2025 மே 14, புதன்கிழமை

நாடாளுமன்றத் தேர்தலா? ஜனாதிபதித் தேர்தலா?

Administrator   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி  - 78)

ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதனூடாக இனப்பிரச்சினை தொடர்பில் சாதகமான தீர்வொன்றினைக் கண்டுவிட முடியும் என அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முழுமையான நம்பிக்கையோடு செயற்பட்டது.

அதனால், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதையும் முடிந்தவரை தவிர்க்க நினைத்தது.   

கிருஷ்ணா வைகுந்தவாசனின் தமிழீழப் பிரகடன விடயத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதும் உமா மகேஸ்வரன் - பிரபாகரன் நாடு கடத்தல் விவகாரத்தில் அமைதி காத்ததும் தனிநாட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் சக்திகளின் அழுத்தத்தை இலாவகமாகத் தவிர்த்து வந்ததும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை, ஜே.ஆர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மூலமாக இணக்கப்பாடான தீர்வொன்றை எட்டிவிட திடசங்கற்பம் கொண்டமையையே எடுத்துக் காட்டுகிறது.   

ஆனால், ஜே. ஆரின் எண்ணப்பாடு வேறு விடயங்களில் தீவிரம் கொண்டிருந்தது. 1983 இறுதியளவில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவுபெறுகிறது. ஆகவே, 1977 இல் வரலாறு காணாத 5/6 பெரும்பான்மை பெற்றுப் பதவிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கம், மீண்டும் பொதுத் தேர்தலொன்றைச் சந்திக்க வேண்டிய சூழல் காத்திருந்தது.  

 1984 இல் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுறுவதால், ஜனாதிபதித் தேர்தலுக்கான காலமும் வெகுதொலைவில் இல்லை. 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான முதலாவது தேர்தலாக அது அமையும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

குறைந்திருந்த செல்வாக்கு  

இந்த நிலையில், 1982 இன் தொடக்க காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் செல்வாக்கு, அவர்கள் 1977 இல் பெற்ற அளவிலான பெரும்பான்மைப் பலத்தை தக்க வைக்கத்தக்கதாக இருக்கவில்லை.   

குறிப்பாக, 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், எந்தவொரு கட்சியும் இனி 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வரலாறு காணாத பெரும்பான்மைப் பலத்தை பெற முடியாத நிலையே ஏற்பட்டது.   

இதை ஜே.ஆர் நன்குணர்ந்திருந்தார். நாட்டில் இடம்பெற்ற கலவரங்களும் வன்முறைகளும் சிறுபான்மை மக்களிடையேயான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கைப் பாதித்திருந்த அதேவேளையில், நாட்டிலே எழுந்திருந்த வன்முறைச் சூழலும் அதிகரித்து வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளும் பெரும்பான்மை சிங்கள மக்களிடையேயான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கைப் பாதித்திருந்தன.   

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்திருந்த திறந்த பொருளாதாரம் உள்ளிட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன்னரிருந்த நிலையைவிட முன்னேற்றகரமான சூழலை ஏற்படுத்தியிருந்தாலும் அவர்கள் சொன்ன அளவுக்கு மூலதன உட்பாய்ச்சலை, இந்த ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவும் ஐக்கிய தேசியக் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்திருந்தது.   

சுதந்திரக் கட்சிக்குள் சிக்கல்  

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது 1980 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டதில் பெரும் அரசியல் ரீதியிலான பின்னடைவைச் சந்தித்திருந்தது.   

அந்தப் பின்னடைவிலிருந்து கொஞ்சம் மீண்டுகொண்டிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜே.ஆருக்கும் பலமான போட்டியொன்றை வழங்கும் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அன்று இருக்கவில்லை என்பதுதான் உண்மை.   

மேலும், உட்கட்சி முறுகல்களும் பிளவுகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கடுமையாகப் பாதித்திருந்தன. சிறிமாவின் அரசியல் அஞ்ஞாதவாசத்தைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அத்தனகல்ல தொகுதியிலிருந்து அடுத்து யார் நியமிக்கப்படுவது என்பது தொடர்பில் சிறிமாவின் மகனான அநுர பண்டாரநாயக்கவுக்கும் சிறிமாவின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் பனிப்போரொன்று மூண்டிருந்தது.   

இருவரையும் தவிர்த்த தன்னுடைய நீண்டநாள் விசுவாசியான லக்ஷ்மன் ஜயக்கொடியை அத்தனகல்லை தொகுதியில் நியமித்ததனூடாக அந்தப் பிரச்சினையை சிறிமாவோ தீர்க்க விளைந்தார்.  

 மறுபுறத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய மைத்திரிபால சேனநாயக்க, சிறிமாவின் அஞ்ஞாதவாசத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார்.  

 இந்த எண்ணத்தை, மைத்திரிபால சேனநாயக்கவின் மனைவியார் வெளிப்படுத்திய ஒலிப்பதிவை ஜே.ஆரின் முகவர்கள் சிறிமாவிடம் சேர்ப்பித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த விளைந்ததாக ரஜீவ விஜேசிங்ஹ தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடுகிறார்.   

இடதுசாரிக் கொள்கைச் சார்பு கொண்டதாகவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள், அநுர பண்டாரநாயக்க வலது சார்புடையவராக இருந்தார். சிறிமாவும்  குறிப்பாக அவரது விசுவாசிகளும் இடது சார்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள்.  

 அநுர பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட இந்தக் கொள்கைச் சார்புகூட ஒரு காரணம் என்று ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார்.  

 இதன் விளைவாக, மைத்திரிபால சேனநாயக்க மற்றும் அநுர பண்டாரநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தாம் ஒரு தனிக்குழுவாக இயங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்லாது, தம்மையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.   

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிரந்தரமானது  

இதேவேளை, நாட்டில் தன்னுடைய ஆட்சியின் விளைவால் அதிகரித்து வந்த வன்முறையையும் எவ்வகையிலேனும் கட்டுப்படுத்த வேண்டிய நிலையும் ஜே. ஆருக்கு ஏற்பட்டது.   

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து சமாளித்துக் கொண்டிருந்த ஜே.ஆருக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது.   

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் பலம், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இல்லை என்பதை ஜே.ஆர் உணர்ந்திருக்க வேண்டும்.   

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு வந்தது.

1982 மார்ச்சில் இலங்கைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீதான தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களைக் கண்டித்து, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வௌியிட்டிருந்தார். 

அதில், ‘இரண்டு வகையாக தரப்பினர் யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஒருதரப்பு அரசியல் நோக்கம் கொண்டது. மற்றையது மிகப்பாரதூரமான குற்றவாளிகளைக் கொண்டது. அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமது குற்றங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அரசியல் நோக்கம் கொண்டவர்கள் தமது நோக்கத்தை அடைவதற்கு வன்முறையை வழிமுறையாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனது நோக்கத்தை அமைதி வழியிலேயே அடைய முயல்கிறது’ என்று குறிப்பிட்டதை சச்சி பொன்னம்பலம் தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார்.   

இந்தச் சூழலில் அதிகரித்து வரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க, திடசங்கற்பம் கொண்டது ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம்.  

 1979 இல் தற்காலிகமாக ஜே.ஆர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய ‘ட்ரேகோனியன்’ சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, அதன் தற்காலிக காலம் நிறைவுறும் நிலையை எட்டியிருந்தது. 

மீண்டும் அதனைத் தற்காலிகமாகச் சிலகாலத்துக்கு மட்டும் நீடிப்பதற்குப் பதிலாக ஜே.ஆர் அரசாங்கமானது, அதனை நிரந்தர சட்டமாக்கும் வகையில் 1982 மார்ச்சில் ஒரு திருத்தச் சட்டத்தை முன்வைத்தது.   

1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் மூலம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் திருத்தப்பட்டது. 1979 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 29 ஆம் பிரிவு குறித்த சட்டம் மூன்று ஆண்டுகளுக்கே வலிதானது என்று குறிப்பிட்டது.   

1982 ஆம் ஆண்டு திருத்தத்தின் கீழ், குறித்த 29 ஆம் பிரிவானது நீக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. உலகின் மிகமோசமான, அடிப்படை மனித உரிமைகளை மீறும் சட்டங்களுள் ஒன்றாக இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் காணப்படுகிறது.   

1984 இல் வெளியிடப்பட்ட சர்வதேச சட்டவியலாளர்கள் ஆணைக்குழுவின் அறிக்கையொன்றில், போல் சீகார்ட் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை, “நாகரிகமடைந்த நாடொன்றின் சட்டப்புத்தகத்தில் காணப்படக்கூடிய அசிங்கமான கறை” என்று விளிக்கிறார்.  

ஜே. ஆரின் தேர்தல் வியூகம்  

இந்தப் பின்னணியில்தான் 1983 இல் வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தல், 1984 இல் வரவிருந்த ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றுக்கான வியூகமொன்றை அமைக்க வேண்டிய நிலையில் ஜே.ஆர் இருந்தார்.   

ஐக்கிய தேசியக் கட்சியின் சரிந்துவரும் செல்வாக்குக்கு, சிறிமாவின் அரசியல் அஞ்ஞாதவாச அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுந்து கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து சூழ்நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, முதலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வதைவிட, முதலில் ஜனாதிபதித் தேர்தலைச் சந்திப்பதுதான் சாலப் பொருத்தமானது என ஜே.ஆரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் கருதினர்.   

இதற்கு இன்னுமொரு காரணத்தையும் ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார். முதலில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெல்லுமானால், அவர்கள் சிறிவோவின் குடியியல் உரிமைகளை மீள அளிப்பார்கள். அந்த எழுச்சியோடு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆருக்கு எதிரான சிறிமாவோ போட்டியிடுவார்.   

ஆகவே நாடாளுமன்றத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலிலும் தோல்வியடையக்கூடிய இரட்டை அபாயம் இருந்தது. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமானால், குடியியல் உரிமைகளை இழந்துள்ள சிறிமாவோவினால் அதில் போட்டியிட முடியாது. சிறிமாவோவைத் தவிர நாடுமுழுவதும் பிரபல்யமிக்க தலைவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இல்லை.  

ஆகவே, பலமான போட்டியில்லாத நிலையில் ஜே.ஆரினால் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் எழுச்சியோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்காது.   

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே, 1982 இன் இறுதிப்பகுதியில் நடத்துவதற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன தீர்மானித்தார். ஆனால், அரசியலமைப்பு ரீதியில் அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது.   

அரசியலமைப்புக்கான மூன்றாவது திருத்தம்  

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 31 ஆம் சரத்தின் மூன்றாம் பிரிவானது, ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதத்துக்குக் கூடாத காலப்பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என்று வழங்கியது.  

ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை ஜே.ஆர், தான் நினைத்த வேளையில் நடத்தவதற்கு முடியாத சூழல் இருந்தது. ஆனால், ஜே.ஆரிடம் வரலாறு காணாத 5/6 பெரும்பான்மைப் பலம் இருந்தது.  

ஆகவே, அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைச் செய்து, ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜே.ஆர் முடிவெடுத்தார்.   

ஜனாதிபதியொருவர் தன்னுடைய முதலாவது பதவிக்காலத்தின் நான்காண்டுகள் கடந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்களாணையை தேர்தல் மூலம் பெறுவதற்கான ஒரு பிரகடனமொன்றைச் செய்ய முடியும் என்ற திருத்தத்தை 1978 ஆம் ஆண்டின் குடியரசு யாப்புக்கான மூன்றாவது திருத்தமாக ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்தது.  

இந்தத் திருத்தம் சிவில் உரிமைகள் இயக்கத்தினால் உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டது. மக்களின் உரிமையை இது பாதிப்பதாகச் சிவில் உரிமைகள் இயக்கம் தெரிவித்தது. 

 உயர் நீதிமன்றானது, குறித்த திருத்த மசோதாவைப் பரிசீலித்த பின்னர், 2/3 பெரும்பான்மையோடு குறித்த திருத்தமானது நிறைவேற்றப்பட முடியும் என்று அறிவித்தது.   

இலங்கையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான முதலாவது தேர்தலுக்கு ஜே.ஆர் தயாரானார். அவருக்கான போட்டியாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் தேடிக்கொண்டிருந்தன.   

(அடுத்த வாரம் தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X