Thipaan / 2016 ஜூன் 02 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
உலக புகையிலை எதிர்ப்பு தினம், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வழக்கமான எல்லா சர்வதேச தினங்களைப் போலவும், அத்தினம் தொடர்பான கவனம், அதிகளவில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளும் அத்துறை சார்ந்தவர்களும், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல், தமிழ்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலின்போது, மது ஒழிப்புத் தொடர்பாக அதிக கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து மதுவை ஒழிப்பதாக அல்லது படிப்படியாக இல்லாது செய்வதாக, அத்தேர்தலில் போட்டியிட்டோரில் ஏறத்தாழ அனைவருமே உறுதியளித்திருந்தனர். அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் என்பன ஒருபுறமிருக்க, மக்களின் முக்கிய கவனங்களில் ஒன்றாக, மது ஒழிப்புக் காணப்பட்டது என்றால், அதில் மிகையிருக்காது.
மதுபானமும் புகைத்தலும், மனித உடலுக்குத் தீங்கானவை என்பது, விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பழக்கத்துக்கு அடிமையானால், இவற்றின் தீமைகள், சொல்லி மாளா. இந்நிலையில் தான், இவற்றினைத் தடை செய்தலென்பது சாத்தியமானதா அல்லது பொருத்தமானதா என்பதை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், புகையிலை எதிர்ப்பு தினத்தில், அதற்கான எதிர்ப்பைப் பொருத்தமான முறையில் வெளிப்படுத்துதலென்பது அவசியமானது.
அத்தோடு, 2020ஆம் ஆண்டுடன், நாட்டில் புகையிலைப் பயன்பாட்டைத் தடை செய்யவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்தையும், இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுதல் அவசியமானது.
முதலில், புகையிலை சம்பந்தமாகவும் மதுபானம் சம்பந்தமாகவும் இந்தக் கலந்துரையாடல் ஏன் அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம்.
புகையிலையைப் பயன்படுத்துபவர்களில் அரைவாசியானோர், அதன் பாவனையால் ஏற்படும் விளைவுகள் காரணமாக உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும், சுமார் 6 மில்லியன் பேர், புகைத்தல் காரணமாக உயிரிழக்கின்றனர். இதில் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர், புகைத்தல் காரணமாக நேரடியாக உயிரிழக்க, 600,000க்கும் மேற்பட்டோர், புகைக்காதவர்களாக இருந்த போதிலும், ஏனையோரின் புகைகளால் உயிரிழக்கின்றனர். அத்தோடு, புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளோரில் பெரும்பான்மையானோர், வறுமையான அல்லது மத்தியதர வர்க்கத்தினராக இருப்பதால், புகைப்பிடித்தலில் அவர்களது அதீத ஆர்வம் காரணமாக, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மறுபுறத்தில், மதுபானம் காரணமாக ஆண்டுதோறும் ஏறத்தாழ 3.3 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலதிகமாக, 139 மில்லியன் பேரின் ஆயுட்காலம், மதுபானப் பாவனை காரணமாக நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, புகைத்தலைப் போலவே, பொருளாதார ரீதியாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதோடு, உறவுகளில் குழப்பங்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தது. மதுபானம் அருந்துதல் எனும்போது, அளவுக்கதிகமான அல்லது தொடர்ச்சியான மதுபானம் அருந்துதலையே குறிக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை, மிக அளவான மதுபானம் அருந்துதலால், எந்தவிதத் தீமையும் இருப்பதாக அறிவிக்கப்படவில்லை, மாறாக நன்மைகள் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், புகைத்தலைப் போலவே, மதுப் பழக்கமும் அடிமைப்படுத்தக்கூடியது. எப்போதிருந்துவிட்டுக் குடிப்போம் என ஆரம்பிப்பவர்கள் தான், அளவுக்கதிகமாக மது அருந்துபவர்களாக மாறுகிறார்கள்.
இவ்வளவு தீமையான இந்தப் புகைப்பிடித்தல் பழக்கத்தையும் அளவுக்கதிகமான மது அருந்தும் பழக்கத்தையும், இன்னமும் எதற்காகப் பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றுகிறார்கள் என்ற கேள்விக்கான பதில், இலகுவானது அல்லது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்தது தான். சுருக்கமாகச் சொல்வதனால், சமூகத்தில் அந்தஸ்தை வெளிப்படுத்துபவையாக அவை மாறியுள்ளன. அதியுச்ச விளம்பரங்கள், கடுமையான சட்டங்கள் இல்லாமைஃஅமுல்படுத்தப்படாமை போன்றவை முக்கியமானவை.
இந்நிலையில் தான், இவற்றை முழுமையாகத் தடை செய்வது என்ற கருத்து எழுந்திருக்கிறது.
உயிரைக் கொல்கின்றன என்ற அடிப்படையில், இவற்றின் தடைக்கான உறுதியான அடிப்படைகள்ஃகாரணங்கள் உள்ளன. தற்கொலை எப்படி சட்டரீதியற்றதோ, அதேபோல், உயிரைத் தாமதித்துக் கொல்லும் புகையும் மதுவும் ஏன் சட்டரீதியாக்கப்படக்கூடாது என்ற கேள்வி, ஒரு வகையில் நியாயமானதே.
ஆனால் மறுபுறத்தில், அதிக எடை (மீயுயர் எடை) காரணமாக, ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, 300,000ஐத் தாண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. அத்தோடு, வளர்ந்தோரில் 1.9 பில்லியன் கணக்கானோர் (39 சதவீதமானோர்), அதிக எடை கொண்டோராக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பாரிய சுகாதார நெருக்கடிக்கு, துரித உணவுகள், பாரிய பங்கை வகிக்கின்றன. அவ்வாறு பார்ப்போமானால், துரித உணவுகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டுமா என்ற வினா எழுகிறது.
வளர்ந்தவர்கள், தங்களுக்குத் (ஓரளவுக்கு) தீங்கு விளைவிக்கின்ற செயற்பாடுகள், மற்றையவர்களுக்குத் தீங்காக அமையாதவரை, அவற்றை அனுமதிப்பது தான், உண்மையான சுதந்திரமாகும். அந்த வகையில் தான், புகைப்பிடிப்பதற்கும் மது அருந்துவதற்கும் துரித உணவுகளை உண்பதற்கும் சூதாடுவதற்கும் உரிமை உள்ளது. அந்த உரிமைகளைப் பறிப்பதென்பது, நியாயமற்றது.
ஆனால், மேற்கூறப்பட்ட விடயங்களால், ஏனையோர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது அவசியமானது. அதனால் தான், பொது இடங்களில் புகைப்பிடிப்பதுஃமது அருந்துவது, பாடசாலைகளுக்கருகில் மதுபானங்களைஃபுகைப்பொருட்களை விற்பது தடைக்குள்ளாக்கப்பட்டுள்ளன, சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதி வழங்குவது இறுக்கமாகக் காணப்படுகிறது என, விதிகளை/சட்டங்களைச் சொல்ல முடியும்.
எனினும், இவற்றுக்கு மத்தியிலும் கூட, மதுபானப் பாவனையும் புகைப்பிடித்தலும் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது அல்லது பாரியளவில் குறைவடைந்திருக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணமாக, சட்டங்களை அமுல்படுத்தாமையே காரணமாகும். குறிப்பாக, பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற சட்டம், முழுமையாக அமுல்படுத்தப்படுவதில்லை. பஸ் தரிப்பிடங்களிலும் வீதிகளிலும் ஏனைய பொது இடங்களிலும், புகைப்பிடித்துக் கொண்டு திரியும் 'ரோமியோ'க்களை, இன்னமும் காண்கிறோம். இவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் - ஆகக்குறைந்தது எச்சரிக்கையாவது - ஒழுங்காக எடுக்கப்படாமை, ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தவிர, இந்தியாவிலும் உலகின் இன்னுஞ்சில பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும் இன்னொரு நடவடிக்கையைப் பின்பற்றுவதைப் பற்றியும் ஆராய்வது சிறப்பானது. புகைப்பொருட்களை, அவற்றின் பொதியாகவே (பக்கெட்) விற்க முடியுமென்பது தான் அது. இதன்மூலம், ஒரு சிகரெட்/பீடி/சுருட்டு போன்றவற்றை, கடைகளிலிருந்து வாங்க முடியாது. இதன்மூலம், புகைப்பிடித்தலை ஆரம்பிக்கும் சிறு வயதினர், அவற்றை வாங்குவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். பெரும்பாலானோர், தங்களது பதின்ம வயதுகளிலேயே, புகைப்பிடித்தலை ஆரம்பிக்கின்றனர். இலங்கை போன்ற நாடுகளில், பதின்ம வயதில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைவானது. எனவே, பெரியளவு தொகைப் பணத்தைச் செலுத்தி, பொதியொன்றைக் கொள்வனவு செய்வது, சாத்தியப்படாது. ஆகவே, புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது இல்லாமற்போகும், இல்லாதுவிடின், புகைப்பிடிப்பதை ஆரம்பித்து ஆரம்ப நிலையில் இருக்கும்போது, மேலும் அதிகமாகப் புகைத்து, அதற்கு அடிமையாகுவதைத் தடுக்கக்கூடியதாக இருக்கும்.
நண்பர்களாக இணைந்து பொதியொன்றை வாங்கலாம் அல்லது அதற்குரிய பணத்தைச் சேர்ப்பதற்காக அவர்கள் திருட்டில் ஈடுபடலாம் போன்ற சாத்தியப்பாடுகள் இருந்தாலும், முன்னரை விடக் குறைவான நிலையிலேயே பதின்ம வயதில் புகைக்கும் பழக்கம் காணப்படுமென்பது, மேற்குறிப்பிட்ட நடைமுறையை அறிமுகப்படுத்திய பிரதேசங்களிலிருந்து கிடைத்த அனுபவமாகும்.
அடுத்ததாக, இந்த ஆண்டுக்கான உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாக, 'வெறுமையான பொதியிடல்' காணப்படும் நிலையில், அதை நடைமுறைப்படுத்தவும் இலங்கை முயல வேண்டும். வெறுமையான பொதியிடல் என்பது, சிகரெட் பொதியில், நிறுவனத்தின் இலச்சினைகளோ அல்லது கவர்ச்சிகரமான வாக்கியங்களோ அல்லது புகைப்படங்களோ இடம்பெறாது. மாறாக, புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள், புகைப்படங்களோடு, அதைத் தயாரிக்கும் நிறுவனத்தினதும் அந்த உற்பத்தியினதும் பெயர் மாத்திரம், ஓரளவு சிறியதாகக் குறிப்பிடப்படும். இந்த நடவடிக்கையை அவுஸ்திரேலியா முதலில் நடைமுறைப்படுத்தியதோடு, பிரான்ஸ், பிரித்தானியா, வட அயர்லாந்து போன்ற நாடுகள், கடந்த மே தொடக்கம், இதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன. இதை ஆரம்பித்தமை முதல், அவுஸ்திரேலியாவின் புகைப்பிடித்தல், குறைவடைந்து வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் என்பதன் கவர்ச்சி, இவ்வாறான பொதியிடல் மூலம் இல்லாமற்செய்யப்படுகிறது என்பதோடு, புதியவர்கள் கவரப்படுவதும் குறைவதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், வழமையான நடவடிக்கைகளான, வரி அதிகரிப்பு, இலகுவான வியாபாரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், புகைப்பிடித்தலையும் மதுப்பாவனையையும் கட்டுப்படுத்த முடியும்.
வெறுமனே அரசியல் இலாபங்களுக்காக, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் மாத்திரம், 'தடை செய்கிறோம்' என்று கூச்சலிடுவதை விட, புகையிலையையும் மதுபானத்தையும் ஒழிப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை, இன்றிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அந்தப் பொறுப்பு, அரசாங்கங்களுக்கு மாத்திரமன்றி, சிவில் அமைப்புகளுக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பது தான், முக்கியமானது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago