2025 மே 16, வெள்ளிக்கிழமை

மு.காவின் தேசிய மாநாடு: கண்கட்டி வித்தை

Thipaan   / 2016 மார்ச் 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பெரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு, பலத்த ஏமாற்றங்களைத் தந்துவிட்டுப் போயிருக்கின்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் என்னவென்று கூறாமலும் ஆட்சியாளர்களிடம் இருந்து எந்த வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளாமலும் விட்டதன் மூலம், அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் கட்சி சார்பான எம்.பி.க்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் ஒரு பொன்னான வாய்ப்பைத் தவற விட்டிருக்கின்றார்கள் என்று சொல்லலாம்.

அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை கிராமத்தில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வு, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் பல வருடங்களுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாநாடாக இருந்தது. இலங்கை முஸ்லிம்கள், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சொல்லொணாத் துயரங்களைச் சந்திந்த காலத்திலேயே, இது போன்ற நிகழ்வொன்றை மு.கா ஏற்பாடு செய்து, அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். கட்சியின் மத்திய குழுக்களைக் கவனியாது வழிவிட்டமை, ஒவ்வொரு ஊரிலும் ஆதரவாளர்களை இரண்டு - மூன்று குழுக்களாக உடைத்தமை போன்ற பல கைங்கரியங்களைச் செய்த மு.கா தலைமை, தேர்தல் மற்றும் மாநாடு இடம்பெறாத காலங்களில், மக்களை மறந்து செயற்படும் ஒருவராக சரித்திரக் குறிப்புக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இனவாத செயற்பாடுகள் இடம்பெற்ற போது, 'வியூகம்' என்று சொல்லியும் 'பொறுமைகாத்தல்' என்ற பெயரிலும் காலத்தை இழுத்தடித்து விட்டு, கடைசியில் ஒருசில அறிக்கைகளை விட்டால் அதற்குப் பரிகாரமாக ஆகிவிடும் என்ற தோரணையில், மு.கா செயற்பட்டதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. மஹிந்தவிடம் 'கிடைத்ததை' பெற்றுக்கொண்டு, 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை, திவிநெகும சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டமை போன்ற பல சமூக அக்கறையற்ற அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டதும் பிறகு 'கண்கெட்ட பின்னர் சூரியநமஸ்காரமாக' மக்களிடம் வந்து மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு, வாக்குப் போடச் சொல்லி கோரிய பெருமையும் முஸ்லிம் காங்கிரஸுக்கு உள்ளது.

இப்படி, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்திலோ, அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன விடயங்களிலோ குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதையும் சாதிக்கத் தவறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், பாலமுனை தேசிய மாநாட்டைப் பயன்படுத்தி அவற்றுக் கெல்லாம் பிராயச்சித்தம் தேடும் என்ற எண்ணம், எதிர்பார்ப்பு மு.கா ஆதவாளர்கள் மத்தியில் மட்டுமல்ல எதிர்தரப்பாரிடமும் இருந்தது.

நாட்டைத் தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஆளுகின்றது. அதன் தூண்களாக இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த தேசிய மாநாட்டுக்கு வருகைதந்திருந்தனர்.

அவர்கள் மாத்திரமன்றி, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே நோக்கில் அரசியல் செய்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் இராணுபத்தளபதியும் அமைச்சருமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, மலையக அரசியல்வாதிகள் என பன்முக அரசியல் ஆளுமைகள் இந்த தேசிய நிகழ்வுக்கு வருகைதந்திருந்தனர். இவர்கள் எல்லோரும் வருகின்றார்கள் என்று தெரிந்திருந்தமையாலேயே, மக்கள் மத்தியில் மேற்சொன்ன எதிர்பார்ப்பு அளவுக்கதிமாக ஏற்பட்டிருந்தது.

அரசியலமைப்பு மாற்றம், புதிய தேர்தல் முறைமை, இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதி எனப் பல விடயங்களை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆதலால், இந்தத் தேசிய நிகழ்வை மிக உயர்ந்தபட்சமாக மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய கடமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்தது.

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு, அந்த இன மக்கள் செறிவாக வாழும் கிழக்கு மண்ணில் நடைபெறுவதால் மு.கா என்ன கோரிக்கையை முன்வைக்கின்றது, என்பதை அரசாங்கமும் உள்ளூர்க் கட்சிகளும் மட்டுமல்லாமல் சில சர்வதேச நாடுகளும் அவதானித்துக் காத்திருந்தன. ஏனெனில், பெருந்தேசியக் கட்சிகளினதும் இடதுசாரிக் கட்சிகளினதும் மாநாடுகள் எவ்வாறு அமைந்தாலும் ஒரு தேசத்தில் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களின் தேசிய நிகழ்வுகள் மிக முக்கியமான சேதி ஒன்றை உலகுக்குச் சொல்வதற்கு முனையும் தன்மையை கொண்டதாகவே இருக்கும்.

கட்சியின் யாப்பின் பிரகாரம் நடத்தியே தீர வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களாக, வெறும் களியாட்ட திடல்களாக, பாட்டுக் கச்சேரிகளாக அன்றேல், சாதாரண அரசியல் சொற்பொழிவு மேடைகளாக தேசிய மாநாடுகள் இருந்ததில்லை. அவ்வாறான இலட்சணங்களுடனேயே, கடந்த காலத்தில் கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் காங்கிரஸ் மாநாடுகளும் இடம்பெற்றும் இருக்கின்றன.

அப்படியென்றால், முஸ்லிம்களின் பிரதான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாநாட்டில் என்ன செய்திருக்க வேண்டும், சாணக்கியம் என்றும் வியூகம் என்றும் பேரம்பேசல் என்றும் வார்த்தைக்கு வார்த்தை கூறுகின்ற அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவற்றையெல்லாம் இந்த மாநாட்டில் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமா, இல்லையா?

ஆனால், அவ்வாறு எதுவும் நடந்த மாதிரித் தெரியவில்லை. அமைச்சர் ரவூப் ஹக்கீம், இங்கு இரண்டு அமர்வுகளில் உரையாற்றினார். ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் முதலாவதாக அவர் ஆற்றிய உரை, பொதுவான தேசிய அரசியலைப் பற்றியதாக அமைந்திருந்தது. இந்த சமூகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசிய அதிகபட்ச வார்த்தைகள் என்பது 'எல்லோரும் ஒன்றிணைந்து நீதி, நியாயமான தீர்வை பெற்றுத்தருவதில் நீங்கள் முன்னின்று பங்களிப்புச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது' என்ற நீளமான வாக்கியமே.

இரண்டாவது உரையில், தனக்கிருந்த கோபங்களை எல்லாம் மு.கா தலைவர் கொட்டித் தீர்த்தார்;. விஷேடமாக, மாநாட்டுக்கு வராமல் இருந்த பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலியும் மாநாட்டுக்கு வந்துவிட்டுப் போன தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் மிக மோசமான வார்த்தைகளால் கடுமையாகச் சாடப்பட்டனர். எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால், கொழும்பில் நடைபெறுகின்ற ஒரு பெரும்பான்மை கட்சியின் கூட்டத்தில் பேசுவது போல ரவூப் ஹக்கீமின் முதலாவது அமர்வு மீதான உரை அமைந்திருந்ததாகவும், உயர்பீடக் கூட்டத்தில் பேசுவது போன்று இரண்டாம் அமர்வில் அவர் பே(ஏ)சி விட்டுப் போனதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள்.

இப்படி, சிறுபான்மை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சொல்வதற்கு கிடைத்த அரியதொரு சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொறுப்பில்லாமல் தவறவிட்டுள்ளது. நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து வந்திருந்த ஆதரவாளர்களும் இந்த மாநாட்டுக்காக உழைத்த போராளிகளும் மாநாட்டில் பரிமாறப்பட்ட சாப்பாட்டுப் பொதிகளுக்காகவோ, பொழுது போக்குக்காகவோ வந்ததாக யாரும் கருத முடியாது. மு.காவின் மாநாட்டில் முஸ்லிம்களின் தேசிய பிரச்சினைகளுக்கான முக்கியத்துவமிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று நம்பிக்கையுடனேயே அவர்கள் வருகைதந்திருந்தனர் என்றே, மு.கா எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அம்மக்களின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்த முயலவில்லை. 'ஆயிரம் விளக்கு' எழுச்சிப்பாடலுக்கு எல்லோரும் கரகோசம் எழுப்பியதற்காக, முஸ்லிம்கள் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்று அர்த்தமில்லை.

மு.கா தலைவர் என்ன செய்திருக்க வேண்டும்? முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்னவென்று மேடையில் சுருக்கமாகச் சொல்லியிருக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்திடமிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் அதில் தமிழர்கள் செய்ய வேண்டிய விட்டுக் கொடுப்பையும் சொல்லியிருக்கலாம். முஸ்லிம்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் படம்பிடித்துக் காட்டியிருக்கலாம். ஆகவும் குறைந்த நம்பிக்கைதரும் உத்தரவாதத்தை ஜனாதிபதியும் பிரதமரும், முஸ்லிம்களின் முன்னிலையில் முன்வைக்க வழியேற்படுத்தும் ஓர் உரையை ஆற்றியிருக்க வேண்டும்.

ஆனால், ஏனோ அது இடம்பெறவில்லை. சிவில் நிர்வாக சிக்கல்கள், காணி மற்றும் எல்லைப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், ஒலுவிலில் காணிகளை இழந்த மக்களின் பிரச்சினை, நுரைச்சோலை கிராமத்தில் காடாகிக்கிடக்கும் சுனாமி வீட்டுத் திட்டத்தை உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் கோரிக்கை, சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் போன்ற அன்றாட சிவில் பிரச்சினைகளை பேசியிருக்க வேண்டும். மிக முக்கியமாக, அரசியலமைப்பிலும் தீர்வுத்திட்டத்திலும் முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை சொல்லாமல் மேடையில் இருந்து மு.கா தலைவர் இறங்கியிருக்கவே கூடாது.

அதுமட்டுமல்ல இன்னுமொரு விடயமும் அவதானிக்கப்பட்டது. முன்னைய காலங்களில் இடம்பெற்ற மு.காவின் தேசிய மாநாடுகளில் 'மாநாட்டுத் தீர்மானங்கள்' எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், பாலமுனை மாநாட்டில் அவ்வாறு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மாநாட்டுக்கான செயற்கிரம நடைமுறைகளும் திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை. சாரம்சமாகச் சொல்லப் போனால், மக்களை அன்றி, தலைவரை முதன்மைப்படுத்திய ஓர் 'ஓரங்க நாடகம்' போல இந்த தேசிய நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. 

இப்போது இதுபற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு சமாந்திரமாக, மு.கா தலைவருக்கு ஆதரவானோரும் அவரது நிலைப்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு சிலரும் இதை ஒரு 'மிகப் பெரிய வெற்றிகரமான மாநாடு' என்று சொல்கின்றனர். அவரது உரையை புகழ்ந்து தள்ளுகின்றனர். பாலமுனை மாநாடு எந்த அடிப்படையில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பதை இவர்கள் யாரும் சொல்லவில்லை.

ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஏனைய அரசியல் பிரமுகர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வந்தது மட்டுமே இதன் சிறு வெற்றியாகும். ஆனால், அப்படி காலடிக்கு எல்லோரையும் கூட்டிவந்தும் தேவைப்பட்ட எதையும் உருப்படியாக பேசாமல் விட்டுவிட்டு, இப்போது மாநாடு வெற்றி என்ற பெருமையடித்தல்களை அவிழ்த்து விடுதல் அழகல்ல. இன்னுமொரு பக்கம், இந்த மாநாடு நினைத்தபடி அமையவில்லை என்று உணர்ந்து கொண்டுள்ள சிலர், அதனை மறைப்பதற்காக, உட்கட்சிப் பூசலே இதற்கு மறைமுக காரணம் என்பது போல காட்சிகளை சித்திரித்து காட்ட முயற்சிப்பதையும் காண முடிகின்றது.

பல மில்லியன்கள் செலவளித்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அதிதிகளாக ஆட்சியாளர்களை எல்லாம் கூட்டிவந்து, அதைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் வரவழைத்து, அந்த மேடையில் இந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக எடுத்துக் கூறாமல் ஒரு கண்கட்டி வித்தை காட்டிவிட்டு. இப்போது 'மாநாடு அமோக வெற்றி' என்று கூறுவதென்றால், அதிலுள்ள ஆழமான சாணக்கியம் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .