Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டு வாழ்த்துகள்!
பிறக்கின்ற இவ்வாண்டு, எதிர் பார்ப்புகளுடன் அல்லாது, கேள்விகளுடனே பிறக்கிறது.
மக்களிடம் இருக்கின்ற சூதாடி மனநிலை, பிறக்கின்ற ஆண்டு குறித்த ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தவறில்லை.
எதிர்பார்ப்புகளுக்கும் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தனி மனிதர்களிடம் இருக்கின்ற கனவுகளுக்கும் நனவுகளுக்கும் இடையிலான இடைவெளியும் யதார்த்தம் பற்றிய தெளிவுமே, இவற்றின் அளவுகோல்களைத் தீர்மானிக்கின்றன.
தமிழ்ச் சமூகம், கடந்த அரை நூற்றாண்டுகளாக எதிர்பார்ப்புகளின் கயிற்றில் தொங்கியபடி, ஏமாற்றங்களைச் சுமந்து பயணிக்கிறது. எதிர்பார்ப்புகள் சுருக்குக் கயிறாகி, எம் கழுத்தை நெரித்து, காலம் பல கடந்தாலும் அந்த எதிர்பார்ப்புகளையும் அதனால் பெறும் ஏமாற்றங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சமூகமாகவே, தமிழ்ச் சமூகத்தின் வரலாறு இருந்து வந்திருக்கிறது. இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்று, இந்தப் புதிய ஆண்டிலாவது சிந்திக்கத் தொடங்குவோம்.
தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் என்ன, தமிழ் மக்கள், இன்று எதை வேண்டி நிற்கின்றார்கள்? இவ்விரண்டு கேள்விகளையும் இதய சுத்தியோடு, அரசியல் அழிச்சாட்டியம் இன்றி, மனம் திறந்து பேசியாக வேண்டும்.
இன்று, பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமிழர்கள் என்போர், தமது அன்றாட வாழ்வுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் போராடுகிறார்கள். ஒரு நேர உணவுக்காக, தலைக்கு மேல் ஒரு கூரைக்காக, தமது குழந்தைகளுக்கான ஒரு வைத்தியசாலைக்காக, தமது பிள்ளைகளுக்கான கல்விக்காக அவர்கள் ஏங்குகிறார்கள்.
நாம் முதலில், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவோம். அவை, உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள். இவை அரசியல் தீர்வு பற்றியவை அல்ல; அதிகாரப் பகிர்வு பற்றியவையும அல்ல; தனிநாடு குறித்தவையும் அல்ல. இதை, நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசியல் அதிகாரம் குறித்தும், அதன் தேவை குறித்தும் பேசுகின்றவர்கள் முதலில், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் அன்றாட வாழ்வையும் உறுதிப்படுத்த வேண்டும்.
சுடுகாடுகளை நாமே உருவாக்கி விட்டு, அதன் மேல் கட்டடங்களை அமைப்பதில் பயனில்லை. முதலில், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்; சாதியம் கடந்து, பிரதேசம் கடந்து தமிழர்களைத் தமிழர்களாக அடையாளம் காண்போம்; அவர்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்போம்; அவர்களது மனங்களைப் புரிவோம்; அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வெளியை ஏற்படுத்திக் கொடுப்போம். மனிதம் கடந்த மானுடம் நோக்கிப் புறப்படுவோம்.
மக்களது அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், அவர்களது நீண்டகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் பலனில்லை. நீண்டகாலப் பிரச்சினைகள் மட்டுமன்றி, அன்றாடப் பிரச்சினைகளும் அரசியல் தீர்வுடன் தொடர்புடையவை என்பதில், மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எம்மிடம் உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் உள்ளன.
‘தவித்த வாய் வேண்டி நிற்பது, குடிக்கக் கொஞ்சம் தண்ணீரே அன்றி, பழரசம் தரவல்ல சோலைகள் அல்ல’. இந்தப் புரிதல், எமது அரசியல், சமூக வாழ்வியல், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில், அமைதல் வேண்டும்.
இதை, நாம் எல்லோரும் செய்தல் வேண்டும். ‘ஊர் கூடித் தேர் இழுத்தால், இயலாதது எதுவும் இல்லை’. நாம் இயந்திரத்தைப் பயன்படுத்தி, தேர் இழுக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மக்களின் உடனடிப் பிரச்சினைகளே, அடிப்படையானவை என்ற உண்மை, இப்போதாவது எமக்கு விளங்கி இருக்க வேண்டும். தனிமனித நலன்களையும் குறுகிய மனநலப் போக்குகளையும் ஒதுக்கிவிட்டு, பொது நலனை முன்னுக்கு வைப்போம்; மக்கள் நல அரசியலை முன்னெடுப்போம்; அதுவே, இன்றைய காலத்தின் தேவையும் எதிர்பார்ப்பும் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago