2025 மே 16, வெள்ளிக்கிழமை

மின் செயலிழப்பும் பொறுப்பற்ற எதிர்வினைகளும்

Thipaan   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் நடக்காதளவுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நாடாளாவிய ரீதியிலான மின் செயலிழப்புக் காணப்பட்டது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிக நீண்ட நேரம் ஏற்பட்ட மின் செயலிழப்பாக, 6 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த மின் செயலிழப்பு அமைந்தது. யுத்தக் காலத்தில் கூட ஏற்பட்டிருக்காத மின் செயலிழப்பு, நாட்டில் யுத்தமற்ற நிலை ஏற்பட்டு, அமைதி நிலவுகின்ற நேரத்தில் ஏற்பட்டமை, பலரது சினத்தைச் சந்தித்திருந்தது.

இலங்கை மின்சார சபையின் அண்மைய தரவுகளின்படி, இலங்கையிலுள்ள 7 மாவட்டங்களில் 100 சதவீதமான வீடுகளுக்கு மின்சார இணைப்புக் கிடைக்கப்பெற்றுள்ளது. நான்கே நான்கு மாவட்டங்களில் தான் 90 சதவீதத்தை விடக் குறைவானளவுக்கு மின்சார இணைப்புக் காணப்படுகிறது. குறைந்தளவு மின்சார இணைப்பைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கூட, 84 சதவீதமான வீடுகளுக்கு மின்சார இணைப்புக் காணப்படுகிறது. அந்தளவுக்கு, இலங்கையில் மின்சாரப் பாவனையென்பது மக்களின் வாழ்வில், பின்னிப்பிணைந்து காணப்படுகிறது.

ஆகவே, முன்னரே திட்டமிடப்படாத அல்லது அறிவிக்கப்படாத மின் செயலிழப்பென்பது, ஒரு வகையான சினத்தை உருவாக்குவதில் அதிசயமேதுமில்லை. எனவே, உடனடி எதிர்வினைகள், இலங்கை மின்சார சபைக்கும் அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கத்துக்கும் எதிரானவையாக இருப்பதிலும் அதிசயமேதுமிருந்திருக்கவில்லை. ஆனால், மின் செயலிழப்பு ஏற்பட்ட பின்னர், முன்னர் அறிவிக்கப்படாத மின் செயலிழப்புகள் தொடர்ந்தும் ஏற்பட, மின்சார சபை மீதான எதிர்ப்பென்பது அதிகரித்து, நம்பிக்கையற்ற நிலையொன்றை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிவிக்க முடியும்.

ஊடகங்களிலும் சமூக ஊடக இணையத் தளங்களிலும் வட்ஸ்அப் குழுமங்களிலும் அலுவலகங்களிலும், கோபமும் நம்பிக்கையற்ற தன்மையும் அதிகம் நிலவ, உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பகிரப்பட்டிருந்தன.

'ஒரேயொரு உப மின் நிலையத்தில் மாத்திரமா ஒட்டுமொத்த நாட்டின் மின்சார விநியோகமும் தங்கியிருக்கிறது? எவ்வளவு ஆபத்தான நிலைமை', 'சம்பூர் நிலக்கரி நிலையத்தைக் கொண்டுவருவதற்காக மக்களைச் சம்மதிக்க வைக்கும் செயற்பாடு தான் இது', 'முன்னாள் அரசாங்கத்தாலேயே நுரைச்சோலை உருவாக்கப்பட்டது.

அதனால் தான் அது அடிக்கடி செயலிழக்கிறது', 'மின்சார சபையின் பொறியியலாளர்கள், பராமரிப்புப் பணிகளைப் பொறுப்பாகச் செய்வதில்லை. அதனால் தான் இந்நிலை ஏற்பட்டது', 'முன்னைய அரசாங்கக் காலத்தில், இவ்வாறான மின் செயலிழப்பு ஏற்பட்டிருந்ததில்லை. புதிய அரசாங்கத்தின் முகாமைத்துவமின்மையால் தான் இந்நிலை ஏற்பட்டது' போன்றனவெல்லாம், அண்மைய சில நாட்களாக, மக்களால் பகிரப்பட்ட கருத்துகளாக இருந்தன.

இந்நிலைமை தொடர்பாக மின்சார சபையில் பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளிடமும் இதுபற்றிய புலமையுள்ளவர்களிடமும் கலந்துரையாடியபோது, அவர்களால் வழங்கப்பட்ட பதில்களும் விளக்கங்களும், சாதாரண மக்களால் புரிந்துகொள்ளப்பட்ட அல்லது புரிந்துகொள்ளப்பட்டதாக எண்ணப்பட்ட விடயங்களை விட அதிகம் வேறானவையாக இருந்தன.

இலங்கைக்கு, தேசிய மின் வலையமைப்பினாலேயே மின் வழங்கப்படுகிறது. அதாவது, கொழும்புக்கான மின்னென்பது ஓர் இடத்திலும் யாழ்ப்பாணத்துக்கான மின்னென்பது இன்னோர் இடத்திலிருந்தும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக, எல்லா இடங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மின், தேசிய வலையமைப்புக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இலங்கை முழுவதும் அனுப்பப்படுகிறது. அதில் நுரைச்சோலையென்பது, 900 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் base load power plant என்று சொல்லப்படுகின்ற, பிரதானமாக இயங்கும் மின் நிலையமாகும். இவ்வாறான மின் நிலையங்கள், எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

நுரைச்சோலையில் ஏற்பட்ட பழுது தான், முழுக்குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது. மின் விநியோகத்தில், தேவைப்படுகின்ற அளவும் (கேள்வி), விநியோகிக்கப்படுகின்ற அளவும் எப்போதுமே சமனானதாக இருக்க வேண்டும். ஆனால், கேள்வியில் திடீரென்று குறைவு ஏற்பட, சமநிலை பாதிக்கப்பட்டு, நுரைச்சோலையால் முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது, நுரைச்சோலைக்குரிய இயல்பு மாத்திரம் கிடையாது. மாறாக, உலகிலுள்ள அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இந்நிலை பொதுவானது. இவ்வாறான நிலையில், நுரைச்சோலை முழுவதுமாக மீளச்செயற்பட ஆரம்பிக்க, ஒரு வாரமளவில் எடுப்பது வழக்கம். இதன்போது தான், பியகமவிலுள்ள உப மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், இலங்கை பயனர்களால் கோரப்படும் மின்னின் அளவு, இலங்கையின் தேசிய மின் வலையமைப்பால் வழங்கப்படக்கூடிய மின்னின் அளவை விட அதிகரித்தது.

தராசொன்றில் ஒரு பக்கம் மிக அதிகமான நிறை காணப்பட்டால், அத்தராசு சமநிலையை இழந்து, ஒருபுறம் சரிந்து போவதைப் போன்று, சமநிலைக் குழப்பத்தால் இங்கும் மின் செயலிழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மின்னை வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றாலும், மீண்டும், வழங்கலை விட கேள்வி அதிகமாக இருந்ததால், திரும்பத் திரும்ப மின் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்விடயத்தில் வைக்கப்பட்ட வினா அல்லது விமர்சனம் என்னவெனில், நிலக்கரி மின் நிலையமென்பதால் தான் இந்நிலை ஏற்பட்டது. சூரியக்கலம் அல்லது வழக்கமான நீர் மின் உற்பத்தி முறையைப் பயன்படுத்தியிருந்தால் இந்நிலை ஏற்படாது என்பதாகும்.

