2025 மே 03, சனிக்கிழமை

மத்திய கிழக்கு அரசியலில் ரஷ்யாவின் புதிய பரிணாமம்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

ரஷ்ய-அரபு ஒத்துழைப்பு மாநாட்டின் ஐந்தாவதை கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்யா நடாத்தியிருந்தது. இம்மாநாடானது ரஷ்யா, அரபு நாடுகள் இணைந்து எவ்வாறாக மூலோபாய இலக்குகளை அடைவது, எதிர்காலத்துக்கான சவால்களை எவ்வாறு இணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. இதுவே முதல் தடவையாக ரஷ்ய-அரபு ஒத்துழைப்பு மாநாட்டின் அமர்வின் போது அரபு நாடுகளின் லீக்கிலிருந்து 14 அமைச்சர்கள், வட ஆபிரிக்கா ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு மாநாடாக இருந்திருந்தது. அரேபிய லீக் (ஈராக், சூடான், சோமாலியா) சபையின் மூன்று வெளிநாட்டு அலுவலக பிரதிநிதிகளும் துனிசியாவும் (தற்போதைய அரபு லீக் உச்சிமாநாடு தலைவர், அரபு லீக் செயலாளர் நாயகம்) இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை, ரஷ்யாவைத் தவிர்த்து மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும் என்பதனை இன்னொரு முறை பறை சாற்றியதாய் அமைந்திருந்தது.

ரஷ்யா 2015இல் சிரியாவின் உள்நாட்டு போரில் தலையிட்ட போது, அதன் அடிப்படை நோக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழித்தலே ஆகும். சிரியத் தலைநகர் டமாஸ்கஸை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்கிரமிக்க முனைப்பட்டபோது, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட்டின் அரசாங்கம் ரஷ்யாவிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே மத்திய கிழக்கில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருந்தது. 1990களுக்கு அண்மித்த காலப்பகுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தலைப்பட்டமைக்கு பின்னர் ரஷ்யா நேரடியாகவே இராணுவ ரீதியில் காய் நகர்த்தியமை 2015 சிரிய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஆகும். அதன்படி, ரஷ்யாவும் 2018 ஜனவரி மாதமளவில் சிரியாவிலிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளை தோற்கடித்ததுடன், தனது இராணுவ காய் நகர்த்தல்களை தவிர்த்து, தற்போது ஏழு ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறது.

ஐக்கிய அமெரிக்கா, ஏனைய மேற்கத்தேய நாடுகள் தொடர்ச்சியாக சமாதான உடன்படிக்கையை இஸ்ரேல், பலஸ்தீனத்து இடையில் மேற்கொள்ள தள்ளப்பட்டு, இன்னமுமே வெற்றிபெறாத இந்நிலையில் ரஷ்யாவின் புதிய நடவடிக்கை, குறித்த பிராந்தியத்தில் ரஷ்யா தனது செல்வாக்கை தொடர்ச்சியாக செலுத்த தலைப்படுவதை காட்டுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், ரஷ்ய துணைத் தூதர் விளாடிமிர் சப்ரோன்கோவ், விடிலி நாமுக்கின் ஆகியோர், பல தசாப்தங்கள் பழமையான இஸ்ரேலிய-பலஸ்தீனிய மோதல்களை தீர்க்க ரஷ்யா ஒரு முக்கிய பங்கைக் கொள்ளலாம். ஏனெனில் ரஷ்யாவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் சபையில் வீட்டோ அதிகாரத்தை வைத்திருக்கும் உறுப்பினராகவும் அதே சமயம் மத்திய கிழக்கு உறுப்பினராக உள்ளது. இந்நிலை இரு சர்வதேச அமைப்புகளிலும் அமெரிக்காவின் ஒரு தலைப்பட்ட - இஸ்ரேலின் தீவிர வலதுசாரி சக்திகளை ஆதரிக்கும் கொள்கைக்கு முரணாகாமல், ஆனால் சமாந்தரமாக, முக்கியமாக இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசாங்கத்துக்கு ஆதரவான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை தடுப்பதன் மூலம் இஸ்ரேலை மூலோபாய நிலையில் தனிமைப்படுத்துதல், இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையில் சாத்தியமான சமாதான உடன்படிக்கை முடுக்கிவிட காரணமாக அமையும் என ரஷ்யாவும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளும் கருதுகின்றன.

பிராந்திய நிலையில், ஈரான் ரஷ்யாவின் தலையீட்டை எதிர்க்கவில்லை என்ற போதிலும் ஹமாஸ் இயக்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆயுத, இராணுவ உதவியை கைவிடுவதாகவும் இல்லை. சவூதி அரேபியா பலஸ்தீனத்துக்கு நட்பு நாடாக இருந்தபோதிலும், அமெரிக்காவின் செயல்பாட்டாளராக மத்திய கிழக்கில் இருப்பது, ரஷ்யாவின் தலையீட்டை விரும்பாத நிலைக்கே அதனை இட்டுச்செல்லும். மேலும், ஈராக், யேமன், சிரியாவுடனான மோதல், ஈரானுடனான வல்லரசு தன்மை தொடர்பிலான போட்டி என்பன மேலும் சவூதி அரேபியாவை தனது நிகழ்ச்சி நிரலை தாண்டி வேறொரு வல்லரசு அரசு மத்தியகிழக்கில் தலையிடுவதை விரும்பாது. இந்நிலை, ரஷ்யாவின் சமாதான உடன்படிக்கையை எட்டுதல் தொடர்பிலான செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கமுடியாத நிலையிலேயே சவூதி அரேபியாவை பேணிக்கொள்ளும்.

துருக்கியை பொறுத்தவரை அது ரஷ்யாவின் வருகையை விரும்புவதுடன் அதுவே அமெரிக்கா - இஸ்ரேல் - துருக்கி - ரஷ்யா நிலைமைகளில் துருக்கிக்கு சார்பான நிலையை ஏற்படுத்தும் என விரும்புகின்றது. இஸ்ரேல் துருக்கியின் இராஜதந்திர உறவுகள் இன்னமும் சீராகவே இருக்கின்ற போதிலும், அதனை கட்டிகாப்பதால் வரும் நன்மைகளை விட, ரஷ்யாவுடன் சார்பாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றியே துருக்கி அண்மைக்காலத்தில் சிந்துகின்ற நிலைமை துருக்கி ரஷ்யாவின் சமாதான உடன்படிக்கை எட்டுதல் தொடர்பில் தரகராக இருத்தலை வரவேற்கும். துருக்கி, ஈரானை போலவே காட்டாரும் ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கிறது, ரஷ்யாவுடன் நெருங்கிய உறவினை பேணுகின்றது.

இவ்வாறு ஒரு சீரற்ற களநிலவரங்கள் மத்தியிலேயே ரஷ்யா மத்தியகிழக்கின் அரசியலில் தலையீடு செய்வது பார்க்கப்படவேண்டியதாகும். இது வெறுமனே சிரியா, இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்னையை தாண்டி, ரஷ்யாவின் தலையீடு குறித்த பிராந்தியத்தில் மேலதிகமாக ஏற்படுத்தப்படப்போகும் தாக்கங்கள், மற்றும் சிக்கல்கள் தொடர்பிலேயே இப்போது கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X