2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹிந்த அணியின் புதிய துருப்புச்சீட்டு

Thipaan   / 2016 மார்ச் 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுடன் எட்கா எனச் சுருக்கமாக அழைக்கப்படும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ள நிலையில், சிங்கள மக்களிடத்தில் இந்த உடன்பாட்டுக்கு எதிரான அலைகளை உருவாக்கும் தீவிர முயற்சிகளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

எட்கா உடன்பாட்டுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியவையல்ல. முதலில் எட்கா உடன்பாட்டைச் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இதேநிலை தொடர்ந்தால், இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறிவிடும் என்று எச்சரித்திருந்தார்.

அவரது அணியைச் சேர்ந்தவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறு வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள், இந்தியாவையும், இலங்கை அரசாங்கத்தையும் பெரிதும் கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பது உண்மை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் சீபா எனப்படும், விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் புதுடெல்லியின் முயற்சிகள், தோல்வியில் முடிந்த பின்னர் தான், புதிய அரசாங்கத்துடன் எட்கா உடன்பாட்டை செய்து கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, இந்த உடன்பாட்டுக்கான முயற்சிகளும் முளையிலேயே கருகிவிடுமோ என்ற கவலை புதுடெல்லிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவினது உதவிகளும் ஆதரவும் அதற்குத் தேவைப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் மீண்டும் சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகின்ற இலங்கை அரசாங்கத்துக்கு, அதனால் ஏற்படக் கூடிய இந்தியாவின் அதிருப்திகளைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு எட்காவில் கையெழுத்திடுவது அவசியமாக உள்ளது. இது இராஜதந்திர மற்றும் அரசியல் நிலையில் இருக்கின்ற நெருக்கடி.

அதைவிட, பெருமளவிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கைக்கு, அத்தகைய முதலீடுகளின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதையும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. மேற்குலக நாடுகளையும் பல்வேறு நிறுவனங்களையும் முதலிட அழைக்கும் போது, அந்த நிறுவனங்கள், தாம் எவ்வளவு நிதியை முதலிடுவது என்று தீர்மானிக்க முன்னதாக, தமது முதலீட்டுக்கான சந்தை வாய்ப்புக் கிடைக்குமா என்று தான் முதலில் ஆராயும்.

அதன் காரணமாகவே, மிகப்பெரிய சந்தை வாய்ப்புள்ள ஒரு நாடான இந்தியாவுடன், எட்கா என்ற பொருளாதார உடன்பாட்டைச் செய்து கொள்ள முனைகிறது இலங்கை அரசாங்கம். அதேவேளை, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்வதற்கு இலங்கை தயாராகி வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக, தாம் அந்த உடன்பாட்டைச் செய்து கொள்ள எத்தனிக்கிறது இந்தியா.

இந்த உடன்பாட்டினால் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைப்பது உறுதி. அதனால் தான் இந்தளவுக்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இருதரப்பு நலன்களையும் கருத்தில் கொண்டு தான் எட்கா உடன்பாடு செய்து கொள்ளப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இலங்கையர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் விடும், இந்தியாவின் மற்றொரு மாநிலமாகி விடும் என்றெல்லாம் மஹிந்த ஆதரவு எதிரணியினர், பீதியைக் கிளப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக, அவர்கள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனரா அல்லது இந்தியாவுடன் முட்டிமோத அவர்கள் தலைப்படுகின்றனரா என்று பார்க்க வேண்டியுள்ளது. இப்போதைய நிலையில் மஹிந்த ஆதரவு எதிரணியினருக்கு, தற்போதைய அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல, இந்தியாவின் மீதும் தான் எரிச்சலும் கோபமும் இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தும் ஐ.தே.கவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பது மஹிந்த அணியினரின் கனவாக இருக்கிறது.

அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்தது இந்தியா தான் என்ற கருத்தும் அவர்களிடம் இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள், இந்தியப் புலனாய்வு அமைப்பான ரோ, தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்குவகித்ததாக கூறியிருந்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் கூட கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய வம்சாவளி வாக்காளர்களை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் திருப்பி விட்டது ரோ தான் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி தம்மை இந்தநிலைக்குக் கொண்டு வந்த இந்தியா மீதும் இவர்களுக்கு அதிருப்தியும் கோபமும் இருப்பது இயல்பு தான். தமது ஆட்சி வீழ்த்தப்பட்டதைக்குக் காரணமான இரண்டு தரப்புகளையும் ஒரேநேரத்தில் பழிதீர்க்கக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது மஹிந்த தரப்பு.

எட்காவை எதிர்க்கின்ற மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், அந்த உடன்பாட்டை செய்ய முன்னர், 1988இல் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு கோர வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இதே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவுடன் சீபா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்காக பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

16 சுற்றுக்களாக அந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ அந்த நிபந்தனையை விதித்திருக்கவில்லை. புதுடெல்லியில் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதனுடன் பகையை வளர்க்க விரும்பாததால் தான், சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் அம்சங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அவர் கோரவில்லை.

அதுபோலவே, இப்போது எட்காவுக்கு எதிராக கருத்து வெளியிடும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக இருந்த போது தான், இந்தியாவுடன் சீபா உடன்பாடு செய்ய இணக்கம் ஏற்பட்டது. இதையெல்லாம் மறந்து விட்டுத்தான் அவர்கள் இந்த உடன்பாட்டை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதன்மூலம் இவர்கள் சாதிக்க முனைவது ஒன்றைத் தான், சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான பீதியை ஏற்படுத்தி, கொழும்பில் ஆட்சியைக் கவிழ்ப்பது தான் அது. பொதுவாகவே சிங்கள மக்கள் மத்தியில், இந்தியா தொடர்பான ஒரு சந்தேகமும் அச்சமும் இருந்து வருகிறது. இந்தியா, தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே நிற்கும் முடிவுகளை எடுக்கும் என்று சிங்கள மக்களின் பெரும்பாலானோரிடம் கருத்து உள்ளது.

தேவைப்பட்டால், இந்தியா தனது இராணுவ வல்லாண்மையைக் கொண்டு, திருகோணமலையையும் இலங்கையையும் தன் கட்டுப்பாட்டின் கொண்டு வந்து விடும் என்ற அச்சமும் உள்ளது.

பொதுவாகவே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள, பெரியளவில் படையாற்றலைக் கொண்டிராத நாடுகளுக்கு, அயலில் உள்ள பெரிய அல்லது வல்லாண்மை மிக்க நாடுகள் மீது இருக்கின்ற இயல்பான அச்சம் தான் இது. தமிழ் மக்களுக்கு தனிநாட்டைப் பிரித்துக் கொடுத்து விடப்போகிறது என்று அச்சத்துடன் பார்த்த சிங்கள மக்களிடம் இப்போது, சமஷ்டி ஆட்சியைக் கொடுத்துவிடப் போகிறது என்ற அச்சமும் காணப்படுகிறது. சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா தொடர்பாக இருக்கின்ற ஒருவித அச்சத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முனைகிறது மஹிந்த ஆதரவு அணி.

1987ஆம் ஆண்டு, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொண்ட போது, அதற்கு எதிராக எதிரணியினர் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அவர்கள் சிங்கள மக்களை உசுப்பேற்றி, ஜே.வி.பி கிளர்ச்சியை இன்னும் வலுவூட்டி எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தனர். ஆனால், ஜே.ஆர், போட்ட திட்டம் வேறானது. புலிகளை அழிப்பதற்காகவே அவர் இந்தியாவை அழைத்து வந்தார். அது முடியாமல் போனது வேறு கதை. எவ்வாறாயினும் ஜே.ஆரின் நோக்கம், புலிகளை அழிப்பது மட்டும் தான்.

அதுபோலவே, இப்போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்ள முனையும் அரசாங்கத்தை தோற்கடிக்க மஹிந்த அணி முயற்சிக்கிறது. இந்தியா பற்றிய அச்சமூட்டும் எண்ணங்களைக் கொண்டிருக்கின்ற சிங்கள மக்கள், இந்தியா தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகளுக்கு இலகுவாகவே அகப்பட்டுக் கொள்வார்கள். இதுதான், மஹிந்த அணியினருக்குத் தற்போது தேவைப்படும் விடயம்.

எப்படியாவது இன்னும் இரண்டு ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் கவிழும் என்று அடித்துச் சொல்லுகின்ற மஹிந்த அணியினர், அதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் எட்காவை கருதுகின்றனர். எட்கா மூலம் சிங்கள மக்களிடையே அரசுக்கு எதிரான கருத்துக்களையும் அலைகளையும் பரப்புவதன் மூலம், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கின்றனர்.

எதிரணியினரின் இந்த முயற்சி வெற்றி பெறுமா, எதிர்ப்புகளை மீறி எட்கா உடன்பாடு கைச்சாத்திடப்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .