Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ப.தெய்வீகன்
இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி கடந்த வாரம் சரளமான செய்திக்களமாக மாறியிருக்கிறது. அங்கு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட கிளைமோர் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான செய்தி, அரசியல்வாதிகள்வரை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தையும் செய்தியையும் ஒவ்வொரு தரப்பினரும் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொண்டாலும், உண்மை நிலைவரத்தை உரைகல்லாக வைத்து, இதன் பின்னணியை ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம்.
போர் முடிந்து ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில், இலங்கைப் படையினர் நாடுமுழுவதிலும் முன்னர் பல ஆயுத மீட்புகளை மேற்கொள்வதும் முப்பது வருட யுத்தத்தின் எச்சங்களாக, அவை செய்தியாக ஊடகங்களில் எரிந்து பின்னர் அடங்குவதும் வழமையான ஒன்று.
ஆனால், இந்த ஆயுதக் கண்டுபிடிப்புக்களும் அதனை ஒட்டிய செய்திகளும் அரசாங்கத்தரப்பினராலும் படையினராலும் எந்தப் பின்னணியுமின்றி வெளியிடப்படுவதில்லை என்பது கடந்த கால வரலாற்றினை அவதானிப்பவர்களுக்கு தெரியும்.
மயானங்களாக இன்னமும் காட்சியளிக்கும் போர்வடு சுமந்த பிரதேங்களில் அல்லது எங்காவது ஒரு இடத்தில் மீட்கப்படும் இந்த ஆயுதங்களை, செயலிழக்கச் செய்து அழித்துவிடுவது படையினருக்கு பெரிய வேலையே இல்லை. எத்தனையோ முன்னாள் போராளிகளையும் பொதுமக்களையும் இவ்வாறுதான் கொன்றொழித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படையினருக்கு, இப்போது மீட்கும் ஆயுதங்களை, அதுவும் ஏழு வருட அனுபவத்துடன் இல்லாமல் செய்வது பெரிய வேலை இல்லை.
ஆனால், இந்தச் செய்திகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கும் படையினர், அரசாங்கத்தரப்பினருடன் இணைந்து, சில அரசியல் இலாபங்களுக்காக இந்த ஆயுத மீட்பு சம்பவங்களை பயன்படுத்துவதுண்டு. அநேக தருணங்களில் அது விடுதலைப் புலிகளின் ஆபத்தும் அச்சுறுத்தலும் தமிழர் பிரதேசங்களில் இன்னமும் உண்டு என்பதை ஆழமாக வலியுறுத்துவதாகவே இருந்தது.
இந்தவகையான சடங்கு மயமான சலன செய்திகளில் ஒன்றாக, சில வாரங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடனிருக்கிறார் என்ற செய்தி, சிங்கள ஊடகமொன்றில் வெளிவந்திருந்தது. இந்த மாதிரியான செய்திகளுக்கு சிங்கள ஊடகங்கள் மத்தியில் எப்போதுமே 'தனி மதிப்பு' இருப்பது வழக்கம். ஜனரஞ்சகமான இந்த செய்தியை உடனடியாகவே காவிச்சென்று, இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது, 'பொட்டம்மான் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி தமக்கு தெரியாது என்று கூறியிருந்தார்.
அதாவது, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரும் மூத்த உறுப்பினருமான கே.பி. உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கியஸ்தர்களை, வெளிநாடுகளுக்கே சென்று கைது செய்துவந்த இலங்கைப் படைத்தரப்புக்கு, போர் முடிந்து ஏழு வருடங்களாகியும் விடுதலைப் புலிகளின் அதி முக்கியத்துவம் வாய்ந்த நபர் ஒருவர் குறித்துத் தெரியாது என்று உத்தியோகபூர்வமாக கூறியிருந்தார்.
வழமைபோல இந்த விவகாரம் உடனடியாகவே ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்போதுதான் வடக்கிலிருந்து இன்னொரு செய்தி வெளியானது. அதுதான், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட கிளைமோர் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான செய்தியாகும்.
இந்தக் கிளைமோர் தொகுதி, 2006ஆம் ஆண்டு வெளியான பத்திரிகையால் சுற்றப்பட்டிருந்ததாலும் அது போருக்கு முன்னரே மறைத்துவைக்கப்பட்டதாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவரும் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்த உடனேயே, அதற்காகவே காத்திருந்ததுபோல, அரசாங்கத்துக்கு எதிரான மஹிந்த தரப்புக் கூடாரத்திலிருந்த முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தக் கிளைமோர் வெடிகுண்டுகள் தொகுதி வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்படவிருந்ததாக தமக்கு முன்னமே தெரிந்திருந்ததாகக் கூறினார். அத்துடன் இந்த அரசாங்கம், நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தக் கரிசனையும் கொள்ளவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷவே இந்த நாட்டுக்கு உண்மையான காவல்தெய்வம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டிருந்தார். அவலை இடிப்பதாக நினைத்துக்கொண்டு உரலை இடித்த கதையாக, பீரிஸ் கூறிய இந்த விடயம் இந்த செய்தி குறித்த பரபரப்பை மேலும் தீவிரமாக்கியது.
அதாவது, இந்த கிளைமோர் வெடிகுண்டுகள் கொழும்பில் தமிழர்கள் செறிந்துவாழும் வெள்ளவத்தை பிரதேசத்துக்கு கொண்டுவரப்படவிருந்ததாக பீரிஸுக்கு
எவ்வாறு தெரிந்திருந்தது, அவ்வாறு அந்தத் தகவலை தெரிந்திருந்த பீரிஸ், அதனை நாட்டின் பாதுகாப்பு கருதியாவது படைத்தரப்பிடம் ஏன் சொல்லவில்லை. இப்படியான தகவல்களை மறைத்த குற்றத்துக்காக, தமிழ் இளைஞர்கள் பலர் அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, பீரிஸ் மிகச்சுலபமாக இந்த தகவல் தனக்கு முதலிலேயே தெரியும் என்று கூறினால், இவரை முதலில் புனர்வாழ்வுக்கு அனுப்பவேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பின் எம்.பி. சிறிதரன் கருத்து வெளியிட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் பீரிஸ், இந்தச் செய்தி தொடர்பாக பின்னர் விசாரணைக்க உட்படுத்தப்பட்டமை வேறுகதை.
ஆனால், படைத்தரப்பின் ஊடாக இவ்வாறான செய்திகளை பூதாகரப்படுத்தும் நோக்கம் என்ன, முப்பது வருடங்களாக போர் நடைபெற்ற நாடொன்றில் இவ்வாறு வெடிகுண்டுகள் மீட்கப்படுவதும் போரின் எச்சங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுவதும் வழக்கம்தானே. அப்படியானால், இந்த செய்திகளை முக்கியத்துவப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் என்ன?
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைவுக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது. போரின்போது இடம்பெற்றதாக கருதப்படும் குற்றங்களுக்கு பரிகாரம் செய்யும்வகையில், உள்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ள பொறிமுறை நடவடிக்கையில் எவ்வளவு தூரம் இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் முன்னகர்ந்திருக்கிறது என்பது தொடர்பாக வாய்மூல அறிக்கை ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இலங்கை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்.
இந்த உள்நாட்டுப் பொறிமுறையில் மிக முக்கிய விடயங்களாக, வடக்கு, கிழக்கில் படைக்குறைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை நோக்கிய ஆயத்தங்கள் என பல விதந்துரைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் அல்லது பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட அம்சங்கள் என்று எடுத்துப்பார்த்தால், அவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகவும் குறைவு. இது குறித்து ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரே அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் படைக்குறைப்பு விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காணமல்போனவர்கள் விவகாரத்தில் அரசுத்தரப்பிலிருந்து ஆரோக்கியமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 'காணாமல்போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு மரண சான்றிதழும் குடும்பங்களுக்கு நட்டஈடும் தரப்படும்' என்றும் பிரதமர் ரணில் கூறியிருக்கிறார். அரசியல் கைதிகள் விடயத்திலும் எந்த விடுதலையும் இடம்பெறவில்லை. அவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் சில வெற்று உறுதிமொழிகளுடன் தமது போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். போரினால், தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் அல்லது அதற்கான சமிக்ஞைகள் ஏதாவது ஏற்படும் என்றால் அதுவும் இல்லை.
இவ்வாறு எந்த முன்னேற்றமும் மேற்கொள்ளப்படாமல், வெறும் காகிதத்தில் மாத்திரம் தீர்மானத்தை எழுதிவைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஜூன்மாதம் ஐ.நா. அவையில் சென்று என்ன பதில் கூறப்போகிறது என்பது குறித்து பல தரப்பினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இந்தமாதிரியான நிலையில், நாட்டில் இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் ஆபத்து ஓய்ந்துவிடவில்லை என்றும் காண்பிக்கும் நோக்கத்துடனும், இந்தக் காரணங்களுக்காகத்தான் தாம் படைக்குறைப்பை மேற்கொள்ளவில்லை என்றும் ஐ.நா. தீர்மானத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலாமாலிருப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் முன்பாக சாக்குப் போக்குக் கூறுவதற்கு இப்படியாக சில்லறைத்தனமான காரியங்களில் படைத்தரப்பும் அரசாங்கமும் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.
மஹிந்தவின் கூடாரங்களில் உள்ளவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட படைத்தரப்பினரும் தமது கடந்த காலக்குற்றங்கள் எந்த வழியாலும் வெளித்தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படியான நடவடிக்கைகளில் தீவிரமாகியிருக்கலாம்.
ஆனால், இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக சர்வதேச அரங்கில் உறுதியளித்த பிரமாணத்தின் தாற்பரியத்தை இவ்வாறான வஞ்சக நோக்கங்களுடன்தான் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போவதாக தீர்மானித்திருக்கிறதா?
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அறிக்கைகளில் மாத்திரம் பதில் கொடுத்துவிட்டிருக்காமல், தமிழ் மக்களின் தார்மீக எதிர்பார்ப்புக்களை எடுத்துக்கூறி காலதாமதம் இல்லாத பொறிமுறை செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago