2025 மே 01, வியாழக்கிழமை

முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம்

மொஹமட் பாதுஷா   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நன்றி மறத்தல் என்பது அரசியலில் சாதாரணமானது. கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுதல் என்பது சர்வசாதாரணமானது. முஸ்லிம் மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, எவ்வாறு ஏமாற்றுப் பேர்வழிகளாகச் செயற்படுகின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் தலைவர்கள், கட்சிகள், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவது தொடராகக் காணப்படுகின்றது. 

மஹிந்த ஆட்சியில் மட்டுமல்ல, இன்றைய ஆட்சியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 20 வருடகால ஆட்சியில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தை, அரசாங்கங்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. பேரம்பேசல் என்று சொல்லிக்கொண்டு, உண்மையிலேயே சோரம் போகின்ற அரசியலைப் புதுப்புது டிசைன்களில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. இதனால், நக்குண்டார் நாவிழந்தார் என்பதுபோல, அரசியல் தலைவர்களின் நிலை மாறியிருக்கின்றது. 

ஒரு தேர்தல் வரும்போது, அல்லது முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவைப்படும் சந்தர்ப்பத்தில், இந்தச் சமூகத்துக்கு என்ன தேவை என்பதைப் பகிரங்கமாக முன்வைத்து, ஒவ்வோர் உடன்பாட்டைக் காணாமல், மேலோட்டமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று பூசிமொழுகிய வார்த்தைகளைக் கூறிக்கொண்டும் எத்தனை அமைச்சு, பிரதியமைச்சு தருவீர்கள் என்ற பேரம் பேசலை மேற்கொண்ட வண்ணமும், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்கின்ற, கொடுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது கைவிடப்பட்டுள்ளனர். 

எழுத்துமூல உடன்பாடு எதுவுமின்றி, பெருந்தேசியக் கட்சிகளுக்கு முட்டுக் கொடுத்த காங்கிரஸ்கள் எல்லாம், காரியம் முடிந்த பிற்பாடு களற்றி விடப்பட்டுள்ளன. கையில் எந்தப் பிடியும் இல்லாமல், அதிகாரம் இருந்தும் எதையும் சாதிக்க முடியாமல், முஸ்லிம்களின் உரிமைகளை அரசாங்கத்திடம் தட்டிக் கேட்டுப்பெற முடியாமல், முஸ்லிம் தலைவர்கள், தளபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சுரணையற்றும் வேறுசிலர் நாதியற்றும் இருக்கின்றனர்.

நாங்கள்தான் மஹிந்தவைக் கொண்டு வந்தவர்கள் என்று தம்பட்டமடித்த அதாவுல்லா, றவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் போன்ற கட்சித் தலைவர்களாலும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளாலும், அவரது ஆட்சியில் இனவாதம் கொதித்தெழுந்தபோது, அதை முற்றாகத் துடைத்தெறிந்து, முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்ட எதுவும் செய்யமுடியவில்லை.  

அதுபோலவே, மைத்திரிபால சிறிசேனவை நாம்தான் ஜனாதிபதியாக்கினோம், ரணிலை சிம்மாசனம் ஏற்றினோம், நாம் கேட்பதையெல்லாம் அவர்கள் தருவார்கள்; பயப்படத் தேவையில்லை என்றவர்கள், முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவோம், இனவாதத்தைச் சிறையிலடைப்போம் என்ற ஆட்சியின் பங்காளிகளது நிலை மிகவும் பரிதாபமாக இருக்கக் காண்கின்றோம். 

ஒரு சமூகம், ஓர் இனக் குழுமம், தனித்துவ மத அடையாள மக்கள் பிரிவு என்றால், அதற்கு ஒரு தனியான கொள்கைக் கோட்பாடுகள், அரசியல் அணுகுமுறைகள் இருக்க வேண்டும். அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, ஒவ்வொரு தனிப்பட்ட அரசியல்வாதிக்கும் சமூகம் பற்றிய பிரக்ஞை (கொஞ்சமேனும்) இருக்க வேண்டும். 

அந்த வகையில், தேர்தல்கள் வரும்போதும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் சந்தர்ப்பத்திலும், முஸ்லிம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள், உரிமைசார்ந்த எத்தனையோ விடயங்களைச் சாதித்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், முஸ்லிம் தலைவர்களோ தளபதிகளோ, அதைப் பயன்படுத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளோ, பெரிதாக எதையும் தமிழ் மக்களுக்கு இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதென்னவோ நிஜம்தான். ஆயினும், பதவிநிலை அதிகாரங்களை வகுக்காமலேயே, ஏதோவொரு கொள்கையில் உறுதியாக நின்றுகொண்டு, தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களில் முஸ்லிம் தேசியத்தைவிட அதிகமான காய் நகர்த்தல்களைத் தமிழ்த் தேசிய அரசியல் செய்திருக்கின்றதென்பதை, யாராலும் மறுக்கவியலுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், அக்கட்சியின் ஆதரவை ஆட்சியாளர்கள் கோருகின்ற வேளைகளிலும், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களை எழுத்தில் முன்வைத்து, அதற்கு அக்குறிப்பிட்ட கட்சி எழுத்துமூலம் சம்மதம் தெரிவித்த பின்னரே ஆதரவளிக்கும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. 

முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறான ஒரு வழிமுறையைக் கையாள வேண்டும் என்றும் பேரம்பேசலை மேற்கொண்டு, எழுத்துமூல உடன்பாட்டின் அடிப்படையிலும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் இப்பக்கத்தில் நாம் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றோம். 2015 தேர்தல் காலம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளை, 52 நாள் நெருக்கடி காலம் எனப் பல தடவைகளில் இவ்வாறான வாய்ப்புகள் வந்தபோது, எழுத்துமூலமான நிபந்தனைக்கு உடன்பாட்டைப் பெறுமாறு வலியுறுத்தினோம். ஆனால், அதை முஸ்லிம் அரசியல் ஞானிகளும் சாணக்கியர்களும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 

ஒஓவ்வொரு முறையும், நாம் ஒரு குறிப்பிட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக, முஸ்லிம் தலைவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன, அதற்காக ஒப்பமிட்டுக்கொடுத்த ஆட்சியாளர் யார் என்பதை, வாக்களித்த முஸ்லிம் மக்களுக்குக் காட்டுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், உண்மையில் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இல்லை என்ற நிதர்சனமாகும். 

பதவிப் பட்டங்கள், இன்னபிற வரப்பிரசாதங்களைக் கேட்காமல், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து உடன்பாடு கண்டிருந்தால், அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது அரசாங்கத்துக்கு  இருந்திருக்கும். அவ்வாறில்லாவிடின், நீங்கள் ஒப்பமிட்டுத் தந்த ஆவணத்தில் உடன்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றித் தாருங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கு எமது சமூகத்தின் வாக்குகள் இனிமேல் கிடைக்காது என்று தைரியமாகச் சொல்லக் கூடியதாக இருந்திருக்கும். 

குறைந்தபட்சம், முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய இந்த வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையாலேயே நாம் எதிர்க்கின்றோம் என்று சொல்லலாம். அல்லது, உடன்பட்ட விடயங்களை நிறைவேற்றித் தந்தமையால் முஸ்லிம்கள் இந்தக் கட்சிக்கு மீண்டும் ஆதரவளிக்கின்றனர் என்றும் நியாயப்படுத்தலாம். இதன்மூலம், முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்த தெளிவு, சிங்கள மக்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருந்தது. ஆனால். மூடுமந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, எழுத்துமூலம் உடன்பாடு கண்டு, இவ்வாவணத்தை மக்கள் மயப்படுத்துவதில் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் மற்றைய அரசியல்வாதிகளும் மீண்டும் ஒரு தடவை தவறிழைத்த காரணத்தினால், இன்று காரியம் முடிந்த பிறகு அவர்களை இந்தச் சமூகமும் கணக்கெடுக்காமல் விடப்பட்டுள்ளனர். 

முஸ்லிம்களின் 10,000 ஏக்கர் காணிப் பிரச்சினையையாவது தீர்க்க முடியவில்லை. முஸ்லிம்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை மத அடையாளங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதை, முஸ்லிம்களின் ஆடை உரிமைகள் மறுதலிக்கப்படுவதை, இச்சமூகம் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்க முடியவில்லை. வைத்தியர் ஷாபியில் தொடங்கி - இன்று உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் வரையான முஸ்லிம் சமூக ஆளுமைகள், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமலேயே சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்கப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாமல்தான் போய்க் கொண்டிருக்கின்றது. மற்றைய, பெருந்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும், இதுதான் நடந்திருக்கும் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அந்தக் கட்சியிடமும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல்தான் இவர்கள் ஆதரவளித்திருப்பார்கள். 

பல முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்கள மக்களதும் தமிழர்களின் சில ஆயிரம் வாக்குகளுக்காகவும், பெருந்தேசியக் கட்சிக்கு நொந்துவிடக் கூடாது என்பதற்காகவும் மௌனமாக இருக்கின்றனர். இன்னும் சிலர், கடைசிகட்ட உழைப்பில் கவனமாய் இருக்கின்றார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய மூன்று பேருக்கும் குறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்தான், இவற்றையெல்லாம் தாண்டியும் சமூகத்துக்காக அத்திபூத்தாற்போல் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆயினும், நன்றிகெட்ட அரசாங்கத்திடம் நமது கோரிக்கைகளை நினைவூட்டி ஆட்டங்காணச் செய்ய, கையில் உடன்படிக்கை எதுவும் இல்லை என்பதாலும் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் நடப்பு அரசியல் குழப்பங்களால் சோர்ந்து போயுள்ளதாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள் என்பன, பரண்களின் மேல் போடப்பட்ட பழைய பொருளகள் போலக் கிடக்கின்றன. 

இந்த ஆட்சியும் முடிவடையப் போகின்றது. மைத்திரிக்கும் முஸ்லிம்களின் ஆதரவு தேவை. ரணிலுக்கும் அவசியம். மஹிந்தவும் வாக்குக் கேட்டு வருவார். இதுவும்கூட ஓர் அருமையான சந்தர்ப்பமாகவே தெரிகின்றது. ஆனால், இந்தக் கடைசித் தருணத்தைக்கூட முஸ்லிம் அரசியல் வித்தகர்கள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்வோர் பயன்படுத்த முனைவதாகத் தெரியவில்லை. இதைவிடவும் ஒரு கைசேதம் இருக்கின்றதா?

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்!

தொடர்ச்சியாக பெருந்தேசியக் கட்சிகளின் ஆட்சிக்கு மாறிமாறி முட்டுக் கொடுத்து வருகின்ற முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளின் தனிப்பட்டப் பிரச்சினைகள் தீர்ந்திருக்கலாம். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்றான போது, மீண்டும் மீண்டும் இவர்களுக்குப் பின்னால் போவதில் ஏதாவது அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. 

நவீன வடிவிலான ஆக்கிரமிப்புகள்

  கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது முன்னோர் வாக்காகும். எந்த மதத்தவர் என்றாலும், அவர்களுக்குரிய வழிபாட்டிடம் ஒன்று அவர்கள் வாழும் பகுதியில் இருப்பதே சிறந்ததாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் இல்லாத இடங்களில் வழிபாட்டுத் தலங்களை நிறுவுமாறு அல்லது மத அடையாளங்களின் ஊடாக அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ மேற்கொள்ளுமாறு யாரும் அறிவுறுத்தவில்லை. ஆனால், இலங்கையில் பரவலாக அது நடந்து கொண்டிருக்கின்றது.   

யுத்தம் முடிவடைந்த பிறகு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பௌத்த விஹாரைகள் புதிது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே காணப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பெரும் நிதிச் செலவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, கண்ட கண்ட இடங்களில் எல்லாம் திடுதிடுப்பென புத்தர் சிலைகள் முளைத்துள்ளன. 

உலகுக்கு அஹிம்சையைப் போதித்த கௌதம புத்தர் மீது, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பெரும் மரியாதை இருக்கின்றது. புத்தரின் நல்ல பல போதனைகள், மதம் கடந்தும் மதிக்கப்படுகின்றன. இலங்கையில் நிலைகொண்டுள்ள இனவாதம், புத்தரின் போதனைக்கு அப்பாற்பட்டது என்பதையும் முஸ்லிம்கள் அறிவார்கள். 

அப்பேர்ப்பட்ட ஒரு மஹானை வழிபடுவதற்காக ஒரு விகாரை அமைக்கப்படுவதை அல்லது புத்தரின் சிலை ஒன்றை நிறுவுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால், முஸ்லிம்களுக்கோ தமிழர்களுக்கோ எவ்விதப் பாதகமும் வரப்போவதுமில்லை. 

ஆனால் இன்று, அநேக இடங்களில் பௌத்த விஹாரை, சிலை, மடாலயம் அமைத்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகின்ற நகர்வுகள், பௌத்தத்தைப் பரப்பும், வழிபடும் அல்லது அம்மதத்தின் கொள்கைகளைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டவையாகத் தெரியவில்லை. மறுபுறத்தில், முஸ்லிம், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களுக்குள் சிங்கள மக்களைக் காலூன்றச் செய்வதற்கான நவீன ஆக்கிரமிப்பு உத்தியாகவே நோக்கப்படுகின்றது. 

முன்னொரு காலத்தில், குடியேற்றத் திட்டங்கள், எல்லை நிர்ணயங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம், சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்கின்ற இடங்களில் சிங்கள மக்களை அழைத்து வந்து  குடியேற்றினர். அதேபோல இன்று, பௌத்தத்தின் மேவிய தன்மையை இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எடுத்தியம்புகின்ற முயற்சிகளாகவே, சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் சிலைகள் வைக்கப்படுகின்றன. 

வடக்கு, கிழக்கில் பௌத்த வழிபாட்டு் தலங்களைச் சுற்றி சிங்கள மக்களின் நடமாட்டத்தையும் நீண்ட காலத்தில் குடியேற்றத்தையும் உள்நோக்காகக் கொண்டே, இவ்வாறான சிலை வைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சிறுபான்மையினர் அச்சம் கொண்டுள்ளனர். அவ்வாறான நிறைய உதாரணங்கள் அவர்கள் முன்னுள்ளன. வடமாகாணத்தின் பல இடங்கள் தொடக்கம் கிழக்கின் மாயக்கல்லி மலை தொட்டு, பொத்துவில் மண்மலைப் பிரதேசம் வரை, இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. 

இதற்குச் சமாந்திரமாக, தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்களின் கீழ் காணிகளைக் கொண்டுவரும் நடவடிக்கையும் பல இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பான யுத்தத்துக்குப் பின்னரான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இதன் பாரதூரத்தைப் புரிந்துகொள்ளலாம். 

எனவே, வழிபாட்டுத் தலம் அமைப்பதோ அரசாங்கம் காணிகளை கையகப்படுத்துவதோ தவறல்ல. ஆனால், அது முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான உள்நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதே, இந்தப் பத்தியின் வேண்டுதலாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .