2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றக் காணொளியும் பஞ்சாப் தேர்தலும்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு விதிகளை மீறி விட்டதாகத் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த் மான்; என்பவரான இவரின் நடத்தை குறித்து விசாரிக்க, ஒன்பது பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழு அமைப்பதற்கான உத்தரவை இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகஜன் விடுத்துள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான விசாரணை. ஏனென்றால் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவரே நாடாளுமன்றப் பாதுகாப்பை காற்றில் பறக்க விட்டார் என்பது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டுமல்ல - அவர் சார்ந்திருக்கும் கட்சிக்குமே பெரிய தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

13.12.2001 என்ற திகதியை இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மறக்க முடியாது. அன்று தான் ஒன்பது தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்று பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்சல் குரு 9.2.2013 அன்று திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இத்தண்டனை நிறைவேற்றம் இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பின் மீதுள்ள உறுதித் தன்மையை வெளிப்படுத்தியது. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலைப் பாதுகாப்பு படையினர் முறியடித்தாலும், அன்றிலிருந்து இந்திய நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணிகளில் கொஞ்சம் கூட நூல் விலகாமல் பாதுகாப்புப் படையினர் கெடுபிடியான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் திருக்கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசும் சரி, பாதுகாப்புப் படைகளும் சரி மிகவும்

உஷாராக இருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன் வீட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்குள் நுழைவது வரை தான் கடந்து செல்லும் பாதையிலுள்ள பாதுகாப்புக் காவலரண்கள் அனைத்தையும் காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டமை அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. கட்சி வித்தியாசமின்றி இந்த எம்.பியின்  செயல்பாட்டை அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டித்தனர்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை காணொளி எடுத்து வெளியிட்ட எம்.பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டனர். ஒரு நாள், இதற்காக இந்திய நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது. இந்த நிலையில்தான் ஆம்ஆத்மி எம்.பி பகவந்த் மான் ஓகஸ்ட் மூன்றாம் திகதி வரை தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனத்தை எதிர்பாராத மான், 'நிபந்தனையற்ற மன்னிப்பு' கோரினார். ஆனாலும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகஜன், இப்பிரச்சினையை எளிதில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் ஏற்கெனவே ஒரு முறை நாடாளுமன்றம் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இது போன்று பாதுகாப்பு தொடர்புடைய காணொளிகளை வெளியிடுவது என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றே கருதினார். அதனால் இப்போது ஒன்பது பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவை நியமித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில் பகவந்த் மான் எம்.பிக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எம்.பியே முன் வந்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினாலும், அத்துடன் விட்டுவிட மற்றக் கட்சி எம்.பிக்களும் தயாராக இல்லை. அதை மத்தியில் உள்ள ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை. இரு கட்சிகளுக்குமே ஆம் ஆத்மி கட்சி 'அரசியல் எதிரியாக' இருப்பதால், அந்தக் கட்சியின் எம்.பி மாட்டிக் கொண்ட விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கவே விரும்புகின்றன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளும் விடயம் அல்ல என்பது ஒரு புறமிருக்க, இந்த ஒட்டு மொத்த விவகாரத்தில் அரசியலே இல்லை என்றும் ஒரேயடியாக மறுத்து விட முடியாது.

விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள எம்.பி மான், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்புக் கூடியிருக்கிறது. ஏற்கெனவே டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு போட்டியாக ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இனி வரும் தேர்தலில் பஞ்சாப்பில் கடும் போட்டியை உருவாக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி என்று நான்கு கட்சிகளும் பஞ்சாப் மாநில தேர்தல் களத்தில் போட்டியாளர்களாக கருதப்பட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் வரவு, மற்ற மூன்று கட்சிகளுக்கும் பெரிய அளவில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு மிக முக்கிய காரணம் பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெருகி வரும் ஆதரவு ஆகும். அவருடையை 'ஊழலுக்கு எதிரான' தீவிரப் போராட்டத்தின் விளைவாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. இந்தியாவின் தலைநகரில், மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் ஆட்சிக்கு வர இயலவில்லை. பிரதான எதிர்க்கட்சியும் வெற்றி பெற முடியவில்லை. இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி, 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 33 இலட்சம் வாக்குகளைப் பெற்றமை அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்தது. ஆம் ஆத்மியின் வளர்ச்சி டெல்லியைத் தாண்டியும் பரவியிருக்கிறது என்பது பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளில் வெளிப்பட்டது.

இது ஒருபுறமிருக்க பாரதிய ஜனதாக் கட்சிக்கு பஞ்சாப் மாநிலத்தில் இப்போது பெரிய சிக்கல் வந்து விட்டது. அக்கட்சியின் முகமாக இருந்த பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, விலகி விட்டார். அது மட்டுமல்ல, 'பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று கட்சி மேலிடம் சொன்னது. எனக்கு என் மாநிலம்தான் முக்கியம்' என்று அவர் அளித்த பேட்டி பரபரப்பாகி விட்டது. இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் சித்துவுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஆரம்பித்த மோதல், இப்போது பா.ஜ.கவுக்கு பஞ்சாப் மாநிலத்தில் பெரிய சவாலை ஏற்படுத்தி விட்டது.

இதே பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் தவிக்கிறது. 'அகாலிதளம் - பா.ஜ.க' கூட்டணி ஆட்சி, பஞ்சாப்பில் இப்போது நடக்கிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு, மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைக் காங்கிரஸ் கட்சி சாதகமாக்கிக் கொள்ள அரசியல் செய்து வந்தது. திடீரென்று சித்து விலகியிருக்கிறார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து விட்டால், அகாலி தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற அச்ச உணர்வு பஞ்சாப் காங்கிரஸ் தலைமைகளுக்கு மட்டுமின்றி, அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர்களுக்கே ஏற்பட்டுள்ளது.

ஆகவே நாடாளுமன்ற காணொளி விவகாரத்தில் சிக்கிய மான் எம்.பி விவகாரம், தோல்வியைச் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா- அகாலி தளக் கூட்டணிக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறது. தேச பக்தி, நாட்டின் பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பிக்கு அக்கறையில்லை என்பதை முழு அளவில் பிரசாரம் செய்ய, இந்த நாடாளுமன்ற காணொளி பயன்படலாம் என்ற அரசியல் கணக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்குமே இருக்கிறது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டதில் பிரதிபலித்த கட்சிகளின் ஒற்றுமை, அறிக்கை தாக்கல் செய்வதிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில், நாடாளுமன்றக் காணொளி விவகாரத்தில் வெளியாகப் போகும் விசாரணைக் குழுவின் அறிக்கையையும் அதன் மீது இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகஜன் எடுக்கப் போகும் நடவடிக்கையையும், நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. எம்.பி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசியல் ரீதியாக சில கட்சிகளுக்கு உதவலாம்.

ஆனால் நாடாளுமன்றப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அந்தப் பாதுகாப்புக்கு ஊனம் விளைவிக்கும் வகையில் காணொளி எடுத்து வெளியிட்டதை, இந்திய நாடாளுமன்றம் தயவு தாட்சண்யமின்றி தண்டித்திருக்கிறது என்றால், சட்டத்தின் ஆட்சி மட்டுமல்ல சபாநாயகரின் அதிகாரமும் நிலைநாட்டப்படும். நாடாளுமன்றத்துக்குள் நடக்கும் விடயங்கள் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம், சபாநாயகரிடம் மொத்தமாக இருக்கிறது. அந்த அதிகாரம், ஆம் ஆத்மி கட்சி எம்.பி மான் விடயத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமானதொரு தீர்ப்பாக பதிவேடுகளில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .