Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
முஸ்லிம்களின் சமூக அமைப்புக்களும் சமய இயக்கங்களும் மக்களை கூறுபோட்டது போதாது என்று, முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமக்கு வாக்களிக்கும் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். முற்றுமுழுதாக தங்களது அரசியல் இலாபம் கருதியும் தம்முடைய கதிரைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் மக்களை ஏமாற்றும் வேலையைத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். இது முதலாளித்துவத்தின் பிரித்தாளும் இயல்பைப் போன்றதாகும். ஆகவே, அரசியல் ரீதியாக மட்டுமன்றி சமய ரீதியாகவும் பிரதேச வாரியாகவும் முஸ்லிம்கள் பிளவுபட்டுப் போயிருக்கின்றனர்.
இரண்டு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் அப்படியே கிடக்கும். முஸ்லிம் தலைமைகள் பொதுவாகவே தமது கஜனாக்களை எல்லாம்; நிரப்பிக் கொண்டிருப்பார்கள்;. அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அதே பிரச்சினைகளை கையில் ஏந்திக்கொண்டு மக்கள் மன்றத்துக்;கு வருவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களை, மொத்தவியாபார அடிப்படையில் ஏமாற்றுகின்ற அரசியல் கட்சிகளும் சில்லறை வியாபார அடிப்படையில் விற்றுப்பிழைக்கின்ற அரசியல்வாதிகளும் உள்ளனர்.
எல்லா அதிகாரங்களையும் தமது கரங்களுக்குள் எடுத்து, எகத்தாளத்தில் இருந்த தலைமைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு அண்மைக்காலத்தில் நிறைய உதாரணங்கள் உள்ளன. அப்படியிருந்தும், பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளும் அதிகாரங்களை கைங்கரியப்படுத்தும் வேலைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். இச்சமூகத்தின் தலைவர்கள் தாமே என்றும் தமக்குப் பின்னாலேயே முழு சமூகமும் அணிதிரண்டு இருக்கின்றது என்றும் இவர்கள் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றமைதான் இதிலுள்ள வேடிக்கை. ஆனால் சமூகம் தன்பாட்டில் போய்க் கொண்டேயிருக்கின்றது.
முஸ்லிம்களின் அரசியலை மூன்று காலப்பகுதிகளாக பிரித்து நோக்கலாம். மர்ஹூம் அஷ்ரபின் காலம் மற்றும் அவருக்கு முன் - பின்னான காலங்களே அவையாகும். ஆனால், அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னரான காலத்தில் ஆளுக்கொரு கொள்கையும் ஊருக்கொரு கட்சியும் உருவாகிய போதும் இந்த சமூகத்திற்கு கிடைத்த பயன் என்று பெருமிதப்படுமளவுக்கு எதுவும் இல்லை. இப்போது ஊருக்கொரு கட்சி, அரசியல் இயக்கம், காங்கிரஸ்கள் உருவாகிவிட்டன. வெடில் பறக்கும் பேச்சுக்கள், வீர வசனங்கள், பெருமையடித்தல்கள் என தேர்தல் காலத்தை கழிக்கின்ற இவர்களால் கிடைத்த ஆகுமான பயனொன்றுமில்லை.
சமூக விடுதலை இயக்கச் செயற்பாடு, பேரம்பேசும் அரசியலாகி, சோரம்போகும் அரசியலாகி - இன்று முதலாளித்துவ அரசியலாக போய்க் கொண்டிருப்பதால், எந்த அரசியல்வாதியாலும் இச்சமூகத்தின் இன, மத, உரிமைசார் விடயங்களில் ஒன்றையும் அசைக்க முடியாதிருக்கின்றது என்பதை மக்கள் அனுபவ ரீதியாக கண்டுணர்ந்துள்ளார்கள்.
முஸ்லிம் சமூகம் விடுதலை பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் உருவாகி, பின்னர் கட்சியாகப் பரிணாமம் எடுத்தது. அதில் அரசியல் அபிலாசைகளும் சுயநிர்ணய தாகமும் ஏகத்திற்குக் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் கட்சிக்குள் வந்து சேர்ந்தவர்கள் 'போராளிகள்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டனர். போராளியாக கட்சிக்குள் வராதவர்கள்தான் கட்சியை இன்று கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள். தலைவர் அஷ்ரபின் மரணம் நிகழ்ந்த பிறகே, மு.கா பாசறையில் வளர்ந்தவர்களின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கியது. மு.காவில் உள்ள தற்போதைய தலைவர் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்றுள்ள எல்லாருக்கும் இது பொருந்தும்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்களின் அரசியல் கட்சி மட்டுமன்றி எல்லா அரசியல்வாதிகளின் நகர்வுகளும்; இன்று ஒரு சிலரின் சட்டைப் பைகளையே நிரப்பிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வியாபாரத்தை மேற்கொள்பவர்கள் மாதிரி, தேர்தல் காலம் வந்துவிட்டால் வாக்காளப் பெருமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களுக்கு தலைவர்கள் உலங்கு வானூர்திகளில் படையெடுக்கின்றனர். பகட்டுப் பேச்சை நம்புகின்ற மக்களும் இதுதான் கடைசி முறை, இதற்குப் பிறகு வாக்களிப்பதில்லை என்று கூறி, ஒவ்வொரு தடவையும் வாக்கை அளி(ழி)த்து விடுகின்ற வாக்காளர்களும் இச்சமூகத்தில் இருக்கும் வரைக்கும் இவர்களது பிழைப்பு ஓடுகின்றது.
பேரம்பேசும் ஆற்றல் என்ற சொல்லை மு.கா தேர்தல் காலத்தில் பயன்படுத்தும். ஆனால், ஹக்கீமின் தலைமையிலான பேரம் பேசல்களால் பெற்றுக் கொண்டவைதான் என்னவென்று புரட்டிப்பார்த்தால் எல்லாம் கிட்டத்தட்ட வெறுமையாகவே தெரிகின்றது. ஒன்றிரண்டு அமைச்சுப் பதவிகளும் அரை அமைச்சுப் பதவிகளும் கிடைத்ததும் சிலரின் வங்கிக் கணக்குகள் நிரப்பப்பட்டதையும் தவிர எதுவும் மிச்சமில்லை. எதிர்த்தரப்புக்கு இலாபம் தரக்கூடிய ஒரு வியாரபார கொடுக்கல் வாங்கலையே இவர்கள் பேரம்பேசும் சக்தி என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போலும்.
மு.கா மட்டுமல்ல, மற்றைய முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஹக்கீம் சரியில்லை என்று பிரிந்து வந்த அதாவுல்லாவும் ரிஷாட்; பதியுதீனும் ஹக்கீமுக்கு மாற்றமான என்ன பண்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள், எதனை சாதித்திருக்கின்றார்கள். இவர்களும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் பணம் சம்பாதிக்கவில்லை என்று கூறப்படுவதை மக்கள் நம்பப் போவதில்லை.
அவர்களுக்கு எங்கெங்கே என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன என்பதும் அதை எப்படி பெற்றார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். சமூகத்தின் பெயரில் அரசியல் செய்வதாகவும் சமூக பிரச்சினை ஒன்றை முன்வைத்து பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் காட்டிக்கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தை எவ்வாறு கையிலெடுக்கின்றார்கள் என்பது ஊரறிந்த இரகசியமே.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டபோது அஷ்ரப் பணம் படைத்தோரை தேடவில்லை. மாறாக சமூக விடுதலை பற்றிய முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர்களையே அவர் தேடினார். புகார்டீனை தேசியப்பட்டிலில் போட்டமை போன்ற ஓரிரு சம்பவங்கள் தவிர 'பணவசதியுடையவா'; என்று மாத்திரம் கருதப்;படும் எந்தவொரு நபரையும் அவர் கட்சிக்குள் எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால், மு.காவும் அஷ்ரபின் சிஷ்யர்கள் என்று கூறுவோரால் நடாத்தப்படும் பிற கட்சிகளும் போராளுகளுக்கும் உண்மையான தொண்டர்களுக்கும் அன்றி, பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் புகழ்பெற்றவர்களுக்கும், முக்கியத்துவம் அளிக்கின்றது.
முதலாளிகள் போட்ட முதலுக்கு இலாபம் தேட முனைவார்கள். அதுதான் முஸ்லிம் அரசியலில் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால், முழுச் சமூகத்தின் எதிர்பார்ப்பும் நாசமாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், மக்கள் இப்படியே இருக்கப்போவதில்லை. அவர்களது மனங்களில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை கடந்த 2 தேர்தல்களும் தெட்டத் தெளிவாக காட்டியது. இது நீண்டகாலத்தில் முஸ்லிம் அரசியலிலும் மாற்றங்களை கொண்டுவரலாம்.
'ஹக்கீமும் சரியில்லை, ஹக்கீம் சரியில்லை என்று கூறி, புதுக்கட்சிகள் திறந்த அதாவுல்லாவும் ரிஷாட்டும் கூட சரியில்லை' என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வருவார்களேயானால், மாற்று வழியொன்றை மக்கள் தேடுவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago