Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது.
இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.
அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார்.
அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில்
பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
ஜனாதிபதியின் இந்த உரையானது மக்கள் மத்தியில், குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கவலையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நோக்கம், திசைமாறுதல் என்பது சாதாரணமானதுதான், ஆனால், நம்பிக்கை கொண்டவர்களின் நோக்கம் திசை மாறுவது கவலையானது. இலங்கையில் தமிழ் மக்களின் நோக்கம் ஒரு இடது சாரிச் சிந்தனையுள்ள அரசாங்கமானது நீண்டகாலமாக இருந்து வருகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வினை வழங்கும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால், நடப்பதென்னவோ பழையதைப் போலவே இருப்பது அவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.ஒவ்வொரு வருடத்திலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகின்ற வேளைகளில், தமிழ் மக்கள் தம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவே நினைத்துக் கொள்வர்.
ஆனால், அது நிறைவுக்கு வருகையில் ஏமாற்றமாகிப்போவதே வழமையானது. இம்முறை நடைபெறுகின்ற 60ஆவது கூட்டத் தொடரிலும்கூட பொறுப்புக்கூறலின் அவசியமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசரமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஏதுமற்று நிறைவுக்கு வரும்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்துமாறும், உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தாமதமும் இன்றி நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும்
தமிழர் தரப்பு, சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கோரி வருகிறது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், ரோம் சாசனத்தில் கையொப்பமிடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர இனப்படுகொலை, இனப் படுகொலைக்கான நோக்கம் ஆகியவற்றினைக் குறிக்கும் ஆதாரங்களைக் குறிப்பாக சேகரிக்க வேண்டும்.
இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தில் இந்த ஆதார சேகரிப்பு முக்கியமான விடயமாகும். இந்தச் செயற்றிட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
என்று பல கடிதங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அனுப்பப்பட்டன.இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றன. இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு மனித உரிமைப் போரவையிலும் கொண்டுவரப்படும் பிரேரணைகளும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் காணாமல் போகின்றன. இம்முறையிலும் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்ட 30-1 பிரேரணைக்கு அன்றைய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவின் முன்மொழிவுடன் இலங்கை இணை அனுசரணை வழங்கியது. அதிலிருந்து தொடங்கப்பட்ட பொறுப்புக்கூறல் விவகாரம் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை.
ஆனால், காலம் கடத்தல் மாத்திரம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாட்டின் அவசியத்தை தமிழர் தரப்பு வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஆனால் நடைபெறுவது ஒன்றுமில்லை என்றே ஆகிப்போகின்றது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
இந்தப் போக்கானது முன்னைய அரசாங்கங்களின் செயற்பாட்டைப் போன்றதாகவே இருக்கிறது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொள்ளும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.
இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்த போதும் இன்னமும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விவகாரத்திலோ உரிய அக்கறை காண்பிக்கப்படவில்லை. இருந்தாலும் பரவாயில்லை, என்றிருந்த தமிழ் மக்கள் ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் சபை உரையுடன் முழுவதுமாக ஏமாந்திருப்பர் என்றே கூறலாம்.
ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்குப் பயணமாவதற்கு முன்னர் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
அதன் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை அந்த திட்டத்திற்கெதிராகப் போராடியவர்கள் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இது நாட்டில் மக்களாட்சி உறுதிப்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆயுதப்படைகளைக் கொண்டு அடக்க முனைவது “இவர்களும் அவர்கள்” தானா என்று கேட்கத் தோன்றுகின்றது என்கிற விமர்சனத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த நடவடிக்கை வன்மையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. காற்றாலை செயற்திட்டத்திற்கெதிராக மக்கள் மேற்கொண்ட ஜனநாயக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்கள், மத குருக்கள் உட்பட சகலரையும் பொலிஸார் அடித்துக் கலைத்தது காற்றாலை இயந்திர பாகங்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததிருக்கின்றனர்.
மக்களின் உணர்வுகளை காவல்துறையினரின் ‘பூட்ஸ்’களால் நசுக்கியிருக்கின்றமையானது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இல்லாமல் செய்கிறோம், பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிகளைக் குறைக்கிறோம், நாட்டில் ஊழலை ஒழிக்கிறோம் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துகிறோம்.
நிலைபேறான அபிவிருத்திகளுக்கு முயற்சிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில், மக்களின் உரிமைகளை மறந்து செயற்படுவதானது ஒருபோதும் நற்போக்காக பார்க்கப்படாது.கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது தொடர்பில் பல்வேறு தரப்புகளாலும் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மக்களால் தங்களது நலன் சார்ந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு வழங்கப்படும் பதில்கள் அவர்களைத் திருப்திப்படுத்துவதாக இல்லை என்ற உணர்வு மேலோங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கேற்ற வகையிலேயே அரசாங்கத்தின் அடுத்த அடுத்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
இந்த இடத்தில்தான், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் நன்கு அறிந்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
முன்னைய அரசாங்கங்களைப் போன்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதான அபிப்பிராயத்துக்குள் அடக்கப்படும் நிலைமை நிலைப்பாடாக மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.
இந்தத் தொடக்கம் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினை அதிகரிப்பதோடு, எதிர்மறையான சிந்தனைகளையும் உருவாக்கும் எனலாம். கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகள் மீது வெறுப்புக்கொண்டிருந்த மக்கள், தேசிய மக்கள் சக்தியைக் கடந்த தேர்தல்களில் ஒரு மாற்றுச் சக்தியாகவே கருதினர்.
ஜனாதிபதித் தேர்தலைவிட, பாராளுமன்றத் தேர்தலில் பேராதரவு கிடைத்திருந்தது. இந்தப் பேராதரவைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது ஆதிக்கப் பிரயோகத்துக்கான ஆணையாகக் கொள்வது தவறாகும்.
மொத்தத்தில், தங்களது நோக்கம் வேறாக இருந்தாலும் மக்களது நோக்கத்தினை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களது நோக்கத்தின் பாதையில் ஆட்சியின் நகர்த்தலை மேற்கொள்வதே சிறப்பானது என்பதனையே அவர்கள் அடையாளம்
கண்டுகொள்ள வேண்டும். இருந்தாலும், நோக்கம் திசைமாறாமலிருக்கட்டும்
என்று எண்ணிக்கொள்வோம.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago