2025 மே 14, புதன்கிழமை

நாடாளுமன்றம்- உச்சநீதிமன்றம்- சட்டமன்றம்: சல்லிக்கட்டு விவகாரத்தில் காத்திருக்கும் திருப்பம்?

Administrator   / 2017 ஜனவரி 30 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கலாசாரம்” பற்றிய இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாற்றுவதற்கு இப்படியொரு ஜனநாயக ரீதியிலான போராட்டம் முதன் முறையாகத் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழர்களின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகப் பொங்கல் திருநாளின் போது சல்லிக்கட்டு தமிழகத்தில் உள்ள பல கிராமங்களில் நடைபெறும். 

சில இடங்களில் வாடி வாசல் வைத்துக் காளைகளை அவிழ்த்து விடுவார்கள். பல இடங்களில் இது போன்றதொரு ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், மைதானத்தில் காளைகளை அவிழ்த்து விடுவார்கள். அப்படித் தமிழக மக்களுடன் பின்னிப் பிணைந்த விளையாட்டு இந்தச் சல்லிக்கட்டு விளையாட்டு.  

காளைகளுக்கு உள்ள சுதந்திரம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து, சல்லிக்கட்டுக்கு காளைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது போன்ற தீர்ப்புகளை எதிர்த்து இதுவரை மாநில சட்டமன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. 

குறிப்பாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி, செயல்படுத்த மறுத்தது. 

அதைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட்டு “காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது முழுக்க முழுக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்குட்பட்டது. ஆகவே அந்த உத்தரவை நீங்கள் இரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டது. 

ஆனால், இந்த முறை தமிழகத்தில் உச்சநீதிமன்றம் சல்லிக்கட்டுக்கு காளைகளை பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்த பிறகு, “சல்லிக்கட்டு வேண்டும்” என்ற போராட்டம் வாயிலாகச் சாதிக்க முயன்றதுதான் ‘மெரினா போராட்டத்தின்’ மிக முக்கிய திருப்பம்.  

மக்கள் போராட்டத்தைப் பார்த்த தமிழக அரசாங்கம், ஏன் இவ்வளவு பெரிய போராட்டம் அமைதிப் போராட்டமாக நடந்ததைப் பார்த்து, ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. 

முதலில் இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற கேள்வி எழுந்தது. பிரதமரை, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்த பிறகு நிலைமை மாறியது. “மாநில அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் உதவத் தயார்” என்று பிரதமர் கூறினார்.ஆனால் “உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நாங்கள் ஏதும் செய்ய இயலாது” என்றார். 

அதைத் தொடர்ந்தே, இன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் சல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக, மத்திய அரசாங்கத்தின், மிருக வதை தடுப்புச் சட்டத்துக்கு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம், இனிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த ஒப்புதல் பெற்றவுடன் தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்துவதற்கு உள்ள தடை நீங்கியது என்று எடுத்துக் கொள்ளலாம். 

அதன் அடையாளமாகத்தான் இப்போதே பல இடங்களில் சல்லிக்கட்டு நடைபெறுகின்றன. அலங்காநல்லூரில் அடுத்து முறைப்படி சல்லிக்கட்டு நடக்கப் போகிறது. ஆனால், தமிழக அரசாங்கத்தின் சட்டம், உச்சநீதிமன்றத்தில் தாக்குப் பிடித்து நிற்குமா என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  

அதற்கு முக்கிய காரணம், மத்திய அரசாங்கத்தின் மிருக வதைத் தடுப்புச் சட்டம், 1960 அடிப்படையில் மிருகங்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டம். இந்த விடயத்தில், காளைகளின் சுதந்திரத்தை, அந்தக் காளைகளுக்கு ஏதும் தொந்தரவுகள் வரக்கூடாது என்பதை உறுதி செய்யும் சட்டம். 

ஆனால், தமிழக அரசாங்கம் இப்போது கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம், காளைகளைச் சல்லிக்கட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது என்பது மத்திய அரசாங்கத்தின் மிருக வதை தடுப்புச் சட்ட நோக்கத்துக்கு முரணாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

மிக முக்கியமாக, மிருகவதைத் தடுப்புச் சட்டம், பொதுப் பட்டியலில் இருப்பது. (மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் சட்டம் இயற்றலாம்) இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. மத்திய அரசாங்கத்தின் சட்டத்துக்குத் துணையாக ஒரு சட்டத்தை கொண்டு வருவது என்பது வேறு. 

அதே மத்திய அரசாங்கத்தின் சட்டத்துக்கு முரணாக ஒரு சட்டத்தை மாநில அரசாங்கம் கொண்டு வருவது சற்று வித்தியாசமானது. அதிலும் சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் முறைப்படுத்தும் வகையில் இந்த மாநில அரசாங்கத்தின் சட்டம் அமைய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. 

நாடாளுமன்றம் அப்படிச் சட்டம் இயற்றும் போதே அதற்குத் தடை போடும் உச்சநீதிமன்றம், இதுபோன்ற மாநில சட்டமன்றங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் திருத்தும் விதத்திலோ, முறைப்படுத்தும் விதத்திலோ சட்டம் கொண்டு வரும் அதிகாரத்தை அளிக்குமா என்பது மில்லியன் டொலர் கேள்வி. 

ஆகவே, இந்தச் சல்லிக்கட்டுத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய- மாநில அரசாங்கங்களின் சட்டம் இயற்றும் அதிகாரத்தில், குறிப்பாக பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  

சட்டம் இயற்றும் அதிகாரம் ஒருபுறமிருக்க, இன்னொரு திடீர்த் திருப்பமும் இந்தச் சல்லிக்கட்டு விவகாரத்தில் ஏற்பட்டிருக்கிறது. சல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, மிருக வதைத் தடுப்புச் சட்டம் 1960 க்கு ஜனவரி 2016 இல் ஓர் அறிவிக்கையை வெளியிட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம். அதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கு, விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

அதனால்தான், “சல்லிக்கட்டு நடத்த மத்திய அரசாங்கம் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று தமிழக அரசாங்கமும் எதிர்கட்சிகளும் கோரிக்கை வைத்த போது, மத்திய அரசாங்கத்தின் நிலையான கருத்து, “வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்த நேரத்தில் நாங்கள் ஏதும் செய்ய முடியாது. மாநில அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் ஆதரவு தரும்” என்பதாக இருந்தது. 

ஆனால் இப்போது வழக்கு, தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில் இரு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்தது. முதல் நடவடிக்கை, தமிழக அரசாங்கத்தின் புதிய திருத்தச் சட்டத்துக்குத் தடை ஏற்படுத்தாத வகையில் எடுக்கப்பட்டது.

“மாநில அரசாங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, தீர்ப்புத் திகதியை ஒரு வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும்” என்று மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. 

அடுத்த நடவடிக்கை, தமிழக அரசாங்கம் புதிய சட்டத் திருத்தம் நிறைவேற்றிய பிறகு, உச்சநீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசாங்கம் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் “சல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசாங்கத்தின் 2016 அறிவிக்கையை வாபஸ் பெறுகிறோம்” என்று கூறியிருக்கிறது. 

இந்த மனு, தமிழக அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனு. இவை எல்லாம் 31 ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

மத்திய அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் மத்திய அரசாங்கத்தின் 1960 ஆம் வருட மிருக வதைத் தடுப்புச் சட்டம் மிருங்களை வதை செய்வதை தடுக்கும் சட்டமாகவே இருக்கும். அப்படியென்றால், அது விலங்குகளின் நலனில் அக்கறையுள்ள சட்டமாகவே நிலைத்து நிற்கும்.  

அப்படியொரு சூழ்நிலையில் காளைகளை வைத்து சல்லிக்கட்டு விடலாம் என்று அனுமதிக்கும் தமிழக அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தம் “தனித்து விடப்படும்”. 

இந்தச் சட்டம், விலங்குகள் நலனுக்கு எதிரான சட்டம் என்று அமைந்து விடும். மத்திய அரசாங்கத்தின் “2016 அறிவிக்கை வாபஸ்” மனு தமிழக அரசாங்கத்தின் புதிய சட்டத்திருத்தத்துக்கு உதவப் போகிறதா, அல்லது உபத்திரவம் கொடுக்கப் போகிறதா என்பது 31 ஆம் திகதிக்குப் பிறகு தெரிய வரும்.  

ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பொதுப்பட்டியலில் உள்ள விடயத்தில் இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம், வழக்குத் தீர்ப்புக்கு தள்ளிவைக்கப்பட்ட பிறகு, அந்த வழக்கின் அடிப்படையாக உள்ள “2016 அறிவிக்கையை” வாபஸ் பெறும் அதிகாரம், ஒரே விவகாரத்தில் மத்திய அரசாங்கம் விலங்குகள் நலனுக்கு சட்டம் வைத்துக் கொள்வதும், மாநில அரசாங்கம் விலங்குகள் நலனுக்கு விரோதமாக சட்டம் வைத்துக் கொள்வதும் சரியா என்ற விவகாரம், இப்படிப் பல விடயங்கள் தமிழக அரசாங்கத்தின் சல்லிக்கட்டு புதிய திருத்தச் சட்டத்தில் “மறைவு ஸ்தானத்தில்” உள்ளன. 

இதற்கு எல்லாம் உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்புதான் வருகின்ற வருடங்களில் தமிழகத்தில் சல்லிக்கட்டு தங்குதடையின்றி நடைபெறுமா என்பது தெளிவாகும்.

ஆனால் இன்றைய திகதியில் அமைதிப் போராட்டம் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மத்திய அரசாங்கத்தின் சட்டம் போன்றவற்றை திருத்த முயன்றுள்ள மாநில சட்டமன்றத்தின் அதிகாரம் மீண்டும் இந்திய உச்சநீதிமன்றத்தில் போய் நிற்கிறது. தமிழக சட்டமன்றத்தின் “புதிய சட்ட திருத்தம்” சல்லிக்கட்டுக்கு வரப்பிரசாதமா என்பதை இனி வரப் போகும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழர்களுக்கு அறிவிக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .