2025 மே 01, வியாழக்கிழமை

போராட்டங்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாவது எழுக தமிழ்ப் போராட்டத்தில், மக்களைப் பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கள், கடந்த வாரம் வெளியாகியிருந்தன. எதிர்வரும் 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி தமிழ் மக்கள் திரள வேண்டும் என்று, அந்த விளம்பரங்கள் கோருகின்றன. அந்த விளம்பரங்களை முன்வைத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அரசியல் நையாண்டிப் பதிவுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. 

குறிப்பாக, மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றுக்குப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, கூட்டம் சேர்க்க வேண்டிய நிலைக்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைச் சக்திகளும் வந்துவிட்டதாக் குறை கூறப்படுகின்றது.

போராட்டங்கள், தம்மை வலுப்படுத்திக் கொள்வதற்காக மக்களை அடையும் வழிகள் குறித்து சிந்தித்தாக வேண்டும். ஏனெனில், போராட்டங்களின், குறிப்பாக, விடுதலைப் போராட்டங்களின் இருப்பும், அதன் வெற்றியும் மக்களின் பங்களிப்பிலேயே தங்கியிருக்கின்றன. ஒரு காலத்தில் உடல் அசைவின் வழியும் ஒலி வடிவிலும் தகவலைப் பரப்பிய மனிதன், பின்னொரு காலத்தில் மொழி என்கிற மிகச் சிறந்த வழியைக் கண்டுபிடித்தான். இன்றைக்கு அது, பல்கிப்பெருகி, மொழியை அடிப்படையாகக் கொண்ட ஊடக- ஊடாட்ட முறையை ஏற்படுத்தியிருக்கின்றது. அப்படியான நிலையில், தகவல்களைப் பரப்புவதற்காகவும் பிரசாரத்தையும் முன்னெடுப்பதற்காகவும் சமூக ஊடகங்களையோ, பிரதான ஊடகங்களையோ பயன்படுத்துவது தப்பில்லை.  

சிலவேளை, போராட்டங்களுக்கான அழைப்பு என்பது துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழியே விடுக்கப்படவேண்டியவை என்கிற வரையறுக்கப்பட்ட மனநிலையில் தங்கியிருப்பவர்களுக்கு, பத்திரிகை விளம்பரங்கள், நையாண்டி எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.

ஆனால், எழுக தமிழ் போன்ற எழுச்சிப் போராட்டமொன்றுக்கான தேவை அதிகமாகவுள்ள சூழலில், அந்தப் போராட்டம் குறித்து மக்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. சில தருணங்களில், எழுக தமிழ் போன்ற போராட்ட வடிவங்களை ஒருவித விரக்தி, எரிச்சல் மனநிலைகளில் எதிர்கொள்ளும் கட்டமும் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன, எங்கே தவறு நிகழ்ந்திருக்கின்றது, அதனை எவ்வாறு சரி செய்வது? என்ற கேள்விகளை தமிழர் தரப்பு எழுப்பி, அதற்கான பதிலைத் தேட வேண்டும். அதுதான், விடயங்களைச் சரி செய்ய உதவும்.

