Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருணாகரன்
'இருமல் போகத் தும்மல் வந்தது', 'சட்டிக்குள்ளிருந்து அடுப்புக்குள் விழுந்தது' என்று சொல்வதைப் போலத்தான், வடக்கு விவசாயிகளின் நிலை இருக்கிறது. யுத்தம் ஓய்ந்தாலும் விவசாயிகளும் மீனவர்களும் வேறு விதமான யுத்தங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். வடபகுதி மீனவர்களுக்கு, இந்திய ட்ரோலர்கள் பெரியதொரு சவால். எத்தனை தடவைகள் இந்திய ட்ரோலர்களைக் கைப்பற்றி, அத்துமீறும் மீனவர்களைக் கைது செய்தாலும், அவர்கள் அடங்க மறுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். மறுபக்கத்தில், மயிலிட்டி போன்ற முக்கிய துறைமுகங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. கடலோரங்களில் இன்னும் கடற்படையின் ஆதிக்கமும் கட்டுப்பாடுகளும் முற்றாகத்தீர்ந்தது என்றில்லை. இதைப்போலத்தான் விவசாயிகளின் நிலையும்.
விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகள். பயிர்களை வளர்ப்பதில் இருந்து, அறுவடையைப் பெறுவது வரையில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள். உர விலை, கிருமிநாசினி விலை போன்றவை ஒருபக்கம். மறுபக்கத்தில் பொருத்தமான பயிர்ச் செய்கைக்கு உரிய ஆலோசனைகளும் உதவிகளும் விவசாயத் திணைக்களங்களினால் வழங்கப்படுவதில்லை.
அப்படி வழங்கப்பட்டாலும், அவை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொடர்ச்சியாக அமைவதில்லை. இதையெல்லாம் கடந்து பயிர்ச்செய்கையை மேற்கொண்டு அறுவடை வரை வந்தால், அடுத்த கட்டமாக அவற்றைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை. இப்படியே விதைப்பதிலிருந்து விளைச்சலை அறுவடை செய்வது வரை, அதற்கும் அப்பால் சந்தைப்படுத்துவது வரை ஏகப்பட்ட பிரச்சினைகளே விவசாயிகளின் தலையில் உண்டு.
வடக்கில் உள்ள விவசாயிகளுக்கு இப்பொழுது ஒரு புதிய பிரச்சினை மேலும் உண்டாகியிருக்கிறது. விவசாயிகளுக்குப் போட்டியாகப் படையினரும் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுகிறார்கள். சந்தைகளில் அவர்களும் போட்டியாக விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். படையினர் கொண்டு வரும் உற்பத்திப் பொருட்களுக்கும் அவர்களடைய விலைக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் விவசாயிகள் திணற வேண்டியிருக்கிறது.
'படையினரால் கொண்டு வரப்படும் பொருட்களின் விலையோ மிகக் குறைவு. அவர்களுக்குக் கூலியில்லை. படையினருக்கான சம்பளத்திலேயே பயிர்ச்செய்கையைச் செய்கிறார்கள். நிலக்குத்தகை கிடையாது. பெரும்பாலும் ஊரவர்களின் காணிகளில் பயிரை விளைவிக்கிறார்கள். அல்லது அரச காணிகளைப் பயன்படுத்துகிறார்கள். மானிய அடிப்படையில் எரிபொருளும் மின்சாரமும் கிடைக்கும்.
வாகனச் செலவு, போக்குவரத்துச் செலவுகளும் படைக்கணக்கிலேயே இருக்கும். ஆகவே அவர்கள், எவ்வளவு வேண்டுமானாலும் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும். நம்மால் அப்படியெல்லாம் செய்ய முடியுமா, நாங்கள் அத்தனைக்கும் செலவு செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஆதாரமே எங்களுக்கு இந்த விவசாயம்தான். இதை வைத்தே நாங்கள் வாழவும் காலத்தை ஓட்டவும் வேணும். படையினரோடு எப்படி நாங்கள் போட்டி போட இயலும்....?' என்று தங்கள் கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள் விவசாயிகள்.
ஒரு காலம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம், உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் போயிருந்தது. அதனால் நிலமுமில்லாமல் தொழிலுமில்லாமல் விவசாயிகள் அந்தரித்துக் கொண்டிருந்தனர். மீதியாக இருந்த நிலத்தில் பயிர்ச்செய்கையைச் செய்தால், அதற்கும் போரும் ஊடரங்கும் என்ற வாழ்க்கையில் ஒழுங்காகத் தோட்டத்துக்கோ, வயலுக்கோ போக முடியாது. அப்படிப் போனாலும் முறையாகப் பயிர்ச்செய்கையைச் செய்ய முடியாது.
உரவகைகளை வெடிபொருட்களுக்கும் பயன்படுத்தலாம் என்று சொல்லி அவற்றை எடுத்து வருவதற்கும் கட்டுப்பாடு. இப்படியெல்லாம் விவசாயிகளின் வாழ்க்கை, போரில் சிக்கித் தும்பாகியது. போர் முடிந்த பின்னர், இப்படி இன்னொரு வகையில் கதை மாறிக் கழுத்தில் சுருக்காகியிருக்கிறது.
