2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பேய்களுக்கான கொட்டு முழுக்கம்

Thipaan   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக்

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே 'அவல்' கிடைத்திருக்கிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையிலுள்ள இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதன் மூலமாக இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தப் போகின்றார்கள், பௌத்த மதத்துக்கான மரியாதை இழக்கப்படும் நிலை உருவாகப் போகின்றது என பேரினவாதிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வானதொரு நிலையில், புதிய அரசியலமைப்பு என்கிற எண்ணக் கருவின் இறுதி நிலை என்னவாகும் என்கிற கேள்வியொன்று

இங்கு எழுகிறது.

இலங்கையின் அரசியலமைப்புக்கள், அதன் வரலாறுகள், அவற்றின் உள்ளடக்கங்கள் மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட பாரமான விடங்கள் குறித்தெல்லாம் இந்தக் கட்டுரை ஆழ்ந்து அலசப் போவதில்லை. ஆயினும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் எழக்கூடிய பிரச்சினைகள், அவற்றிலுள்ள சாத்தியங்கள் மற்றும் அசாத்தியங்கள் தொடர்பில் சில விடயங்களை பேசுவதற்கான வேண்டிய தேவை இங்கு உள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடுகள்தான் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளும், நாட்டில் அமைதியின்மையும் ஏற்படக் காணமாகும் என்பதை சிங்கள ஆட்சியாளர்களே இப்போது ஒத்துக் கொண்டுள்ளார்கள். அதனால்தான், இப்போதுள்ள அரசியலமைப்பில் காணப்படும் வழுக்களையும், குறைபாடுகளையும் இல்லாமல் செய்து, நாட்டிலுள்ள அனைவருக்கும் பொருத்தமான அரசியலமைப்பொன்றினை உருவாக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிணங்க, புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவதற்கான பிரேரணையொன்றினை கடந்த 09 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் முன்வைத்திருந்தார். இந்தப் பிரேரணையில் முக்கியமாக 03 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல்

விருப்பு வாக்குகளற்ற தேர்தல் முறையையொன்றை உருவாக்குதல்

தேசிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல்

ஆகிவையாகும்.

ஆனால், சிங்களப் பேரினவாதிகளுக்கு இந்தக் கதையெல்லாம் கசப்பானவையாகும். அதனால்தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக, அவர்கள் இப்போதே கச்சை கட்டத் துவங்கியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குதல் என்பது நினைத்தாற்போல் செய்யும் காரியமல்ல. அது, கல்லில் நாருரிப்பதை விடவும் கடினமானதொரு விடயமாகும். பௌத்த பேரினவாதிகளுடன் சமரசம் செய்யாமல், புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குதல் என்பது நடக்கிற காரியமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த சமரசம் இப்போதே ஆரம்பமாகி விட்டதா என்கிற கேள்விகளும் இல்லாமலில்லை. புதிய அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய அந்தஸ்த்து வழங்கப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறத் துவங்கியுள்ளனர். எந்தவொரு மதமும் சிறப்புக் கவனிப்புக்குளாகாமல் இருப்பதுதான், பல்லினங்கள் வாழும் நாடொன்றில் நியாயமானதொரு செயற்பாடாக அமையும்.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின் 09 ஆவது சரத்து பின்வருமாறு கூறுகிறது. 'இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க, 10 ஆம், 14 (01)(உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்'.

மேலுள்ள பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 10 ஆம் சரத்து, 'ஆளொவ்வொருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்' என்று கூறுகிறது.

14 (01)(உ) ஆம் சரத்தானது, 'ஒவ்வொரு பிரஜையும் தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரத்துக்கு உரித்துடையவராவார்' என்று தெரிவிக்கின்றது.

பல மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் வாழுகின்ற நாடொன்றின் அரசியலமைப்பில், குறித்த ஒரு மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதென்பது நியாயமற்றதொரு செயற்பாடாகும். தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும் என, மிகவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையினைக் காரணம் காட்டித்தான், பௌத்த பேரினவாதிகள் மற்றைய மதத்தினையும், அவற்றினைப் பின்பற்றுகின்றவர்களையும் புறமொதுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், பௌத்த மதத்துக்கு அந்தஸ்த்து வழங்குவதாகக் கூறிக்கொண்டு, புதிய அரசியலமைப்பிலும் பௌத்த மதத்தை முன்னுரிமைப்படுத்தும் வகையிலான சரத்துக்கள் புகுத்தப்படுமானால், அடித்தளமே பிழைத்துப் போகும் நிலை ஏற்பட்டு விடும்.

இலங்கைக் குடியரசானது ஒற்றையாட்சி உடைய ஓர் அரசாகும். தற்போதைய அரசியலமைப்பின் இரண்டாவது சரத்து இதனை மிகவும் தெளிவாகக் கூறுகிறது. இந்த நிலையில், புதிய அரசியமைப்பில் 'ஒற்றையாட்சி' என்பது எவ்வாறு கையாளப்படும் என்கிற கேள்விகளும் உள்ளன. அனேகமாக, பிணக்குகள் ஆரம்பிக்கும் முதல் விடயமாக இதுதான் இருக்கும் என்பது பலரின் அனுமானமாகும்.  

'புதிய அரசியலமைப்பானது சமஷ்டி தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும்' என, தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியிருக்கின்றார். கிட்டத்தட்ட தமிழர் தரப்பின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கும்.

இந்த நிலையில், சமஷ்டி என்பதை ஒற்றையாட்சிக்கு எதிரானதொரு விடயமாகவும், நாடு துண்டாடப்படுதல் என்பதற்கு ஒப்பானதாகும் சிங்களப் பேரினவாதம் மிக நீண்ட காலமாகப் பிரசாரம் செய்து வருகிறது. மட்டுமன்றி, கணிசமான பாமர சிங்கள மக்களையும் அவ்வாறு நம்ப வைத்துள்ளது.

ஆக, புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது இந்த இடத்தில் இழுபறி உச்சம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடக் கூடும்.

இதற்கு இப்போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் எண்ணெய் ஊற்றத் துவங்கியுள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாகத்தின் போது, நெகிழ்வுத்தன்மையுடன் அரசு நடந்து கொள்ள வேண்டுமென்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். நெகிழ்வுத்தன்மை என்பது இங்கு விட்டுக்கொடுப்பு என்று அர்த்தமாகிறது. அப்படியென்றால், யாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார் என்கிற கேள்வி இங்கு எழுகிறதல்லவா. மஹிந்த ராஜபக்ஷ போன்ற பேரினவாதச் சிந்தனையுள்ள அரசியல்வாதியொருவர் - சிறுபான்மை மக்களுக்கு விட்டுக்கொடுக்குமாறு கூறுவார் என்று நம்புவது சிறுபிள்ளைத்தனமானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ இத்தோடு விட்டு விடவில்லை. அவர் மேலும் கூறுகையில், 'புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தில், மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது. மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தேவையில்லை' என்கிறார்.

அதாவது, இப்போதுள்ள மாகாணசபை முறைமையும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுமே இனப் பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமானது என்பதை, மஹிந்த ராஜபக்ஷ மிகவும் சூசகமாகச் சொல்லி வைத்துள்ளார்.

ஆக, இவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு கணிசமான காலமும், அர்ப்பணிப்புகளும் தேவையாகும். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளுக்கும் சிங்களப் பேரினவாதிகள் படுகுழிகளைத் தோண்டி வைக்கத்தான் போகின்றனர். அவற்றினை மிகவும் நூதனமாகக் கடந்து சென்று இலக்கினை அடைவதென்பது நெருப்பாற்றினைக் கடப்பதற்கு ஒப்பானதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பில், பௌத்த பேரினவாதிகளுக்கு நாசூக்காக ஊசி ஏற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை, பொதுபலசேனா போன்ற பௌத்த தீவிரவாதிகள், மிகவும் அப்பட்டமாகவே இது குறித்த நச்சுக் ககருத்துக்களை வெளியிடத் துவங்கியுள்ளனர்.

'புதிய அரசியலமைப்புக்கான வரைபினை ஆட்சியாளர்கள் தயாரித்து விட்டார்கள். இதில் பிரிவினைக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. ஒற்றையாட்சி என்கிற அர்த்தத்தினைத் தரும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையாது. அரசியலமைப்பு திருத்த ஆலோசனைக் குழுவில், புலிகளின் ஆதரவு உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர். மேலும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஆதிக்கம் நாட்டை ஆக்கிரமித்து விட்டது' என்று புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நீண்ட குற்றச்சாட்டுக்களை பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

புதிய அரசியலமைப்புக்கு எதிராக, பேரினவாதிகள் எவற்றையெல்லாம்

தூக்கிப் பிடிக்கப் போகின்றனர் என்பதற்கு மேலுள்ள குற்றச்சாட்டுக்கள் மணியடித்துக் காட்டுகின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, வடக்கு - கிழக்கு இணைப்பு என்கின்ற விவகாரம் தொடர்பில், சிறுபான்மை சமூகங்களுக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதற்கான அதிகபட்ச சாத்தியங்கள் உள்ளமையினையும் இங்கு பதிவு செய்தல் அவசியமாகும். 

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் என்பது தமிழர் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்கள் பச்சைக் கொடி காட்டுவார்களா என்கிற கேள்வி இங்கு உள்ளது. வெளிப்படையாகச் சொன்னால், வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஆதரவளிக்க மாட்டார்கள். தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்லுறவினைப் பேணிவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களில்

கணிசமானவர்களும், முஸ்லிம் காங்கிரஸின்

முக்கியஸ்தர்கள் பலரும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாத புதிய அரசியலமைப்பினை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான்.

இப்படியான சூழ்நிலைகள் உருவாகும் போது, பௌத்த பேரினவாதிகளை மட்டுமன்றி, சிறுபான்மை சமூகங்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளையும் ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்கு, புதிய அரசியலமைப்பின் தேவையொன்று உள்ளதாக ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டு, அதை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கூட, சிறுபான்மையினருக்கான உரிமைகளை தங்கத் தட்டில் வைத்துத் தருகின்றதொரு அரசியலமைப்பினை அவர்கள் உருவாக்கித் தந்துவிடப் போவதில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அலறி மாளிகைளில் வைத்து ஊடகங்களுக்கு உரையாற்றியபோது கூறிய விடமொன்று, இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

'புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டைப் பிரிப்பதற்கும், பௌத்த மதத்துக்கான அந்தஸ்த்தினை இல்லாமலாக்குவதற்கும் முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுறது. ஆட்சியாளர்களில் நான் உட்பட அதிகமா னோர் பௌத்தர்கள். நான் ஒரு சிங்களவர். எனக்கு இந்த நாட்டினை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது' என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

'பௌத்தம், சிங்களம்' என்கிற கோடுகளுக்கு அப்பால் ஆட்சியாளர்கள் சென்று, சிறுபான்மையினருக்கு எந்தவொரு உரிமையினையும் அள்ளித் தந்து விடப்போவதில்லை என்பதுதான் கசப்பானாலும் உண்மையாகும்.

ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு ஆட்சியாளர்கள் நாட்டையே கொடுத்து விடப் போவதாக பேரினவாதப் பேய்கள் கூச்சலிடுகின்றன. எந்த விதக் காரண காரியங்களுமில்லாமல், சும்மா ஆடிய பேரினவாதப் பேய்களுக்கு, 'புதிய அரசியலமைப்பு உருவாக்கம்' என்கிற கொட்டு முழக்கங்கள் போதாதா என்ன? இனி கொஞ்சக் காலத்துக்கு பேய்களின் குத்து நடனம்தான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X