Thipaan / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
சிங்களத் தீவு என்று பாரதி கூறிய, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் மீது, மீண்டும் மீண்டும் பல திருத்தங்களை கொண்டு வந்த காலங்கள் முடிவுக்கு வந்து, இப்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
அரசியலமைப்பில், தொடர்ச்சியாக திருத்தங்களை மேற்கொண்டு, நாட்டை முன்கொண்டு செல்வதைக் காட்டிலும், எல்லா எதிர்பார்ப்புக்களையும் திருப்திப்படுத்தும் புத்தம்புதிய ஓர் அரசியலைப்பை உருவாக்குவது நல்லதென கருதியே, நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான முன்முயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. மாற்றத்துக்குப் பின்னரான மாற்றங்களில் மிக முக்கியமான ஒரு மாற்றமாக புதிய அரசியலமைப்பு அமையவுள்ளது.
இந்த அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சியாளர்கள் போன்று மக்களை புறக்கணித்து விட்டு, எந்தத் தீர்மானத்தையும் தம்முடைய தற்றுணிபின் பேரில் நடைமுறைப்படுத்துவது ஸ்திரமான ஆட்சி ஒன்றின் இலட்சணங்கள் அல்ல என்பதை தற்போதைய அரசாங்கம் அனுபவ ரீதியாக விளங்கிக் கொண்டுள்ளது என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.
அந்த வகையில், இந்த உத்தேச அரசியலமைப்பு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் முன்னதாகவே அறிவித்திருந்தது. அதன்படியே தற்போது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்கம் தன்னுடைய பணியை ஒப்பீட்டளவில் சிறப்பான முறையில் மேற்கொள்ள முன்வந்திருக்கின்றது. 'அதிகாரம் கைக்கு வந்து விட்டதுதானே, இனிமேல் சில வருடங்களுக்கு மக்களின் விருப்பு, வெறுப்புகள் குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை' என்ற தலைக்கனத்தில் அரசாங்கம் செயற்படவில்லை. மாறாக, அரசாங்கம் உத்தேசித்திருக்கும் புதிய அரசியலமைப்பை பற்றி மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.
எப்படியான அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்வதற்கும் அரசாங்கம் தாயராக உள்ளது.
எனவே, அரசாங்கம், தனது பக்கத்தில் சரியாக- பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கின்றது. இது விடயத்தில் நாட்டில் வாழும் மக்களும் தமது பொறுப்பை மிகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அரசியலமைப்பு என்பது அரசாங்கத்துக்கு உரிய ஒன்றல்ல. அது இந்த நாட்டு மக்களை ஆளுவதற்கான சட்டவலுச் சட்டகமாகும். இன்று, இந்த அரசாங்கம் பதவி வகிக்கலாம். இன்னும் நான்கைந்து வருடங்களில் இன்னுமொன்று ஆட்சிபீடம் ஏறலாம்.
ஆனால், புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தால் அது மிகக் கிட்டிய காலத்துக்குள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகும் சாத்தியம் கிடையாது. அதைவிடுத்து, இன்னும் பல தசாப்தங்கள் இது நாட்டில் அமுலில் இருக்கப் போகின்றது. ஆதலால், இது நிகழ்கால சமூதாயமாக திகழும் நமக்குரிய அரசியலமைப்பு மட்டுமன்றி, இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு இந்த மண்ணில் பிறக்கப் போகும் நமது எதிர்கால சந்ததி மீது ஏதோ ஒருவகையில் தாக்கம் செலுத்தப்போகும் அரசியலமைப்பு என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு, தமிழர்களும் முஸ்லிம்களும் தம்முடைய கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் நடவடிக்கை முதற்கட்டமாக கொழும்பில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
கொம்பனி வீதி, விசும்பாய கட்டடத் தொகுதியில் இம்மாதம் 22ஆம் திகதி வரையும் இது இடம்பெறும். காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரையும் பொது மக்கள் தமது கருத்துக்களை பதிவுசெய்ய முடியும். இதற்கு புறம்பாக, தொலைபேசி (0112437676), தொலைநகல் (0112328780;) மற்றும் மின்னஞ்சல் (constitutionalreforms@gmail.com) ஊடாகவும் தம்முடைய கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும் என்று அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான குழு அறிவித்துள்ளது. தபாலில் கருத்துக்களை அனுப்ப விரும்புவோர் - தலைவர், அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான குழு, ஸ்டேபிள் வீதி, கொழும்பு- 02 என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.
இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த மக்களுக்;கும் பொதுவான பிரச்சினைகள், அபிலாஷைகள் என்று சில விடயங்கள் இருக்கின்றன் யதார்த்தமாக நோக்கினால், தமிழர்களின் பிரச்சினைகளும் முஸ்லிம்களின் பிரச்சினைகளும் மாத்திமன்றி பெரும்பான்மை சிங்களவர்களின் எதிர்பார்ப்புக்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருக்கின்றன.
இன்னும் ஆழமாக பார்த்தால், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்களின் அன்றாட பிரச்சினைகளும், அவ்விரு மாகாணங்களுக்கும் வெளியே வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளும் கூட வேறுபட்டதாகவே இருக்கக் காண்கின்றோம்.
குறிப்பிட்டுச் சொன்னால், தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை இந்த அரசியலமைப்பு கொண்டு வரவுள்ளது. சமகாலத்தில், முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இது அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் துளிர்விட்டிருக்கின்றது.
இந்த அடிப்படையில் கடந்த சில நாட்களாக உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஈடுபட்டுள்ளன. அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வுத்திட்டமே தமக்கு பொருத்தமானது என இரு அரசியல்கட்சிகளும் கொள்;கையளவில் இணக்கம் கண்டுள்ளன.
தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டம் வழங்கப்படுகின்ற போது முஸ்லிம்களையும் அது திருப்திப்படுத்த வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர். தமிழர்கள் விடயத்தில் சிங்களவர்கள் நடந்து கொண்டது போலன்றி, முஸ்லிம்கள் விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் தமிழர் தரப்பு நடந்து கொள்ள வேண்டியுமிருக்கின்றது.
இவ்வாறான வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு மாற்றம் நாட்டில் ஏற்படப் போகின்றமையால், தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் - அரசியலமைப்பு என்றால் என்ன? உத்தேசிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு எவ்விதமாக அமைய வேண்டும்? என்பன போன்ற அடிப்படை தெளிவுபடுத்தல்களை தாம் சார்ந்த சமூகத்தின் மக்களுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
தேசிய அளவில் அரசாங்கம் மேற்கொள்ளும் கருத்தறியும் நடவடிக்கைக்கு முன்னதாகவே, இன ரீதியான கருத்துச் சேகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது மிகச் சிறப்பான தீர்மானங்களை மேற்கொள்ள உறுதுணையாக அமையும்;. அத்துடன் அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவுக்கு மக்கள் ஆரோக்கியமான, கருத்துக்களை முன்னிலைப்படுத்த வழிவகுக்கும்.
ஆனால், சிறுபான்மைக் கட்சிகள் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இல்லை, பொது மக்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள பெரிதாக பிரயத்தனப்படவும் இல்லை. இவற்றையெல்லாம் சிறுபான்மைக் கட்சிகள் செய்வதற்கு முன்னதாகவே அரசாங்கம் மக்கள் கருத்தறியும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து விட்டது.
என்னவென்றாலும், இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஒவ்வொரு பொது மகனும் உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக உடனடியாக கற்றறிந்து கொள்ள வேண்டும். தம்முடைய கருத்துக்களை எவ்வகையிலேனும், அரசியலமைப்புச் சீர்திருத்தக் குழுவுக்கு சமர்ப்பிக்க பின்னிற்கக் கூடாது. அரசாங்கம் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதனை மிகச் சரியான முறையில் பயன்படுத்துவது சிறுபான்மை சமூகங்களின் அவசிய-அவசர பொறுப்பும் கடமையுமாகும்.
ஒன்றை மட்டும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், இந்த வாய்ப்பை நீங்கள் - அதாவது சிறுபான்மை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு, அதனை பெரும்பான்மை சிங்களவர்கள் உச்சமாக பயன்படுத்துவார்கள் என்றால், சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்ப்புக்கள் இனியும் நிறைவேறாது. அப்போது, ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இலகுவாக தப்பித்துக் கொள்வார்கள்.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025