போர் முடிந்த பிறகு, படையினரைப் பல்வேறு வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம். போருக்காகப் பெருக்கிய படையினரை, போருக்குப் பிந்திய அமைதிக்காலத்தில் எப்படிச் சும்மா வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு பெரிய பிரச்சினையே. அதிகரித்த அளவில் இருக்கும் படையினர் சும்மா இருந்தால், அதனால் பல பிரச்சினைகள் உண்டாகும் என்பது உலக அனுபவம்.
ஆகவே, அப்படியிருக்கும் படையினருக்கு ஏதாவது வேலைகளைக் கொடுத்தே ஆக வேண்டும். இதற்காக நாட்டில் பல பணிகளிலும் படையினரை ஈடுபடுத்துவது, போர் செய்த நாடுகளில் உள்ள வழமை. இலங்கையிலும் போருக்குப் பிந்திய சூழலில் இப்படிப் படையினர் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். நகர அபிவிருத்தி, வீதி அமைப்பு, கட்டட நிர்மாணங்கள், உட்கட்டுமானங்களின் விருத்தி, நகர்த்தூய்மையாக்கல் என்று பலவகையான வேலைகளில் படையினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
'துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, மேசன் வேலையிலும் கால்வாய் அகழ்விலும் நகரச் சுத்திகரிப்பிலும் பிற கட்டுமானங்களிலும் ஈடுபட்ட படையினரை, இனிமேல் அந்த வேலைகளில் எல்லாம் விட மாட்டோம்' என்று கடந்த தேர்தலின்போது அறிவிக்கப்பட்டிருந்தது நினைவில் வரலாம். அந்த அளவுக்குப் படையினர் பொது நிலைப்பட்ட பணிகளில் பகிரங்கமாக ஈடுபடுத்தப்பட்டனர். அப்படியான பணிகளில் ஒன்றுதான் படையினர் விவசாயம் செய்வதும்.
இந்த விவசாயச் செய்கை பல வகைப்பட்டது. படையினர், தாங்கள் மட்டும் செய்கின்ற விவசாயச் செய்கை. படையினரின் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடக்கம் சீ.எஸ்.டி என்று அழைக்கப்படும் சிவில் பாதுகாப்புத் தரப்பினரால் செய்யப்படும் செய்கை. புனர்வாழ்வுப் போராளிகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் செய்கை. இப்படிப் பல. இந்தமாதிரிச் செய்கைகளை, மரக்கறிப் பயிர்ச்செய்கைக்குப் புகழ் பெற்ற பலாலிப் பகுதியிலிருந்து, வடக்கின் பல்வேறு இடங்களிலும் படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மரக்கறிச் செய்கையில் மட்டுமல்ல, பழச்செய்கையிலும் படையினர் கொடிகட்டித்தான் பறக்கிறார்கள். அதாவது, போரில் மட்டுமல்ல, விவசாயத்திலும் தாங்கள் வெற்றியாளர்கள் என்றமாதிரியே கதை உள்ளது.
இப்படிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் படையினருக்கு, விவசாயிகள் சொல்வதைப்போல, உற்பத்திச் செலவுகள் குறைவாகவே இருக்கும். 'அரசாங்கக் கணக்கில் எல்லாம் இருக்கும்போது, அவர்கள் என்ன விலைக்கும் தங்களுடைய பொருட்களை விற்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக் கொடுக்கலாம்' என விவசாயிகள் கருதுவதைப்போலத்தான் சந்தைகளில் விலையை நன்றாகக் குறைத்து, படையினர் விற்கிறார்கள். இப்படி விலையைக் குறைத்துக் கொடுக்கும்போது, வியாபாரிகள் அதையே வாங்குவார்கள். எங்கே விலை குறைவோ அங்கே கொள்வனவு நடப்பது என்பது வியாபார விதி. இது தவிர்க்க முடியாதது.
'பொருட்களின் விலை குறைந்தால் சனங்களுக்கு நல்லதுதானே' என்று யாரும் கேட்கலாம். அதுதான் இல்லை. சந்தைக்குப் பொருட்கள் வந்து விட்டால் அதைக் கொள்வனவு செய்யும் வியாபாரிகளே விற்பனை விலையைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இலாபம் முக்கியம். ஆகவே, அவர்கள் தங்களுக்கு இசைவான விலையை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். இதனால் நுகர்வோருக்கு இலாபம் பெரிதாக இல்லை. வியாபாரிகளுக்கே நிகர இலாபம்.
பெரும் செலவிலும் கடும் உழைப்பிலும் விளைச்சலைச் செய்து கொண்டு சந்தைக்கு வரும் விவசாயிகள், சந்தையில் நிலவரத்தைப் பார்த்துக் கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டியுள்ளது. போட்டி போடுவதற்கு அவர்களால் முடியவில்லை. இதனால், கிடைக்கின்ற விலைக்குக் கொடுத்து விட்டுப்போவோம் என்ற நிலையில், மனச்சோர்வுக்குள்ளாகின்றனர். இந்த நிலையைப்பற்றி, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பற்றி தமிழ் அரசியற் தரப்பினர் எவரும் இதுவரையிற் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலைக்கு மாற்றுத்தீர்வு என்ன, இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்வது, என்பதைப்பற்றியெல்லாம் யாரும் அக்கறைப்பட்டதாகவும் தெரியவில்லை.
படையினரால் பராமரிக்கப்படும் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட விவசாயப் பண்ணைகள், வடக்கில் மட்டும் உள்ளன. இவற்றில், பொதுமக்கள், போராளிகளாக இருந்தோரும் பிறரும் என 4,000 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். படையினரின் விவசாயச் செய்கையைப் பற்றிக் கதைத்தால், அல்லது அதைத்தடுப்பதைப்பற்றிப் பேசினால், இவ்வளவு பேரின் வேலை வாய்ப்பும் நெருக்கடிக்குள்ளாகுமே என்று இன்னொரு கேள்வி இங்கே எழக்கூடும். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு. அதை, அரசாங்கம் சிந்திக்க வேண்டும். அதற்குரிய கவனத்தைத் தமிழ் அரசியற் தலைமைகள் முதற்கொண்டு அனைவரும் முயற்சிப்பது அவசியம். அதற்காகப் படையினரிடம்தான் வேலைகளைப் பெற வேண்டும் என்றில்லை.
சரி, அப்படித்தான் படையினரின் பண்ணைகளில்தான் இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் இருக்கும். பண்ணைகளைப் படையினர் நடத்தத்தான் போகிறார்கள் என்றால், அங்கே உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான நிர்ணய விலையை உருவாக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உள்ளூர்ச் சந்தைகளைத் தவிர்த்து, வெளியூர்ச்சந்தைகளுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும். அதற்கான வாகன வசதிகளும் பிற வாய்ப்புகளும் படைத்தரப்புக்கு உண்டு.
இதைப்பற்றியெல்லாம் விவசாயிகளால் தனித்தனியே பேச முடியாது. அப்படியென்றால், இந்த விவகாரத்தை விவசாய அமைப்புகள் பேசலாம். அப்படிப் பேசினாலும் அவற்றுக்கும் ஒரு எல்லைவரை செல்வாக்கிருக்கும். அதற்கப்பால் அவை, அரசியற் தரப்புகளின் கவனத்துக்கும் விவசாயத் திணைக்களங்களின் கவனத்துக்கும் இவற்றைக் கொண்டு சேர்க்கலாம். அவையும் கவனித்திற் கொள்ளவில்லையென்றால், விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதுதான். ஆனால், இந்த மாதிரிப் போராட்டங்களை மதிக்கின்ற, இந்தப் போராட்டங்களுக்குப் பதில் சொல்கின்ற உணர்வு அரசாங்கத்திடமும் அரசியற்தரப்புகளிடத்திலும் இன்று இல்லாமற் போய் விட்டது. அப்படியானால், முடிவுதான் என்ன?
நிச்சயமாக இந்தப் பிரச்சினையைப்பற்றி வடக்கு மாகாண விவசாய அமைச்சும் வடக்கு மாகாணசபையும் கவனத்திற்கொள்ளலாம். ஆனால், அது இந்த விவகாரத்துக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு கைகளை மடியில் வைத்துக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடாது. ஏன் இவ்வாறு இங்கே சொல்லப்படுகிறது என்றால், வடக்கிலே செழிப்பாக இருந்த திராட்சைச் செய்கை இப்பொழுது படுத்து விட்டது.
திராட்சைச் செய்கையில் ஈடுபட்ட பல விவசாயிகள், நட்டத்தில் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாற்றினங்கள் சிபாரிசு செய்யப்பட்டன. ஆனால், அந்த மாற்றினங்கள் உரிய விளைச்சலைத்தரவில்லை. இதைக்குறித்து எந்த விவசாயத் திணைக்களங்களும் அக்கறை கொள்ளவும் இல்லை. விவசாய ஆராய்ச்சிப் பிரிவுகளும் இவற்றைப் பற்றி உரிய கவனத்திலெடுத்ததாக இல்லை. ஆனால், ஆண்டுதோறும் விவசாய ஆராய்ச்சிக்கென்றும் விவசாயக்கற்கைகளுக்கென்றும் வெளிநாடுகள் வரை சென்று வருகிறார்கள். அப்படிச் சென்று படித்து வருவதையும் அறிந்து வருவதையும் சமூகத்திற் பயனாக்குவதற்குரிய நடைமுறைகள் காணப்படவில்லை. இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் விவசாய அமைச்சும் அதிகாரிகளும் இல்லை என்பதுதான் விவசாயிகளின் கவலை.
ஒரு காலம் படையினரின் கெடுபிடிகளாலும் சட்டங்களாலும் தமிழர்கள் அல்லலுற்றனர். இப்பொழுது இன்னொரு மாதிரியான வடிவத்தில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அப்படித்தான் நிலைமை உள்ளது. அதையும் விட நடப்பைப் பார்த்தால், மோதகமும் கொழுக்கட்டையும் கதைதான் நினைவுக்கு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago