2025 மே 16, வெள்ளிக்கிழமை

மிருகபலித் தடையும் ஆபத்தான சிந்தனைகளும்

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் மிருகபலியில் ஈடுபடுவதற்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தமையைத் தொடர்ந்து, அது தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்துள்ளன. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் மீதான எல்லா விமர்சனங்களும் நீதிமன்ற அவமதிப்பாகாது என்ற போதிலும், இந்தத் தீர்ப்பு, இடைக்காலத் தடையுத்தரவு என்பதாலும் இது தொடர்பான வழக்கு, தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது என்ற காரணத்தாலும், அந்தத் தீர்ப்புச் சரியானதா என்பதைப் பற்றியதும் அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தானதுமான விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, மிருகபலி தொடர்பாகவும் அதற்கான இந்து ஆலயங்களின் எதிர்ப்புத் தொடர்பாகவும் இந்தப் பத்தி கவனஞ்செலுத்துகிறது.

குறிப்பாக, இந்த இடைக்காலத் தடையுத்தரவை வரவேற்றுள்ள அகில இந்து மாமன்றம், இந்த இடைக்காலத் தடையுத்தரவு, 'சைவ சமயத்தின் உன்னதக் கொள்கைகளையும் ஆலயத்தின் புனிதத் தன்மையையும் மேம்படுத்த உதவும்' எனத் தெரிவித்ததோடு, மிருகங்களைப் பலியிடுதலை, மூடநம்பிக்கை என விளித்துள்ளது. ஆகவே தான், இது தொடர்பான கலந்துரையாடலொன்று அவசியமாகின்றது.

முதலாவதாக, மிருகபலியிடுதலை மூட நம்பிக்கை என இந்து சமயத்தோடு தொடர்புடைய பொறுப்புவாய்ந்த சங்கமொன்று அழைத்திருப்பது விநோதமானது, கோபங்களை ஏற்படுத்தக்கூடியது.

காலாகாலமாக, ஏராளமான மூட நம்பிக்கைகளை மக்களிடத்தில் விதைத்த சமயம் என்ற குற்றச்சாட்டு, சைவஃஇந்து சமயம் மீது காணப்படுகிறது. இப்போதும் கூட, சிலைகளுக்குப் பாலூற்றுவதையும் பழங்களால் அபிஷேகம் செய்வதிலும் தமிழ்க் கடவுள்கள் என்று சொல்லப்படக்கூடிய கடவுள்களுக்குக்கூட சமஸ்கிருத மொழியில் ஆராதனைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிற இந்து சமயம், மேற்கூறப்பட்ட எவற்றையும் மூட நம்பிக்கை அல்லது கேள்விக்குட்படுத்தக்கூடியது என்பது சிறிது விநோதமானது.

இன்றும்கூட, காவடி எடுத்தலையும் அலகு குத்துவதையும் தனது அங்கமாகக் கொண்டுள்ள சமயமொன்று, அவை எல்லாவற்றையும் மூட நம்பிக்கை எனக் கருதாது, விலங்குகளைப் பலியிட்டு, அவற்றை உண்ணுதலை மாத்திரம் மூட நம்பிக்கையாகக் காண்கிறது என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனையா என்ற கேள்வியை எழுப்பத்தவறவில்லை.

எந்தச் சமயமாக இருந்தாலும் இந்து சமயத்தில் இருக்கின்ற பிரிவுகளாக இருந்தாலும் சிறு தெய்வங்களாக இருந்தாலும், எல்லாவற்றினுடைய அடிப்படையும் ஆரம்பகட்டமும், நம்பிக்கை என்பதிலிருந்து தான் பிறக்கிறது. ஆகவே, ஆகம விதிப்படியான தெய்வங்களை ஏதோ விஞ்ஞானரீதியான தெய்வங்கள் போலவும், சிறு தெய்வங்களையும் அவற்றின் வழிபாடுகளையும் ஏதோ மூட நம்பிக்கை என்றும் ஒதுக்குவது, தவறானது. அனைத்துமே நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை தான்.

அடுத்ததாக, மிருகங்களைப் பலியிடுதலென்பது இந்து சமயத்துக்குரியது அன்று என்ற வாதத்தை நோக்குதல் அவசியமானது. இந்து சமயம் ஆகம விதிப்படி உருவாகியதன் பின்னரும்கூட, 64 நாயன்மாரில் ஒருவராக கண்ணப்ப நாயனார் கருதப்படுகிறார். பதப்படுத்திய பன்றி இறைச்சியை இறைவனுக்குப் படைத்ததாக, இந்துசமய புராணங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, அவரது பக்தியின் பெருமையை அங்கிகரித்து, பிராமணனொருவருக்கு அதை வெளிக்காட்டினார் எனவும் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்து சமயத்தின் ஒரு வகையான பிரிவில், மிருகங்களைப் பலியிடுதல் என்பது காணப்பட்டே வந்திருக்கிறது.

 

சமயங்களின் - குறிப்பாக இந்து சமயத்தின் - வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஆரம்பத்தில் கல்லையும் மரத்தையும் இன்னோரென்ன பொருட்களையும் வழிபட்டே, அதன் பின்னர் கடவுளுக்கென வடிவமொன்று ஏற்படுத்தப்பட்டு, வழிபாடு தொடங்கியது. அதேபோல, தற்போதுள்ள ஆகம விதிப்படியான கோயில்களிலுள்ள கடவுள்களை விட, கிராமியத் தெய்வங்கள் என்றழைக்கப்படுகின்ற கடவுள்களின் வரலாறு நீண்டது என்பது, வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து ஆகும்.

ஆனால், எப்போது இந்து சமயம் ஆகம விதிப்படியான கோயில்களையும் வழிபாடுகளையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியதோடு, அப்போதிருந்தே கிராமியத் தெய்வங்களை ஒதுக்கவும் ஒடுக்கவும் ஆரம்பித்தது. கிராமியத் தெய்வங்களுக்குச் சக்தியில்லை எனவும் கிராமியத் தெய்வங்கள், காட்டுமிராண்டித்தனமாவை எனவும் ஒதுக்கப்பட்டன. நவீனஃபெரிய தெய்வங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிராமத்தவர்கள் நம்பிவந்த கிராமியத் தெய்வங்களான சிறுதெய்வங்கள், சக்தி குறைந்தவை அல்லது உன்னதமற்றவை என்ற கருத்தாடலும் ஆரம்பித்தது. ஆனால், கிராமியத் தெய்வங்களோடு நெருங்கிப் பிணைந்திருந்த மக்கள், அந்த வழிபாட்டைத் தொடர்ந்தும் பேணி வந்தனர்.

இந்த வழிபாடுகளின் ஓர் அங்கமாகத் தான், பலியிடுதல் அல்லது காவு கொடுத்தல் என்ற செயற்பாடு காணப்படுகிறது. வரலாற்றுத் தகவல்களின்படி, ஆரம்பகாலத்தில் மனிதர்களையும் குழந்தைகளையும் பலிகொடுத்த சந்தர்ப்பங்கள் காணப்பட்ட போதும் (இப்போதும் உலகின் சில பகுதிகளில் அது அரிதாகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கவேண்டிய ஒன்று), அதன் பின்னர் மிருகங்களைப் பலியிடுதலாக அந்தக் காவுகொடுத்தல் மாறியது. இந்தப் பலியிடுதல் தான், தற்போது பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கிறது.

இந்து சமய அமைப்புகளின் விவாதம் என்னவெனில், இது இந்து சமய ஆகமங்களுக்கு அப்பாற்பட்டது என்பதோடு, கொடூரமானது எனவும் சமயத்தின் பெயரைக் கெடுப்பதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகமங்களுக்கு உட்பட்ட கோயில்களும் வழிபாடுகளும் தான் சரியானவை என்பதும் தவறு தான். ஏலவே சொல்லப்பட்டதன்படி, ஆகம வழிபாடு வருவதற்கு முன்பே, கிராமியத் தெய்வங்களுக்கான வழிபாடு ஆரம்பித்துவிட்டது.

அடுத்த முக்கியமான வாதம், மிருக பலியிடுதல் என்பது கொடூரமானது, நவீன உலகுக்குப் பொருத்தமற்றது, விலங்குரிமைகள் போன்ற காரணங்கள்.

மிருகங்களைப் பலியிடுதல் கொடூரமானது என்பதில் எந்தக் கேள்வியும் கிடையாது. உயிருள்ள, வலியை வெளிப்படுத்தக்கூடிய எந்தவோர் உயிரையும் துடிக்கத் துடிக்கக் கொல்லுதலென்பது, எப்போதுமே இரசனைக்குரிய விடயமாக இருக்காது. ஆனால், இங்கு மட்டும் தான் விலங்குகள் கொல்லப்படுகின்றனவா என்பது கேள்வியாக எழுகின்றது.

உலகில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், வெறுமனே 2 சதவீதம் பேர் மாத்திரமே அசைவ உணவுகளை உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். ஆக, ஏனைய 98 சதவீதத்தினருக்கான உணவாக, அசைவ உணவுகள் தயார்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான உயிர்கள் கொல்லப்படுகின்றன. தற்போது, பல்தேசிய நிறுவனங்களின் உடமைக்குச் சென்றுள்ள இறைச்சி உற்பத்தியில், கோழி, மாடு, பன்றி போன்றவை, கொடூரமான சூழலின்கீழ் வளர்க்கப்பட்டு, கொடூரமான வகையில் கொல்லப்படும் காணொளிகளையும் அறிக்கைகளையும் போதுமானளவில் பார்த்திருக்கிறோம்.

இங்கு கோயில்களில் பலியிடப்படும் விலங்குகள், அவற்றைப் பலிகொடுக்கும் வீடுகளில் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும். அந்த வீடுகளில் ஓர் அங்கத்தவர் போன்று வளர்க்கப்படும். பின்னர், ஒரே நாளில், அந்த ஊரிலிருக்கும் அத்தனை விலங்குகளும் வைத்துப் பலியிடப்படும்.

இங்கு பலியிடப்படும் எந்தவொரு விலங்கும், வீதியில் தூக்கி வீசப்படுவதில்லை. மாறாக, அவை அனைத்துமே அங்குள்ள கிராமத்தவர்களால் விலைக்கு வாங்கப்பட்டு உண்ணப்படும். ஆகவே, எந்தரீதியிலும் இந்த இறைச்சி வீணாக்கப்படுவதில்லை. இதற்கும் இறைச்சிக்கடைகளில் விலங்குகள் கொல்லப்படுவதற்குமிடையில் வேறுபாடுகள் கிடையாது.

ஆகவே, 'என்னுடைய நம்பிக்கை தான் சிறந்தது, உன்னுடைய நம்பிக்கை காட்டுமிராண்டித்தனமானது' என்ற எண்ணங்களையுடையோர், கிராமிய மக்களின் வழிபாட்டைத் தடுத்து நிறுத்துவதற்காக எடுக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மிருகபலி எவ்வாறு மூட நம்பிக்கையாகப் பார்க்கப்பட முடியுமோ, அவ்வாறே ஆகம விதிப்படியான கோயில்களில் இடம்பெறும் வழிபாடுகளையும் நடவடிக்கைகளையும் மூட நம்பிக்கையாகப் பார்க்கப்பட முடியும், ஏனெனில், ஏற்கெனவே சொல்லப்பட்டதன்படி, இவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குபவை. ஒருவருக்கு நம்பிக்கையென்பது, மற்றொருவருக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும்.

மிருக பலியிடல் நடவடிக்கைகளின் போது மாத்திரம் விலங்குரிமை எனக் கூச்சலிடுவோர், நாடு முழுவதும் மரக்கறி உண்ணும், மாமிச உணவைத் தவிர்க்கும் நிலைமையை உருவாக்கவா விரும்புகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறான நிலையொன்றை உருவாக்குவதற்கான எந்தவோர் உரிமையும், எந்தச் சமய நிறுவனத்தும் கிடையாது என்பது தான் உண்மை. ஆகவே, மிருகபலிக்கான இந்த இடையூறுகளையும் எதிர்ப்புகளையும், குறித்ததொரு வழிபாட்டு முயற்சிக்கான தடையென எண்ணாமல், ஒரு தொகுதி மக்களின் நம்பிக்கைகள் மீது, இன்னொரு தொகுதியினர் தங்கள் நம்பிக்கைகளைத் திணிக்க விரும்பும் முயற்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .