2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பொதுச் சிவில் சட்டமும் உத்தர பிரதேச தேர்தலும்

Thipaan   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலத் தேர்தல், இந்திய அரசியலில் புதியதொரு மாற்றத்துக்கான விதை போட்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்தான் தேர்தல் என்றாலும், இந்தியாவின் பெரிய மாநிலத் தேர்தல் என்பதால் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இம்மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கிடைக்கப் போகும் வெற்றி, ராஜ்ய சபையில் அதற்கு பலத்தைக் கொடுக்கும். அது மட்டுமின்றி, உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்று விட்டால், அடுத்த 2019 நாடாளுமன்ற தேர்தல் களமும் பா.ஜ.கவுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற இமேஜை வெகு எளிதாக ஏற்படுத்தி விட முடியும் என்று பா.ஜ.க மேல் மட்டத் தலைவர்கள் நம்புகின்றனர். அதனால் உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து இப்போது பா.ஜ.கவின் தலைவர்களும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் தங்கள் வியூகத்தைத் தொடங்கி விட்டார்கள்.

உத்தர பிரதேசத்தின் 'ராமர் கோயில்', கடந்த காலத் தேர்தல்களில், பா.ஜ.கவுக்கு வெற்றிக்கு வித்திடும் பிரசார முழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே உத்தர பிரதேசத்தில் 'வளர்ச்சி' என்ற முழக்கத்தை வைத்து மோடியை வெற்றி பெற வைத்தது. அதாவது, பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.கவுக்கு அதிக எம்.பிக்களைக் கொடுத்த மாநிலம் என்ற பெயரை உத்தர பிரதேசம் பெற்றுள்ளது. 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்கு வங்கி, அதாவது 'வளர்ச்சி முழக்கத்தை' முன் வைத்து கிடைத்த வாக்கு வங்கி 42.63 சதவீதம். அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் இரு முறை மத்தியில் ஆட்சி செய்த கட்சிக்குக் கிடைத்த வாக்கு வங்கி 7.53 சதவீதம். வெற்றி பெற்ற எம்.பிக்கள் வெறும் இரண்டே தொகுதிதான். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் காங்கிரஸை தலை தூக்க விடக்கூடாது என்பதுதான் இன்றைக்கு பா.ஜ.கவின் முக்கிய வியூகமாக இருக்கிறது.

அதன் முதற்கட்டமாக, பா.ஜ.கவின் தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அலகாபாத் நகரில் கூடியது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தாற் போல் பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் இப்போது உத்தர பிரதேசத்தில் ஆங்காங்கே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 80 சட்டமன்ற தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள். இதை மனதில் வைத்து, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வித் தொகையை சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்துக்கு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம். இது தவிர அரசியல் ரீதியாக டொக்டர் சுப்பிரமணியன் சுவாமி, 'சோனியா ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீதுள்ள நேஷனல் ஹெரால் வழக்கிலும்' 'ராமர் கோயில் பிரச்சினையிலும்' தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் இனி அதிகமான புதிய பதிவுகள் சில நாட்களுக்கு இருக்காது என்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு இருக்கும் இமேஜை மேலும் சேதாரப்படுத்தி, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட வேண்டும் என்பதன் வியூகமாகவே இது தெரிகிறது. கடந்த 2012 சட்டமன்ற தேர்தலில்  இங்கு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த 11 சதவீத வாக்குகள் கூடஇந்த முறை கிடைத்து விடக்கூடாது என்பதை நோக்கி பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் நஷ்டத்தில்தான் பா.ஜ.க உத்தர பிரதேசத்தில் இலாபம் காண முடியும்.

குறிப்பாக, சுப்பிரமணியன் சுவாமிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் ரகுராம் ராஜனுக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்தது. அதன் விளைவாகவே ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இரண்டாவது முறை நீடிக்கப் போவதில்லை என்றார்.  அது, பா.ஜ.க அரசாங்கத்துக்கு சற்று இமேஜ் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. ரகுராம் ராஜன் விவகாரம் அடங்குவதற்குள், இந்திய நிதி ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்ரமணியத்துக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினார் சுவாமி. ரகுராம் ராஜன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான போராட்டத்தில் அமைதி காத்த பிரதமர் நரேந்திரமோடி, அரவிந்த் சுப்பிரமணியன் விவகாரத்தை சுவாமி கையிலெடுத்தவுடன், 'ரகுராம் ராஜனின் தேசபக்தியை குறைத்து மதிப்பிட முடியாது' என்று பிரபல ஆங்கில சேனல் 'டைம்ஸ் நௌவ்' க்கு பேட்டி கொடுத்தார். சுவாமியின் குற்றச்சாட்டுகளையும் இலைமறை காய் மறைவாகச் சாடினார். பிரதமரின் இந்த இக்கட்டான பதிலடிக்குப் பின்னர், சு.சுவாமியின் கவனம் உத்தர பிரதேச தேர்தல் பக்கமாக திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமி ஒரு புறம் இப்படி 'உத்தர பிரதேச அரசியல்' செய்து கொண்டிருக்க, மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கௌடாவும் களத்தில் இறங்கியிருக்கிறார். 'பொதுச் சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு' இந்திய சட்ட ஆணையத்துக்கு அறிவுரை செய்திருக்கிறார். ராமர் கோயிலுக்குப் பதிலாக பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ள புதிய பிரசார முழக்கம் இந்த பொதுச் சிவில் சட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதே இஸ்லாமிய தலைவர்களும், மற்ற அரசியல் கட்சிகளும் பா.ஜ.க அரசாங்கத்தின் இந்த 'பொதுச் சிவில் சட்டம்' தொடர்பான ஆர்வத்தைக் குறை கூறியிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது உடனே நடக்கக்கூடியதில்லை என்றாலும், இது பற்றிய ஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க காட்டும் ஆர்வம், உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 'வாக்கு வங்கி குவிப்புக்கு' உதவலாம் என்று அக்கட்சி கருதுகிறது. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, விவகாரத்துக்குரிய மூன்று முழக்கங்களை 20 வருடத்துக்கு ஒத்தி வைக்கிறோம் என்று அறிவித்தார். அந்த மூன்று முழக்கங்கள் ராமர் கோயில், பொதுச் சிவில் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து இரத்து போன்றவைதான். ஆனால், இப்போது பா.ஜ.க அரசாங்கம், உத்தர பிரதேச மாநில அரசியலை மனதில் வைத்து 'பொதுச் சிவில் சட்டத்தை' கையில் எடுக்கிறது.

உத்தர பிரதேசத்தில் இப்போதுள்ள சமாஜ்வாடி கட்சியின் அரசு, மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நிற்கிறது. அக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கும் அகிலேஷ் யாதவ், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. உத்தர பிரதேசத்தில் சட்டம் அனைத்து பிரிவினருக்கும் சமமாக இல்லை என்றது போன்றதொரு தோற்றம் உருவாகியிருக்கிறது. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே பா.ஜ.க 'பொதுச் சிவில் சட்டம்' என்ற கோரிக்கையை இந்த நேரத்தில் உயிரூட்டப் பார்க்கிறது என்றே தேர்தல் அரசியலை உற்று நோக்குவோர் கருத்தாக இருக்கிறது. இதன் மூலம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த 42 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலே, உத்தர பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்து விட முடியும் என்று அக்கட்சி கணக்குப் போடுகிறது.

ஆனால் 42 சதவீதத்தில் உள்ள பா.ஜ.கவை எதிர்கொள்ள சமாஜ்வாடிக் கட்சி, காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பீஹார் மாநிலத்தில் அமைத்தது போல் 'மெகா கூட்டணி' அமைக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த மூன்று கட்சிகளும் ஓரணியில் வந்தால் உத்தர பிரதேசத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்படியே 50 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆனால் 'எலியும்- பூனையுமாக' இருக்கும் பகுஜன் சமாஜ்வாடிக் கட்சியும், சமாஜ் வாடிக் கட்சியும் ஓரணிக்கு வராது. அதே போல் இந்த இரு கட்சிகளுமே தோல்வி முகத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி ஒரு முறைக்கு

நூறு முறை யோசிக்க வேண்டிய தருணத்தில் உள்ளன. ஆகவே உத்தர பிரதேசத்தில் 'மெகா கூட்டணி' வாய்ப்பும் பா.ஜ.கவுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை.

இந்தச் சூழலில் 'பொதுச் சிவில் சட்டம்' போன்ற இந்துத்துவா கொள்கையை முன் வைத்து, எதிர்கட்சிகளின் ஒற்றுமையில்லாத சூழலை சாதகமாக்கி, உத்தர பிரதேசத் தேர்தலை வென்று விட வேண்டும் என்ற வியூகத்தில் வெற்றிகரமாக இதுவரை பா.ஜ.க பயணித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடிக்கு, கடந்த முறை உத்தர பிரதேசத்தில் கிடைத்த 42 சதவீத வாக்கு வங்கி, சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்குக் கிடைக்குமா என்பதுதான் இப்போது எஞ்சியிருக்கின்ற மிகப்பெரிய கேள்வி. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் தலைமைக்கு வாக்களித்தவர்கள் இதுவரை நடைபெற்றுள்ள சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கவில்லை. இந்த சவாலை பா.ஜ.க எப்படி சமாளிக்கப் போகிறது என்பதற்கு இன்னும் செயற்றிட்டம் இல்லை. ஒரு வேளை 'பொதுச் சிவில் சட்டம்' அந்த வாக்கு வங்கியைக் கவருவதற்கான யுக்தி என்று பா.ஜ.க நம்பினால், அது பிழையாகப் போய்விடக்கூடிய சாத்தியக்கூறுகளே இப்போதைக்கு அதிகம் இருக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .