2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா?

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தமிழ் மிரரின் விவரணக் குழு 

இலங்கையின் நாடாளுமன்றத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமை தான், இப்போதைய பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஜனாதிபதியின் நடவடிக்கை சரியானதா, தவறானதா என்பது தொடர்பான கேள்விகள் ஒருபக்கமாகவிருக்க, இவ்வறிவிப்பால் நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளது. 

என்ன நடந்தது? 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 2096/70 என்ற இலக்கத்தின் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியீட்டின் மூலமாக, அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி சிறிசேன அறிவித்தார். 

அத்தோடு, நாடாளுமன்றத்துக்கான தேர்தல், அடுத்தாண்டு ஜனவரி 5ஆம் திகதி இடம்பெறும் எனவும், தேர்தலுக்கான வேட்புமனுக்கள், இவ்வாண்டு நவம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

புதிய நாடாளுமன்றம், அடுத்தாண்டு ஜனவரி 17ஆம் திகதி கூடுவதற்கான அழைப்பை விடுப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்தார். 

விலக்குவதற்கான அறிவிப்பின் போது, இலங்கை அரசமைப்பின் “33ஆவது உறுப்புரை (2)(இ) உப உறுப்புரையின் மற்றும் அரசமைப்பின் 62ஆவது உறுப்புரையின் (2) உப உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கவேண்டியுள்ள அரசமைப்பின் 70ஆவது உறுப்புரையின் (5) ஆவது உப உறுப்புரையின் கீழ், எனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் வண்ணம் மற்றும் 1981ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக” இந்த அறிவிப்பை விடுப்பதாக, ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். 

இந்த அறிவிப்புச் சரியானதா என்பதைப் பார்ப்பதற்கு முன்பதாக, இதற்கான பின்னணியைப் பார்த்தல் அவசியமானது. 

நடந்ததற்குப் பின்னணி 

இலங்கையின் பிரதமராக, 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முதல் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, அவரது பதவியிலிருந்து அகற்றுவதாக, கடந்த மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி சிறிசேன வெளியிட்ட அறிவிப்பே, இப்பிரச்சினைகளுக்கான பின்னணியின் முக்கிய ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 9, 2015 முதல் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்தாலும், அதே ஆண்டு ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவர், பிரதமராக மீண்டும் பதவியேற்றிருந்தார். 

அதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில், இணக்கப்பாடொன்று ஏற்பட்டு, தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. 

எனினும், ஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கிய நிலையில், அதன் உச்சக்கட்டமாக, ஒக்டோபர் 26ஆம் திகதி, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதாக, ஜனாதிபதி சிறிசேன அறிவித்தார். அவரது அந்நடவடிக்கையே, அரசமைப்புக்கு முரணானது என்பது தான், சட்ட அறிஞர்கள் பலரின் கருத்து. 

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து அகற்றியதோடு மாத்திரமல்லாமல், பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தார். என்றாலும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க, 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவையென்ற நிலையில், எதிரணியிலிருந்து ஒரு சில உறுப்பினர்களைத் தம்வசம் இழுத்தாலும், 113 என்ற எண்ணிக்கையை அடைவது கடினமாகவே காணப்பட்டது. என்றாலும், எதிர்வரும் 14ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில், தமது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக, மஹிந்த - மைத்திரி தரப்புத் தெரிவித்து வந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை காலையில், தமது தரப்புக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை, அத்தரப்பின் பேச்சாளர்களில் ஒருவராகச் செயற்பட்டு வந்த கெஹெலிய றம்புக்கெல்ல ஏற்றுக்கொண்டார். அன்றைய தினமும், ஜனாதிபதி சிறிசேனவும் “பிரதமர்” ராஜபக்‌ஷவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதோடு, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, அன்றிரவு அறிவிக்கப்பட்டது. 

இதிலென்ன பிரச்சினை? 

ஏற்கெனவே சொன்னதைப் போலவே, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கும், ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்பது தான், பொதுவான கருத்தாக உள்ளது. இதற்கு மத்தியில், தன்னால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு உதவியாக, எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக/ விலைக்கு வாங்குவதற்காகவே, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன ஒத்திவைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால், நாட்டின் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் அவர் சம்பாதித்திருந்தார். 

இவற்றுக்கு நடுவில் தான், அவருக்கு அதிகாரமில்லை எனக் கருதப்படும் விடயமான, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் செயலையும், ஜனாதிபதி சிறிசேன செய்திருக்கிறார். 

இதற்கு முன்னர், விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இருந்தது தானே? இதே ரணிலின் ஆட்சியை, முன்னர் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலைத்தார் தானே? இப்போதென்ன, அதிகாரமில்லை என்ற புதிய தகவல் வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழக்கூடும். 

அரசமைப்பின் 19ஆவது திருத்தம் 

இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தம், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தம் மூலமாக, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியின் பல அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டவற்றில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் ஒன்றாகும். (பிரதமரை நீக்கும் அதிகாரமும் இதில் தான் இல்லாமற்செய்யப்பட்டது) 

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பின்னர், அத்தியாயம் XIஇல் உள்ளடங்கியுள்ள உறுப்புரை 70இன் 1ஆவது உப பிரிவு, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கான நிபந்தனைகளை முன்வைக்கிறது. 

“ஜனாதிபதி, பிரகடனத்தின் மூலம், நாடாளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம், அமர்வை நிறுத்தலாம், அத்துடன் கலைக்கலாம்; 

“ஆயினும், ஜனாதிபதி, நாடாளுமன்றம் அதன் முதல் கூட்டத்துக்காக நியமித்த திகதியிலிருந்து நான்கு ஆண்டுகள், ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலப்பகுதி முடிவுறும் வரை, நாடாளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையின் (சமுகமளிக்காதோர் உட்பட) மூன்றிலிரண்டுக்குக் குறையாத உறுப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானமொன்றால் அங்ஙனம் செய்யுமாறும், நாடாளுமன்றம், ஜனாதிபதியை வேண்டினாலொழிய, அதைக் கலைத்தலாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலகுவான மொழியில் சொல்வதானால், இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரம் தான், நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியும். 

1. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்துக்கான திகதியிலிருந்து நான்கரை ஆண்டுகள் நிறைவேறிய பின்னர். 

2. நாடாளுமன்றத்தில் ஆகக்குறைந்தது 150 உறுப்பினர்கள் வாக்களித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு வேண்டுதல். 

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம், 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி இடம்பெற்றது. எனவே, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு 3 ஆண்டுகளும் 2 மாதங்களும் 8 நாள்களும் ஆகியிருந்த நிலையில், அது கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, முதலாவது நிபந்தனை பூர்த்திசெய்யப்படவில்லை. 

நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 150 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு, ஜனாதிபதிக்குத் தீர்மானமொன்றை நிறைவேற்றி வழங்கியிருக்கவும் இல்லை. உண்மையில், கடந்த 26ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியதற்குப் பின்னர் தான், பிரதமர் மாற்றம் திடீரென இடம்பெற்றது. எனவே, அப்படியான தீர்மானமொன்று கருத்திற்கொள்ளப்படவே இல்லை. 

அப்படியானால், அரசமைப்பை மீறினாரா ஜனாதிபதி? 

ஆமாம் என்பது தான், பெரும்பான்மையான சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகக்குறைந்தது 2 விடயங்களில், அரசமைப்பை அவர் மீறியிருக்கிறார். பிரதமர் ரணிலை நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கை, அதில் முதலாவது. இரண்டாவதாக, நாடாளுமன்றத்தின் அங்கிகாரமின்றி அதைக் கலைப்பதற்கான நடவடிக்கை. 

இந்நிலையில், ஜனாதிபதியின் நடவடிக்கைகெதிராக, உயர்நீதிமன்றத்தை இன்று (12) நாடவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன, இதுவரை அறிவித்துள்ளன. எனவே, நீதிமன்ற மோதல்கள், அதற்கு வெளியேயான மோதல்கள் என, நாடே பதற்றமானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தவறென்று தெரிந்தால் ஏன்? 

ஜனாதிபதியின் நடவடிக்கைகள், தவறென்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஜனாதிபதியும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களும், ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சரியானவை என்று வாதிடுகிறார்கள். பிரதமரை நீக்கும் அதிகாரம் உள்ளது என, சிங்கள மொழிமூல அரசமைப்பை வைத்துக்கொண்டு கூறப்பட்டது. அவ்வாதமும் பெரிதளவுக்கு எடுபட்டிருக்கவில்லை. இப்போதும், நாடாளுமன்றத்தை நீக்கும் அதிகாரம் உள்ளது என, அவர்கள் வாதிடுகிறார்கள். 

அரசமைப்பின் 70ஆவது உறுப்புரையின் படி, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், 33ஆவது பிரிவில், ஜனாதிபதியின் கடமைகள் என்ற பகுதியில், “நாடாளுமன்றத்தைக் கூட்டுதல், அமர்வு நிறுத்தல், அத்துடன் கலைத்தல்” ஆகியன குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்பினர், இதில் நிபந்தனைகளேதும் இல்லை என்பதால், எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உரிமை, ஜனாதிபதிக்கு உள்ளது என்கின்றனர். 

நியாயமான வாதம் தானே? 

இல்லை. ஜனாதிபதியின் கடமைகள் என்று, மேலோட்டமான விடயங்களைத் தான் அப்பகுதி குறிப்பிடுகிறது. அப்பகுதிக்கான நிபந்தனைகள், உறுப்புரை 70இல் தான் வருகின்றன. உறுப்புரை 70ஐ விட உறுப்புரை 33 முக்கியமானது என்று, எமக்கு விரும்பியபடி உறுப்புரைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பது தான், சட்ட நிபுணர்களின் வாதம். 

இதை விளங்கவைப்பதற்காக, இலகுவான உதாரணமொன்றைப் பயன்படுத்த முடியும். 

உங்கள் பாடசாலைக்கு, வாயிற்காவலர் ஒருவரைப் பணிக்கமர்த்துகிறீர்கள். அவரிடம், “பாடசாலையின் வாயிலைக் காவல் காப்பதற்கும், வாயிலைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் உங்களுக்குக் கடமை உள்ளது” என்று சொல்கிறீர்கள். அதன் பின்னர், விவரமான கடமைகளைக் கூறும் போது, “அதிபரின் உத்தரவு இருந்தாலொழிய, மாலை 5 மணிக்குப் பின்னர், பாடசாலை வாயிற்கதவைத் திறக்கக்கூடாது” என்றும் விளங்கவைக்கிறீர்கள். 

ஆனால் ஒரு நாள், இரவு 8 மணிக்கு, வாயிற்கதவைத் திறந்துவைத்துக் கொண்டு, அக்காவலாளி இருக்கிறார். அதிபரின் அனுமதியின்றி, மாலை 5 மணிக்குப் பின்னர் ஏன் வாயிற்கதவைத் திறந்தார் என்று கேட்டால், “வாயிலைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் கடமை உள்ளது என்று சொன்னீர்கள் தானே? எனவே, விரும்பிய நேரத்தில் வாயிற்கதவைத் திறப்பதற்கு என்னால் முடியும்” என்று அவர் பதிலளிக்கிறார். 

அந்தப் பதிலை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது தானே? 

ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்காதா? 

இப்போது எழுப்பப்படுகின்ற இன்னொரு கேள்வி, இத்தனை விடயங்களும் ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்காதா என்பது தான். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், முக்கியமான அனைத்து நிபுணர்களையும் தன்வசம் வைத்துள்ள அவர், இவ்விடயங்களைப் பற்றி ஆராய்ந்திருக்க மாட்டாரா? எப்படியுமே, உயர்நீதிமன்றத்தின் உதவி நாடப்படும் என்பதை அவர் எதிர்பார்த்திருப்பார் தானே? 

நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக, பல நாள்களாகவே தகவல்கள் வந்துகொண்டிருந்தன; அச்செய்திக்கான எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வந்தது. எனவே, தனது நடவடிக்கைக்கான எதிர்ப்பு இருப்பதை, ஜனாதிபதி சிறிசேன, நிச்சயம் உணர்ந்திருப்பார். அதையும் மீறி, இவ்வாறு நாடாளுமன்றத்தை அவர் கலைத்திருக்கிறார் என்றால், இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். 

1. உயர்நீதிமன்றத்தில் தனக்குச் சார்பான முடிவு வர முடியுமென எதிர்பார்த்தமை 

2. நீதிமன்றத்துக்குச் செல்வதன் மூலம் தனக்குத் தோல்வி கிடைத்தாலும், மறுபக்கமாக நன்மை வருமென நினைத்தமை. 

இதில் முதலாவது நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அண்மையில் கூட, தன்னால் 6 ஆண்டுகள் பதவி வகிக்க முடியுமா என ஜனாதிபதி சிறிசேன, உயர்நீதிமன்றத்தைக் கோரியிருந்தார். ஆனால், அரசமைப்புப் படி, 5 ஆண்டுகள் தான் பதவி வகிக்க முடியுமென, உயர்நீதிமன்றம் அவருக்கெதிரான தீர்ப்பை வழங்கியிருந்தது. எனவே, அரசமைப்புப் படி தீர்ப்பு வழங்கப்படும் போது, ஜனாதிபதி சிறிசேனவுக்கெதிரான தீர்ப்பே வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இலங்கை வரலாற்றில், ஆட்சியாளர்களுக்குச் சார்பான முடிவுகள், தீர்ப்புகள் வழங்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. “ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்டை” வழக்கில், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குச் சார்பான தீர்ப்பை வழங்கிவிட்டு, சில ஆண்டுகளின் பின்னர், “அவ்வழக்கு விடயத்தில் நான் தவறு செய்துவிட்டேன்” என, அப்போதைய பிரதம நீதியரசரான சரத் என். சில்வா குறிப்பிட்டிருந்தார். நீதியரசர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்ற அடிப்படையில், தவறிழைப்பார்கள் என, ஜனாதிபதி சிறிசேன எதிர்பார்க்கக்கூடும். 

ஆனால் அதைவிட முக்கியமாக, நீதிமன்றத்துக்குச் செல்வதன் மூலம், தனக்கு மேலதிக காலம் கிடைக்குமென, ஜனாதிபதி சிறிசேன எதிர்பார்த்திருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்புத் தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால், அண்மைக்காலத்தில் நீதித்துறையின் சுயாதீனம், ஓரளவுக்குக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்ற பின்னணியில், அரசமைப்பில் ஓரளவு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில், தனக்குச் சார்பான தீர்ப்பு வருமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பெரும்பான்மையை நீடிப்பதற்காக, நாடாளுமன்றத்தை 16ஆம் திகதி ஒத்திவைத்து, அதன் பின்னர் 14ஆம் திகதி கூட்டுவதாக அறிவித்த ஜனாதிபதி சிறிசேன, அந்நாளுக்குள் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதை உணர்ந்திருக்க முடியும். எனவே தான், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்த பின்னர், அதற்கெதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் அமர்வுகள் இடம்பெற்று, தீர்ப்பு வருவதற்குச் சில நாள்கள் எடுக்கக்கூடும் என்பதால், அதற்குள், பெரும்பான்மையைத் தேட முடியுமென நினைத்திருக்க முடியும். 

நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைப்பதால், மேலும் எதிர்ப்புகள் எழக்கூடுமென்பதால், இவ்வழி மூலமாகச் செயற்பட்டால், எதிர்ப்பைச் சமாளிக்க முடியுமென அவர் எதிர்பார்த்திருக்கக்கூடும். 

ஆனால், ஜனாதிபதி சிறிசேனவின் முயற்சி வெற்றிபெறுமா? நாட்டின் முழுக் கவனமும், உயர்நீதிமன்றத்தின் மீது தான் உள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .