2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து

Janu   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமையொன்றாக உள்ளதாதலாலும் என்ற முன்னுரை அடியைக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்துக்காக எதனை முதலில் செய்யவேண்டும். எது இப்போது தேவையானது என்பதனைப்பற்றிய யோசனைகளின்றி சில விடயங்கள் இந்த ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியேற்பு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகப் பல அசம்பாவிதங்கள், அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டவைகள் இல்லையானாலும், மக்களது பிரச்சினை என்பது பொதுவானதாக இருந்து விடுகிறது.

அனர்த்தத்தினை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. இராணுவத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றமே நோக்கம் என்று கூறிக் கொண்டு அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினை காதில் வாங்கிக் கொள்ளாது நடைபெற்று வருகின்ற செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில், பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்ற  பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையும் பார்க்கலாம்.

இலங்கையை பொறுத்தவரையில், பிரித்தானியரிடமிருந்து கையளிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், 70களில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தது வடக்குக் கிழக்கை தாயகமாக் கொண்ட தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். ஆரம்பத்தில் அது அகிம்சை வழியாக இருந்த போதிலும் அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், நெருக்கடிகள் ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாகின. அந்த ஆயுதப் போராட்டத்தினை அடக்குவதற்காக 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) கொண்டுவரப்பட்டது. இருந்தாலும், இதுவரையில் அச்சட்டம் நீக்கப்படவில்லை.

கடந்த அரசாங்க காலங்களில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி தமிழ்த் தேசியத் தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்திருந்ததுடன், போராட்டங்களையும் நடத்தினர். அக் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்திருந்தனர். ஆனால் அந்த வேகம் இப்போது இல்லாமலிருப்பது கவலையளிப்பதாகத் தமிழ்த் தலைவர்கள் கருத்து வெளியிட்டுமிருந்தனர். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னர், நாட்டில் நிகழ்ந்த ஈஸ்ர் குண்டுத் தாக்குதல்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான தேவையைத் தூண்டின. அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் முஸ்லிம்கள் மீது பாயத் தொடங்கியது. அதே நேரத்தில் கோட்டாபய  ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்து வேளையில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் சிங்களவர்களையும் அச்சட்டம் பதம்பார்க்க வழியைக் கொடுத்தது. அதுவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய கவலையேயின்றி இருந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்கள் தங்கள் மீது அச்சட்டம் பாய்ந்த வேளையில் விழித்துக் கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்படாமைக்கு தென்பகுதியிலிருக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற அச்சம் காரணமாக இருந்தது. இப்போதும் தொடர்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கான காரணிகளை அவ்வாறே வைத்துக்கொண்டு நாட்டில் அனைத்து மக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களையும் ஏனைய மக்களையும் கிலிகொள்ளச் செய்து மீண்டுமொரு நெருக்கடி, ஆபத்து மிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு நடைபெற்றுவருகின்ற முயற்சி முறியடிக்கப்படவேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக இருந்தாலும் நடைபெறப் போகும் ஆபத்து தடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகமானது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் தமிழ்த் தரப்பு தங்களது பக்க நியாயங்களைச் சொல்கின்றன. அமைப்புகள் ரீதியாவும், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சிகளாகவும் கருத்துகள் வெளிவருகின்றன.

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு மாத காலம் கருத்தறிய வழங்கியிருந்த போதிலும் தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டவரைவு குறித்து கடந்த ஒகஸ்ட் மாத்தில் அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இப்போது வரைபு

வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒருசிலருடைய கருத்து இது சரியான காலமா என்பதே.  தித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டு நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இச்சட்டம் கொண்டுவருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது அதன் பொருள்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்திற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அனைவராலும் எதிர்க்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அரசைப்பாதுகாக்கும் சட்டமானது அச்சட்டங்களை விடவும் மோசமானதாகவே சொல்லப்படுகிறது.  பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிரத்தியேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த  'தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிறி தொரு சட்டத்தின் ஊடாக பதிலீடு செய்ய முனைவது வாக்குறுதிகளை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

எந்தவொரு சட்டமும் வெளிப்படையானதும் கலந்துரையாடலுக்குள்ளாக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில விடயங்களை கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சட்டம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதனை சகலரையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாகக்  கொள்ள முடியாது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த இடத்தில் பயங்கரவாத்தத தடைச்சட்டம் போன்றதொரு சட்டம் தேவையில்லை என்ற அழுத்தம் காணப்படுகின்ற வேளையில், இச்சட்டத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவர முயற்சிக்கிறது என்பதுதான் கேள்வி.

இருந்தாலும், வழமைபோலவே முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற வேளைகளில் அது குறித்து பொதுமக்களுடக்  கலந்துரையாடல்கள் நடத்தி, விளிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் சிவில் அமைப்புகளில் பெரும்பான்மையானவைகள் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான வேலைகளில் இருக்கின்ற வேளையில் இச்சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் செயற்பாடு சிறப்பாக நடைபெறுமா என்பதும் கலந்துரையாடலுக்கானதே.

இந்நிலையில், சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்களின் முக்கியமாக, சட்டமூலத்தை  பொதுத்தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டமைக்குப் பாராட்டியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கருத்துக்களை முன்வைப்பதற்கும், கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் மேலும் கால அவகாசத்தைச் கோரியிருக்கிறது. அத்தோடு, இந்த சட்டமூலமானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட முன்னேற்றகரமானதாக இருக்கின்றதா? எனும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மாறாக நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் சார் கடப்பாடுகளுக்கு அமைவாக  அமைந்திருக்கின்றதா என்ற அடிப்படையில் மதிப்பிடவேண்டும். பயங்கரவாதத்தடைச் சட்டம் அரசியலமைப்பின் பிரகாரம் வரையப்பட்டது அல்ல என்பதையும், அதனை அடிப்படை உரிமைகள் சார் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், அரசாங் கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில்  பயங்கரவாதம் என்பதனை பயங்கரவாதத்திலிருந்து மாற்றி மேலும் மோசமானதொரு சட்டத்தை ஏற்படுத்த முனையும் அரசின் செயற்பாடு  இடதுசாரித்தனம்தானா என்றே கேட்கத் தோன்றுகிறது.

எது எவ்வாறானாலும், சர்வதேச தரநெறிகளினதும் நியமங்களினதும், உள்நாட்டுத் தேவைகளினதும் அடிப்படையின்மீது, பயங்கரவாதத்துக்கு எதிராகக் குற்றவியல் நீதியை நிருவகிப்பதற்கான பயனுள்ள முறைமையொன்றை வலுவுறுத்துவதனூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையில் அடியோடு அழிப்பதற்கும் தடுப்பதற்கும் உறுதி பூண்டு உருவாக்கப்படுகின்ற இச்சட்டத்தால் நாடு எப்பாடுபடப்போகிறதோ என்பதை எதிர்காலமே  தீர்மானிக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X