை காலமும் கட்டியெழுப்பப்படவில்லை.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தொடங்கி தொழில் விண்ணப்பப்படிவம் தொட்டு அரசியல் வரையில் எல்லா இடங்களிலும் தனித்தனி இனத்துவ அடையாளங்களே முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர் என்ற கோசத்தோடுதான் 
இந்த ஆட்சியைக் கைப்பற்றியது. இனவாதமோ வேறு வாதங்களோ இலங்கைச் சூழலில் தரும் வெற்றியை விட பொதுப்படையான கோஷங்கள்தான் வெற்றியைத் தரும் என்பதை ஜே.வி.பியும் என்.பி.பியும் ‘அரகலய’ காலத்தில் கண்டறிந்தன என கூறலாம்.

இலங்கையர் என்ற கோஷம், எல்லா மக்களையும் ஒரு தளத்தில் ஒன்றிணைக்கும். அது ஒரு வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்று திடமாக நம்பியிருக்கவில்லை என்றால், ஜே.வி.பியின் சிரேஷ்ட தலைவர்கள், இந்த வியூகத்திற்கு ஒருபோதும் இடமளித்திருக்க மாட்டார்கள்.

தேர்தல் முடிந்த பிறகு, அந்த சுலோகத்தை அப்படியே விட்டுவிடாமல், இலங்கையில் உள்ள சகல இன, மத, கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட 
மக்களையும் ஒன்று சேர்ப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றமை பாராட்டுக்குரியது.

இதனை முன்னிட்டு, ஜனாதிபதி சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள். எம்.பிக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது ஏற்புடையதல்ல. எவ்வாறாயினும், ஜனாதிபதி இவ்விதமான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்தமை நல்ல விடயமாகும்.

ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மத, இன, சமூக, கலாசார அடையாளங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் மேற்குறிப்பிட்ட எல்லா வகையான மக்கள் பிரிவினரும் இலங்கையர் என்ற வட்டத்திற்குள் வருகின்றனர். அந்த எண்ணத்தை அடிமனதில் ஏற்படுத்த வெண்டியுள்ளது.

இலங்கையர் என்ற பொதுத் தன்மையை நாம் அடுத்த தலைமுறைக்காவது அடிப்படையில் இருந்து ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அந்த வகையில், இது வரவேற்கத்தக்க முயற்சியாகும்.

ஆனால், நாட்டில் நடந்த அநீதியிழைப்புக்களுக்கு நீதியை நிலைநாட்டாமல். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படுத்துவோருக்குத் தண்டனை வழங்காமல், நடைமுறை யதார்த்தங்களை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு  இலங்கையர் தினத்தைக் கொண்டாடினால் மட்டும் போதுமா? 
என்ற கேள்வியும் எழுகின்றது.

இனவாத அரசியல் வெளிப்படையாகவே மீள மேலெழுந்துள்ளது. திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது என்பதை விடவும், 
அது வைக்கப்பட்ட விதமும், அது தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட அதிகார, இன மேலாதிக்கத்  தோரணையும் கவனிப்பிற்குரியது.

இது விடயத்தில் பாராளுமன்றத்தில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையும் உள்ளும் வெளியுமாக நடந்து கொண்ட விதமும் இந்த நாட்டில் கடும்போக்கு சக்திகளுக்கு இருக்கின்ற பலத்தையும் அரசாங்கத்தின் ‘நிலையையும்’ 
உட்கிடையாக உணர்த்தியது எனலாம்.

இலங்கையில் இனவாதம் எந்தளவுக்கு அழிவுகளை ஏற்படுத்தியது என்பதை ஜே.வி.பி.யும் என்.பி.பியும் நன்கறியும். பிற்காலத்தில் இனவாத சக்திகளுக்கு எதிராகக் குரல்கொடுத்த ஜே.வி.பி. எம்.பிக்களில் தற்போதைய ஜனாதிபதியும் முக்கியமானவர்.

இந்நிலையில், இனவாதிகளையும் அதற்கு சூடம் காட்டிய அரசியல்வாதிகளையும் தண்டிக்கப் பயந்து கொண்டு புதிய அரசாங்கம் செயற்படுமாயின், பௌத்தத்தை முதன்மைப்படுத்துதல் என்ற பெயரில் சமூகங்களுக்கு இடையில் கசப்புணர்வுகள் விதைக்கப்படுவதைப் பௌத்த பீடங்கள் தடுக்காதிருக்குமாயின், எத்தனை தினங்களைக் கொண்டாடியும் பயனில்லை.

மறுபுறத்தில், என்னதான் இருந்தாலும் இந்த நாட்டில் சிங்கள மக்கள் சனத்தொகையில் அதிகமானவர்கள், அவர்களுக்கு மேலாதிக்க உணர்வு இயல்பாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொள்ளக்கூடாது.

அதிலும், முக்கியமாக சில தமிழ் அரசியல்வாதிகள், சிலவேளை, முஸ்லிம் எம்.பிக்கள் சாதாரண சிங்கள மக்கள் மனம்கோணும் வகையில் கருத்து வெளியிடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

இலங்கையர் தினம் ஒன்றை அனுஷ்டிக்க எதிர்பார்த்திருக்கின்ற அரசாங்கம் இவ்வாறான அசம்பாவிதங்கள் தற்செயலாகவோ திட்டமிட்டோ மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பவம் நடந்த பிறகு விளக்கம் சொன்னால் மட்டும் போதாது.

இன நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற நாட்டில், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அமைச்சரவையில் பேசுவதற்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. எத்தனையோ முறை கோரிக்கைகள், அழுத்தங்கள் விடுக்கப்பட்டும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

அமைச்சராக நியமிப்பதற்குத் தகுதியில்லாத, அனுபவமில்லாத முஸ்லிம் வேட்பாளர்களையா என்.பி.பி. கடந்த தேர்தலில் களமிறக்கியது? அப்படியென்றால், மற்றைய என்.பி.பி. அமைச்சர்கள் எந்த முன் அனுபவத்துடன் வந்திருக்கின்றார்கள் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டும்.

இலங்கையர் தினம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குச் சிறுபான்மைக் கட்சிகளை ஜனாதிபதி அழைத்தமை நல்ல விடயமே. ஆனால் ஜனாதிபதி, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு முஸ்லிம் கட்சிகளை, எம்.பிக்களை இதுவரை சந்திக்கவில்லை என்பது மிக முக்கியமான விடயமாகும்.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்த, அதனைக் கையாண்ட அனுபவம் மூத்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே உள்ளது. இது விடயத்தில் என்.பி.பி. எம்.பிக்களோ செயற்பாட்டாளர்களோ எதனையும் அறிய மாட்டார்கள். 
அரசியல் கத்துக்குட்டிகள் என்றும் சிலரைச் சொல்லலாம்.

எனவே, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள் பற்றி உண்மையிலேயே அறிய வேண்டுமென்றால், மூத்த, விடயமறிந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் அரசாங்கம் உரையாட வேண்டும். 
அதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முயற்சிப்பது அவசியம்.

அதைவிடுத்து, என்.பி.பி. ஊடாக வருகின்ற விவகாரங்களை மட்டுமே தீர்க்க முடியும் என்ற நினைப்பிலோ அல்லது முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்குள் முற்று முழுதாக சங்கமித்து முஸ்லிம் கட்சிகளைப் புறக்கணித்தால்தான் விடிவு கிடைக்கும் என்ற தோரணையிலோ அரசாங்கம் செயற்பட விரும்புகின்றது என்றால், இலங்கையர் தினம் அர்த்தமுள்ளதாக அமையாது.

முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், உரிமை மீறல்களுக்கான நீதியை நிலைநாட்டுதல் தொடக்கம் தற்போது எழுந்துள்ள அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பது வரை பல விவகாரங்கள் கிடப்பில் கிடக்கின்றன.
இப்படித்தான் தமிழர்களின் நியாயமான, சாத்தியமான கோரிக்கைகள் கூட இழுத்தடிக்கப்படுவதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. கத்தோலிக்க மக்கள் வேண்டிநிற்கும் நீதியும் இதுவரை வழங்கப்படவில்லை.

தேசிய கீதத்திற்குக் கூட எழுந்து நின்று மரியாதை செய்யாத ஒரு மக்கள் கூட்டமும் அதிகாரிகளும் வாழ்கின்ற இந்த நாட்டில் இலங்கையர் தினம் எந்தளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வரும் என தெரியாது.

ஆனால், மாற்றங்களை ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதனை முன்னின்று செய்வதற்கு மிகப் பொருத்தமான தலைவர் இந்த ஜனாதிபதியே என்ற அடிப்படையில் இந்த இலங்கையர் தின முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், வெறுமனே ஏனைய தேசிய மற்றும் சர்வதேச தினங்களைக் கொண்டாடுவது போல இந்த தினத்தையும் ஒரு நாளுக்குரிய அனுஷ்டானமாக, ஆக்கிவிடாமல் இது இலங்கையில் உள்ள அனைத்து இன, மத, வகுப்பு பிரிவுகளையும் சேர்ந்த மக்களும் உணரக் கூடிய அர்த்தமுள்ள ஒரு கோட்பாடாக மாற வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X