எப்போதுமே, கேள்விகளை எழுப்புவது சார்ந்து தமிழ்த் தரப்பு பின்நின்றதில்லை. அனைத்து விடயங்களிலும் சந்தேகங்களையும் கேள்விகளையும் தொடர்ச்சியாக எழுப்பி வந்திருக்கின்றது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடையும் வழிமுறைகள் சார்ந்து எந்தவித அர்ப்பணிப்பையும் வெளியிடுவதில்லை என்பதுதான், கேள்விகள் பதில்களின்றி தொடர்வதற்கும் அவை பிரச்சினைகளாகப் பல்கிப்பெருகுவதற்கும் காரணம். பதில்களை அடைவதற்கான வழிகள் குறித்து தமிழ்ப் புலமைத் தரப்பும் அரசியல் தரப்பும் வெற்றிகரமான படிகளில் ஏறியிருந்தால், தோல்விகளின் அளவு குறைக்கப்பட்டிருக்கும். பிரச்சினைகள் மெல்ல மெல்ல கலைந்து போயிருக்கும்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது இரண்டு கட்டங்களில் தன்னை நிலைநிறுத்த எத்தணிக்கின்றது. ஒன்று, மக்கள் போராட்டங்கள் வழியாக. மற்றையது, தேர்தல் வாக்களிப்பினூடாக. மோசமாக தோற்கடிக்கப்பட்ட தரப்பொன்று, தன்னுடைய அரசியல் அடிப்படைகள் குறித்தும், அதனைத் தக்கவைப்பது குறித்தும், முழுமையாக இல்லாவிட்டாலும், அரைகுறையாகவேனும், இந்த இரண்டு வழிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது ஒருவித ஆசுவாசம்தான். ஆனால், அந்த அரைகுறை நிலையிலிருந்து பூரண நிலை நோக்கி அல்லது நேர்மறை நிலை நோக்கி நகருவதற்கான வழிகளைக் கண்டு அடையாது இருப்பதுதான், தோல்விகளின் நீட்சிக்குக் காரணமாகின்றது.

காணி விடுவிப்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், போர்க் குற்றங்களுக்கான நீதிப் போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் இப்படியாக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தரக் கோரும் போராட்டம் ஆயிரம் நாள்களை எட்டப்போகிறது, கேப்பாப்புலவுப் போராட்டம், அந்த மக்களின் அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டது. ஆனாலும், இந்தப் போராட்டங்களை நோக்கி மக்கள் திரட்சியையோ, அதன் வழியாக அழுத்தங்களை உருவாக்கக் கூடிய கட்டங்களையோ தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு பெரிதாக எட்டவில்லை. அது, மக்களிடம் போராட்டங்கள் மீதான இடைவெளியை அதிகப்படுத்தியிருக்கின்றன.

தமிழ்ச் சூழலில் எப்போதுமே வெற்றிபெற்ற உதாரணங்களை முன்வைத்துதான் உரையாடல்கள் நிகழ்கின்றன. தோல்வியடைந்த போராட்டங்கள் குறித்தோ, நிகழ்வுகள் குறித்தோ உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை. இதனால், தோல்விக்கான காரணங்களைக் கண்டடைய வேண்டும் என்கிற கடப்பாடு காணாமற்போகின்றது. 

வெற்றிகள் எப்போதுமே சிலிர்ப்பானவை. நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியவை. எல்லாவற்றையும் தாண்டி கொண்டாட்டத்துக்குரியவை. அதனால், அந்தப் வெற்றிகளின் புள்ளிகளில் நிற்பதற்கே மனித மனங்கள் விரும்புகின்றன. அப்படியான வெற்றிகரமான புள்ளிகளில் நிற்பதற்குதான், முள்ளிவாய்க்கால் முடிவுகளைக் கண்ட பின்னரும், தமிழ் மக்களும் அதன் அரசியலும் விரும்புகின்றது. அங்குதான் சிக்கல் ஏற்படுகின்றது. யாராக இருந்தாலும், தோல்விகளைக் கொண்டு சுமக்க வேண்டியதில்லை. 

ஆனால், அந்தத் தோல்விகளின் அனுபவத்தை, பாடமாக கற்றுத் தெளிய வேண்டும். எந்த இடங்களில் கோட்டை விட்டிருக்கிறோம், எந்தக் கணிப்புகள் எல்லாம் தவறியிருக்கின்றன என்று அக்குவேறு, ஆணிவேறாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவை, திறந்த மனநிலையில், ஒரு மாபெரும் அரசியலுக்கான அத்திபாரமாக நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அது, ஒரு காலத்துடன் நின்றுவிடாது, அடுத்தடுத்த தலைமுறைகள் வரையில் ஊடுகடுத்தப்பட்டு, உரையாடப்பட வேண்டும்.

விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் என்று நினைக்கிறேன், “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ப்றோ” என்றொருவர் கூறுவார். அதற்கு ஜூங்கா என்கிற தாதா சொல்லுவான், “இல்லை ப்றோ, புலி புல்லைத் தின்னனும். தின்றுவிட்டு புல்லைத் தின்ன வைத்தவனைப் போடணும் (சாகடிக்கணும்) ப்றோ” என்று. ஒரு நகைச்சுவைப் படத்தில் வரும் சாதாரண உரையாடல் இது. அதிலேயே, பிழைத்து வாழ்தலையும் அதன் அடிப்படை அரசியலையும் பேச முடிகிறதென்றால், விடுதலையை அரசியலாகவும், வாழ்வாகவும் கொண்டிருக்கின்ற ஒரு தரப்பு, தன்னைக் குறித்து எவ்வளவு சிந்திக்க வேண்டும். “நான் புலி, என்னுடைய உணவு இறைச்சிதான்” என்று நினைத்து பட்டினி கிடந்து சாவதைக் காட்டிலும், பசியை ஆற்றுவதற்காக புல்லைத் தின்றுவிட்டு உயிர்த்தப்பி, தன்னை அந்தச் சூழலில் தள்ளியவனை எதிர்கொள்வதுதான் வெற்றிகரமான படி. அது, சந்தர்ப்பவாதம்தான். ஆனால், அரசியல் என்பதே சந்தர்ப்பங்களை வெற்றிகரமாக கையாளும் உத்திதான். வெற்று இறுமாப்போடு, செத்துச் சுண்ணாம்பாவதைக் காட்டிலும், நிலைத்திருப்பதற்கான வழிகளைக் கண்டடைவதே உண்மையான அரசியல். அந்தக் கட்டங்களில் பயணிப்பதிலிருந்துதான், தமிழ்த் தரப்பு தவறியிருக்கின்றது. அதுதான், போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்களை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

மனித இயல்பே, இலக்குகள் நோக்கி இயங்குவதுதான். தமிழ் மக்களிடமும் கனதியாக, அர்த்தபூர்வமான இலக்குகள் உள்ளன. ஆனால், அவற்றை அடையும் வழிமுறைகள் குறித்துதான் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஏனெனில், எம்முடைய வாழ்க்கை நெறி அல்லது ஒழுக்கம் என்பது இலக்குகளை அடையும் வழிமுறைகளைச் சிந்திப்பது சார்ந்து என்றைக்குமே இருந்ததில்லை. 

படிப்படியான முன்னேற்றம், அதன் அவசியம் குறித்து பேசப்படுவதில்லை. அதனால், வெற்றி, தோல்வி என்கிற இரு துருவாங்களாகப் பிரிந்திருக்க வேண்டியிருக்கின்றது. வெற்றியும் தோல்வியும் இரு துருவங்களாகத் தோன்றினாலும், அடிப்படையில் அவை ஒன்றை ஒன்று சார்ந்ததுதான். 

முழுமையான வெற்றி என்ற ஒன்று என்றைக்குமே கிடைப்பதில்லை. அதுபோல முழுமையான தோல்வி என்ற ஒன்றும் இருப்பதில்லை. அப்படியான நிலையில், அரசியல் என்பது முழுமையான வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருந்துவிடாது. அதை உணராது எவ்வளவு பேசினாலும், முயற்சித்தாலும் பிரயோசனம் இல்லை.

இப்போது எழுக தமிழின் வெற்றிக்காக சில தரப்புகளும், தோல்விக்காக சில தரப்புகளும் காத்திருக்கின்றன; அதனை நோக்கி இயங்குகின்றன. அவை, பெரும்பாலும் தேர்தல், கட்சி அரசியல் சார்பிலானதுதான். 

ஆனால், இந்தப் போராட்ட வடிவங்களின் உண்மையான வெற்றி, தோல்வி குறித்தோ, போராட்டங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் போராட்டங்களிடம் இருந்து அந்நியப்படுகின்றமை குறித்தோ பேசப்படுவதில்லை. அதுபற்றிப் பேசாது, எதைப் பேசினாலும், அவை நேராக அமையாது; பலனளிக்காது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .