Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 29 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெய்வீகன்
பிரித்தானிய தமிழர் பேரவை, கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த 'தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல்' நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானியாவின் முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் 'இலங்கையில் தொடரும் வன்முறைகளும் மீறப்பட்ட வாக்குறுதிகளும்' என்ற தலைப்பில், அங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது தரப்பு ஆதங்கத்தை பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்திருந்தது.
நிகழ்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை வரவேற்றார்கள். கடந்த ஆட்சி போல் அல்லாமல், இலங்கையில் தற்போது மலர்ந்திருக்கும் நல்லாட்சியில் சாந்தியும் சமாதானமும் விரைவில் ஏற்படவேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறினார்கள். அதற்கு தம்மாலான அனைத்து அழுத்தங்களையும் அரசாங்;கத்துக்கு வழங்குவோம் என்றார்கள். பேசி முடித்த பின்னர் மேடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கையெழுத்துப் பதாகையில் தங்கள் ஒப்பங்களையிட்டு தமது ஆதரவை உறுதிசெய்துகொண்டார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தை நோக்கிய இந்த எம்.பிக்களின் வாழ்த்துரைகள் நிறைவடைந்த பின்னர், இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராகக் கலந்துகொண்ட பிரித்தானிய கென்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வெளிவிவகாரங்களுக்கான இராஜாங்க செயலர் ஹியூகோ ஸ்வோயரின் பேச்சு இடம்பெற்றது. அவரது பேச்சு, மிகவும் முக்கியமானதாக சபையோரினால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இலங்கை விவகாரங்களுக்கான பிரத்தானிய அமைச்சராக செயற்படும் இவர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர் உட்பட சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்தித்து யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார். இந்த சுற்றுப்பயணங்களின் பின்னர் இவர் 'இலங்கைவில் தான் எதிர்பாராத பல ஆச்சரியங்களை கண்டதாகவும் அதிசயிக்கத்தக்க பல மாற்றங்களை தரிசித்ததாகவும்' புளகாங்கிதமாக தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த கருத்து, அப்போது தமிழ் மக்களை பொறுத்தவரை, முக்கியமாக புலம்பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரை மிகவும் மோசமானதாக அமைந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் பிரித்தானியாவிலிருந்து சென்ற அமைச்சர் ஒருவர், ஐந்துநாள் சுற்றுப்பயணத்திலேயே இலங்கைவின் நிலைவரம் தொடர்பாக எல்லாமறிந்தவர் போல, இலங்கை அரசாங்கத்தின் பிரசாரகர் போல கருத்து வெளியிடுகிறார் என்றால், பிரத்தானிய அரசாங்கத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொடுக்கும் அழுத்தம் போதவில்லையா, அல்லது அரசாங்கத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வழங்கும் தகவல்கள் போதவில்லையா, என்ற பல கேள்விகள் எழுந்திருந்தன. கிட்டத்தட்ட முன்று மாதங்களுக்கு பின்னர், அன்றைய தினம் அவரது பேச்சு இடம்பெற்றதால், அதனை கேட்பதற்கு அனைவரும் ஆவலாக இருந்தனர்.
ஹியூகோ ஸ்வோயர் தனது பேச்சில்,
'இலங்கை அரசாங்கம், இதய சுத்தியுடன் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜெனீவாத் தீர்மானம் நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
'நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநாள் முதல், பல முன்னேற்றகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
'புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இந்த மாற்றங்களை வெளிநாடுகளிலிருந்து ஊகம் செய்யாமல், விமானச்சீட்டை எடுத்துக்கொண்டு நேரில் சென்று கண்டறிய வேண்டும்.
'இவையெல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கைவில் முதலீடுகளை மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இதயபூர்வமான உறவுகளை வலுப்படுத்த வேண்டும். நாங்கள், அரசாங்க மட்டத்தில் உதவிகளை மேற்கொண்டாலும் தனிப்பட்டமுறையில் அங்குள்ள மக்களுடன் புலம்பெயர்ந்துவாழும் மக்கள் மேற்கொள்ளக்கூடிய தொடர்புகள்தான் அவசியமானவை' என்று கூறி முடித்துக்கொண்டார்.
ஹியூகோ ஸ்வோயரின் இந்த பேச்சு, தமிழர் தரப்பைப் பொறுத்தவரை, புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமானது. இவரது வருகையை ஏற்பாடு செய்த பிரித்தானிய தமிழர் பேரவைக்கு உண்மையில் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும். ஏனெனில், பிரித்தானிய அரசாங்கமும் இலங்கைக்குச் சென்று வந்த அதன் வெளிவிவகார அமைச்சரும், என்ன நிலைப்பாட்டில் தமது காரியங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்வதற்கு ஹியூகோ ஸ்வோயரின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இதில் ஒருவிடயத்தை ஆழமாக கவனித்தால், கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஹியூகோ ஸ்வோயர் வெளியிட்ட கருத்துக்களுக்கும் இப்போது அவர் தெரிவித்துள்ள கருத்துக்கும், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலர் சமந்தா பவர் வெளியிட்ட கருத்துக்களுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் கருத்துக்களுக்கும் இடையில், எந்த மாற்றங்களும் இல்லை.
எந்த வித்தியாசங்களும் இல்லாமல், புலம்பெயர்ந்து வாழும் மக்களை நோக்கி இவர்கள் விடுகின்ற அழைப்பு எதனை நோக்கியது என்பதை தெளிவாக தெரிந்துகொள்வதற்கு ஹியூகோ ஸ்வோயரின் பேச்சு மீண்டும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் உதவியளிக்க வேண்டும். அங்கு முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பவற்றையெல்லாம், வெளிநாட்டு அமைச்சர் ஒருவர் ஆலோனை சொல்லித்தான் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுக்கு தெரியவேண்டியதில்லை. இது குறித்து 'அநேகமான' புலம்பெயர் உறவுகளுக்கு நல்ல தெளிவு உள்ளது.
ஆனால், இலங்கைக்கு விமானச்சீட்டை எடுத்துச் சென்று அங்கு செழிப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்லாட்சியை தரிசிப்பதற்கு ஆலோசனை கூறும் வெளிநாட்டு தரப்புக்கள், அங்கு நடைபெறுவதாக கூறும் நல்லாட்சியில் பொத்தல்களாக, பெரும் ஓட்டைகளாகக் காணப்படும் அடிப்படை விடயங்கள் குறித்து இன்னமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது குறித்து எந்த அழுத்தமும் வழங்காமல் - இன்னமும் பாராமுகமாக செயற்பட்டுக்கொண்டிருருப்பதை எவ்வாறு நேர்மையான மதீப்பீடாக பார்ப்பது?
வார்த்தைக்கு வார்த்தை, நல்லிணக்கம் பற்றி வகுப்பெடுக்கும் இந்த வெளிநாட்டுத்தரப்புக்கள் எதுவும், இலங்கை அரசாங்கம் இதுவரை அந்த நல்லிணக்க பயணத்தில் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்று கேள்வியெழுப்பியதுண்டா?
காணாமல்போனவர்கள் விவகாரத்தில் தீர்க்கமான விசாரணையை மேற்கொண்டு தங்கள் உறவுகளை இன்னமும் எதிர்பார்த்திருக்கும் மக்களுக்குத் தீர்வைக் கொடுக்காமல், காணாமல்போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு மரண சான்றிதழும் நட்டஈடும் தரலாம் என்று நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறாரே. இதுதான் இந்த வெளிநாடுகள் ஓதுகின்ற நல்லிணக்கமா?
கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிடுப்பதற்கும், அரசியல் கைதிகளாக இன்னமும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கும் எத்தனையோ கோரிக்கைகளையும் எத்தனையோ சந்திப்புக்களையும் நடத்திய அரசாங்கம், இன்னமும் இதுவிடயங்களில் நம்பிக்கையான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையே. இதைத்தான் இந்த வெளிநாடுகள் நல்லிணக்கம் என்கிறார்களா?
திருகோணமலை முதல் நாட்டில் பல இடங்களிலுள்ள இரகசிய முகாம்களில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியபின்னரும் வெள்ளை வான் கடத்தல்கள் நடைபெறுகின்றன என்றும் இன்னமும்கூட சுயாதீன அமைப்புக்களின் ஆதாரபூர்வமான அறிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றனவே. இதுவும் வெளிநாடுகள் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்தின் ஓர் அங்கமா?
ஜெனீவாத் தீர்மானத்தின்போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரியுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனையும்கூறி, தாங்களும் இணைப்பங்காளர்களாக அந்த தீர்மானத்தில் இணைந்துகொண்டுவிட்டு, தற்போது இலங்கையின் ஜனாதிபதியே, வெளிநாட்டு நீதிபதிகள் எவரும் உள்நாட்டு பொறிமுறையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்றும் படையினர் எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறும்போது, இந்த வெளிநாடுகள், வாய்மூடிகளாக இருக்கிறார்களே. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுத்துரைத்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதியின் பேச்சுக்கு தீர்மானத்தின் இணைப்பங்காளிகளாகத் தங்களை அறிவித்துக்கொண்ட ஒருநாடும் இன்னமும் வாய்திறக்கவில்லையே. இதுவும் இந்த நல்லிணக்கத்தின் சாதனையா?
இவ்வாறு நீண்ட பட்டியலில் விரிந்துகிடக்கும் எத்தனையோ ஓட்டைகளை தமது தரப்பிலும் இலங்கை அரசாங்கத் தரப்பிலும் சரிசெய்யாத பிரித்தானிய அரசாங்கம் உட்பட வெளிநாட்டுத் தரப்புக்கள், தமிழ் மக்களை தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் தங்களது நிகழ்ச்சி நிரலை நோக்கி வளைப்பதில் மாத்திரம் தீவிரமாக செயற்படுவது என்ன வகையில் நியாயம்? விடுதலைப் புலிகளின் காலத்திலும்சரி இப்போதும் சரி, சர்வதேச சமூகம், தமிழ் மக்கள் விடயத்தில் தொடர்ச்சியாக இழைத்துவரும் தவறு இதுதான். அதாவது, இலங்கை அரசாங்கத்துக்குச் சமவலுவான இன்னொரு தரப்பாக தமிழர் தரப்பை ஏற்றுக்கொள்ள தவறுகிறது. இதனால், அழுத்தங்களை பிரயோகிக்கும்போது அது சமச்சீரனதாக இருப்பதில்லை. இரண்டு இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால போரினை முடிவுக்கு கொண்டுவந்து, அந்த இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் தீர்வினை மலரச்செய்யவேண்டும் என்று இதயபூர்வமாக சர்வதேச சமூகம் விரும்புமாக இருந்தால், தான் மேற்கொள்ளும் அந்த முயற்சிகளின் பாதையில் சமச்சீரான அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். அந்த அழுத்தங்களின் பிடிப்பில்தான் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையில் நம்பிக்கை பிறக்கும்.
மற்றும்படி, ஹியூகோ ஸ்வோயரின் பேச்சு ஒரு தலைப்பட்சமானது. தாயகத்தின் உண்மையான நிலைவரத்தை அங்கு சென்றபோது இம்மியும் பேச விரும்பாத அல்லது பேச முடியாத நிலையில், அவரே திண்டாடிப்போயிருக்கும்போது,
அந்த சூழ்நிலையை தொடர்ந்தும் நல்லாட்சி என்று அவரே விளம்பரப்படுத்துவதும் அப்படிப்பட்ட 'நல்லாட்சி' அரசு நடைபெறும் நாட்டுக்கும் சென்றுவருமாறு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஆலோசனை கூறுவதும் அரசியல் அபத்தம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
6 hours ago
15 May 2025