கடந்த சில ஆண்டுகளாக, இலங்கையின் நீர் மின் உற்பத்திக்கான வளங்கள் குறைவடைந்து வந்துள்ளன. அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாகவும் ஏனைய காரணங்களுக்காகவும், நீர் மின் சக்தி மூலம், போதியளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அத்தோடு, வானிலையில் இது தங்கியிருப்பதன் காரணமாக, தொடர்ச்சியான மின்சாரமென்பது கடினமானது. உதாரணமாக, இலங்கை மின்சார சபையின் நீர் மின் நிலையங்கள் மூலமாக 2011ஆம் ஆண்டில் 3,972.672 GWh சக்தியும் 2012இல் 2,726.723 GWhஉம் 2013இல் 6,10.099 GWh சக்தியும் 2014இல் 3,649.721 GWh சக்தியும் உருவாக்கப்பட்டிருந்தது. நீர் மின் சக்தியில் பிரதானமாக நம்பியிருந்தோமானால், 2012ஆம் ஆண்டில் மோசமான மின் தடையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சூரியக்கலத்தைப் பயன்படுத்தித் தேசிய மின் உற்பத்தியென்பது இலகுவானது போன்று தோன்றினாலும், இலங்கையைப் பொறுத்தவரை பொருத்தமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்து 900 மெகாவொட் சக்தி உற்பத்தியாகிறது. சூரியக்கலம் மூலம் 1 மெகாவொட் சக்தியை உருவாக்குவதற்கு, 4 ஏக்கரில் சூரியக்கலங்களை நிறுவ வேண்டும். 900 மெகாவொட் சக்தியை உருவாக்க, 3,600 ஏக்கரில் சூரியக்கலங்கள் நிறுவ வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தின் பரப்பளவு ஏறத்தாழ 9,200 ஏக்கராகும். அதன்படி, கொழும்பின் பரப்பளவின் ஏறத்தாழ 40 சதவீதமான அளவுக்கு சூரியக்கலங்களை நிறுவினாலேயே, நுரைச்சோலை அளவுக்கு சக்தியை உற்பத்தி செய்ய முடியும். அத்தோடு, நீர் மின்னை விட, வானிலையில் இன்னமும் அதிகம் தங்கியிருக்கும் ஒன்றாக சூரியக்கலம் காணப்படுகிறது. இவற்றைவிட மேலதிகமாக, இதன் ஆரம்பச் செலவென்பது மிக மிக அதிகமானது.

இதன்படி, இலங்கையின் தற்போதைய நிலையில், நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரமே, இலாபகரமானதாகவும் யதார்த்தமானதாகவும் காணப்படுகிறது. இலங்கையில் மின் உற்பத்திக்கான இயற்கை வளங்களின் குறைவான தன்மை காரணமாக, நிலக்கரியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை, இலங்கைக்கு உண்டு.

நுரைச்சோலையிலோ அல்லது பியகமவிலோ, இவ்வாறான பாரிய மின் உற்பத்திஃமாற்றல் செயற்பாடுகள் இடம்பெறும்போது, உபகரணங்கள் பழுதடைதலென்பது அவ்வப்போது இடம்பெறத் தான் போகிறது. மனிதர்களுக்கு எவ்வாறு நோய் வருகிறதோ, அவ்வாறு உபகரணங்களுக்கும் பழுது ஏற்படுவது சாதாரணமானது.

அடிக்கடி நோய் ஏற்படுதல் ஆபத்தான நிலைமை என்பதைப் போல, அடிக்கடி பழுது ஏற்படுதல் ஆபத்தானது தான். ஆனால், இன்னமும் அந்த நிலைமையை இலங்கை எட்டவில்லை என்பது தான் நிபுணர்களின் கருத்து. இவ்வாறான நிலைமையைத் தவிர்ப்பதற்காகத் தான், இன்னொரு நிலக்கரி மின் நிலையம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டது. அது சம்பூரில் அமைக்கப்படுவது தான் சிறந்ததா அல்லது பொருத்தமானதா என்பது கேள்விக்குரியதொன்றாக இருந்தாலும், புதிதாக அமைக்கப்படப் போகும் மின் நிலையத்தால், இவ்வாறான நீண்ட மின் செயலிழப்புகள் இல்லாது செய்யப்படலாம்.

ஆகவே, மின் செயலிழப்புக் காரணமாக ஏற்பட்ட சினம் என்பது புரிந்துகொள்ளப்படக்கூடியது என்ற போதிலும் அதனை வெளிப்படுத்திய விதத்தில் நாமெல்லோரும் தவறிழைத்திருக்கிறோம் என்பது தான் உண்மை. இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான எதிர்வினையொன்றை நாம் முன்வைக்க நினைத்தால், மின் நெருக்கடி காணப்படுகின்ற இந்தச் சில நாட்களிலாவது, மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெருக்கடி நிலையை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த விடயத்தில், முக்கியமானதொரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். மின்சார சபையின் பொறியியலாளர்களிலோ அல்லது ஏனைய அதிகாரிகளிலோ தவறென்று சுட்டிக்காட்டத்தக்க எதையும் கண்டுகொள்ள முடிந்திருக்கவில்லை என்ற போதிலும், மின் செயலிழப்புக் காலத்தில், மின் செயலிழப்புப் பற்றிய அதிகமான விவரங்களை, இலகு மொழியில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை, அச்சபை மீது முன்வைக்க முடியும். அந்தக் குற்றச்சாட்டு, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் மீதும் வைக்கப்பட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .