Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதி எல்லோருக்குமானதல்ல; நீதி எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வதில்லை.
நீதியின் அளவுகோல்கள் வேறுபட்டன. யாருடைய நீதி, யாருக்கான நீதி, எதற்கான நீதி போன்ற கேள்விகள் நீதியின் தன்மையை விளங்கப் போதுமானவை.
நீதி பற்றிய புதிய கேள்விகள், காலங்காலமாக எழுந்து அடங்கியுள்ளன. இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் பெயரால், நீதியின் அரசியல் அரங்கேறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் தோற்ற காரணத்தால் ஜேர்மனிய, இத்தாலிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், அணுகுண்டுகளை வீசி மனிதகுலத்துக்கு எதிரான மிகப்பெரிய அநீதியை இழைத்த அமெரிக்கா, போரில் வென்றவர்களின் தரப்பில் இருந்தமையால் தண்டிக்கப்படவில்லை.
இன்றுவரை அது குற்றமாகக் கருதப்படவுமில்லை. வரலாறு மட்டுமல்ல, நீதியும் வென்றவர்களால்த் தீர்மானிக்கப்படுகிறது.
கடந்தவாரம், யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்தவொரு நிகழ்வு முக்கியமானது. போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் யூகோஸ்லாவியாவின் இராணுவத் தளபதியான ஸ்லோபொடன் பிரால்ஜக், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிகழ்வு, ஊடகக் கவனம் பெறாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. ஊடகங்களும் இச்செய்திக்குரிய முக்கியத்துவத்தை வழங்கவில்லை.
யூகோஸ்லாவியாவின் பிரிவினையை ஒட்டி, 1992 முதல் 1995வரை நடைபெற்ற யுத்தத்தின் போது, போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற அடிப்படையில் ஸ்லோபொடன் பிரால்ஜக் உள்ளிட்ட அறுவர் விசாரணைக்கு உட்பட்டிருந்தனர்.
ஏற்கெனவே, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கெதிராக இவர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், முன்னைய தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துக் கொண்டிருந்த நிலையில், இருக்கையில் இருந்து எழுந்த ஸ்லோபொடன் பிரால்ஜக், “நான் இத்தீர்ப்பை எதிர்க்கிறேன். நான் போர்க்குற்றவாளி அல்ல; இந்த அநீதிக்கு எதிராக நான் நஞ்சருந்துகிறேன்” என்று, தன் கையில் வைத்திருந்த போத்தலில் இருந்த நஞ்சை அருந்தினார்.
இச்செயல், முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்துக்குத் தாம் வருந்துவதாகக் குறிப்பிட்ட குரோஷிய பிரதமர், “பிரால்ஜக்கின் செயல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பொஸ்னிய குரோஷியர்களுக்கு எதிராகவும் குரோஷிய மக்களுக்கு எதிராகவும் இழைக்கப்படும் ஆழ்ந்த அநீதியைப் பற்றிப் பேசுகிறது” என்று குறிப்பிட்டார்.
முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானம் 827இன் படி, ஐ.நா சாசன அமைப்பு 29ஆவது விதிப்படி 1993 மே மாதம் அமைக்கப்பட்டது.
29ஆவது விதியின்படி, அமைதிப்பணிகளை மேற்கொள்வதற்கு ‘துணை அமைப்புகளை’ உருவாக்க அங்கிகாரம் அளிக்கப்பட்டது. என்றாலும் சர்வதேச ஒப்பந்தம் இல்லாமல், ஐ.நா பாதுகாப்புச் சபை, இந்த நீதிமன்றத்தை அமைத்தது.
சர்வதேச ஒப்பந்தம் இருந்தால்தான், தேசிய நீதிமன்றங்களின் விசாரணை வரம்புகளிலிருந்து, வழக்குகளை முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றமுடியும்.
ஐக்கிய நாடுகளின் நிதியுதவியோடு இந்த நீதிமன்றம் நடத்தப்படவேண்டும். ஆனால், தனிப்பட்ட நாடுகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளில் இருந்தும் நிதி வழங்கப்படுகிறது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் தோற்றம் பெற்ற, யூகோஸ்லாவிய சோஷலிச சமஷ்டிக் குடியரசானது, ஆறு குடியரசுகளின் கூட்டாகத் தோற்றம் பெற்றது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்த, உலக ஒழுங்கில் யூகோஸ்லாவியா முக்கிய பங்கை ஆற்றியது. சோவியத் ஒன்றியத்தின் மறைவைத் தொடர்ந்து, 1990 இன் தொடக்கத்தில் யூகோஸ்லாவியா துண்டாகத் தொடங்கியது.
1992 இல் யூகோஸ்லாவியா ஆறு துண்டுகளாகி, இன்று ஏழு நாடுகளாகி உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னரான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் நட்பு சக்தியாகவும் அதைவிட முக்கியமாக புரட்சிகர கம்யூனிச அமைப்புகளின் ஆதரவாளனாக யூகோஸ்லாவியாவின் பங்கு முக்கியமானது. சோவியத் ஒன்றியத்தின் உடைவு, யூகோஸ்லாவியாவின் சிதைவுக்கு வழியமைத்தது.
இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பிருந்தே பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. 1945 இல் உலக பாசிசம் தோற்கடிக்கப்பட்ட சூழலில், கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சோஷலிச ஆட்சிகள் தோற்றம் பெற்றன. அவ்வாறு மார்ஷல் டிட்டோவின் தலைமையில் உருவாக்கப்பட்டதே யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசாகும்.
அதேபோன்று, அல்பேனியாவில் அன்வர் ஹோஜா தலைமையில் சோஷலிச ஆட்சி மலர்ந்தது. இத்தகைய சோஷலிச நாடுகள் ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பெரும் சவாலாகவும் எதிர் நிலையாகவும் அமைந்தன.
எனவே, இச்சோஷலிச நாடுகளை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் மேற்குலகு சதாமுயன்று வந்துள்ளது. அதைச் சக்திமிக்க மக்கள் தலைவர்களாக விளங்கிய டிட்டோ, அன்வர் ஹோஜா போன்றோர் அதிகாரத்திலும் உயிருடனும் இருக்கும்வரை, சாத்தியமாக்க இடமளிக்கவில்லை.
இருப்பினும் மேற்குலகு, அந்நாடுகளில் இன, மத முரண்பாடுகளை வளர்ப்பதற்கும், பகை நிலைக்குத் தள்ளுவதற்கும் ஊடுருவி சதிவேலைகளைச் செய்தும் வந்தன.
இப்பின்னணியில், மேற்குலகுக்கு ஆதரவான ஆட்சிகளை பல்கன் நாடுகளில் உருவாக்குவது, பல்கன் வளைகுடாவைக் கட்டுப்படுத்தவும் இராணுவ, பொருளாதார ரீதியில் ஆதிக்கத்துக்கான பிடியை வலுவாக்கும் என்பதை நன்கறிந்திருந்த அமெரிக்காவும் மேற்குலகும், யூகோஸ்லாவியாவில் இன, மத ரீதியிலான பகையை உருவாக்கி, ஊட்டிவளர்த்து, அந்நாட்டைப் பிரித்துத் துண்டாக்குவதில் பெரும்பங்காற்றின.
இப்பின்னணியில், யூகோஸ்லாவியா, ஸ்லாவ் தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால் உருவான நாடு என்பதும் அங்கே எந்தவிதமான தேசிய இன ஒடுக்கலும் இருந்ததில்லை என்பதும் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை.
அங்கே இருந்துவந்த தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது; இடையிடையே பகைமையான உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது மோதல்களுக்கோ, பிரிவினைக்கோ 1990கள் வரை இட்டுச் செல்லவில்லை.பொருளாதார ஏற்றதாழ்வுகள் இருந்தன. மிகமோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980 களில், பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை.
உண்மையில், 1945 முதலாக, சோவியத் ஒன்றியத்துடன் முரண்பட்டு நின்ற அணிசேரா நாடான யூகோஸ்லாவியாவின் ஒற்றுமையை, அமெரிக்கா அப்போது விரும்பியது. அன்று ஒரு வலுவான யூகோஸ்லாவியாவால் அமெரிக்காவுக்குப் பயன் இருந்தது.
சோவியத் ஒன்றியம், 1980 களின் இடைக்காலப் பகுதியிலிருந்து, பலவீனப்படத் தொடங்கிவிட்டது. அதற்குப் பின்னர், யூகோஸ்லாவியாவால் பயனிருக்கவில்லை.
மதத்தாலும் மொழிப் பிரிவுகளாலும் இனப்பிரிவுகளாலும் வேறுபட்ட யூகோஸ்லாவியத் தேசிய இனங்களைப் பிரிப்பதில், கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஜேர்மனிக்கும் பயன் இருந்தது.
ஆனாலும், யூகோஸ்லாவியாவில் தன்னுடைய படைகளை நிலைநிறுத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்காவுக்கு, பொஸ்னியா - ஹெர்ட்ஸ் கொவினா (பொஸ்னியா என்றே பலராலும் அழைக்கப்படுவது) ஒரு வாய்ப்பான இடமாயிற்று. அங்கே பிரிவினை தூண்டிவிடப்பட்டது.
ஜேர்மனிய, வத்திக்கான் ஊக்குவிப்புடன் ஸ்லொவ்னியாவும் குறோஷியாவும் யூகோஸ்லாவிய சமஷ்டியினின்று பிரிந்துபோக முற்பட்டபோது, யூகோஸ்லாவியக் குடியரசுத் தலைவரான மிலஷோவிச், சேர்பியப் பேரினவாதியாகத் தன்னை அடையாளப்படுத்தவில்லை.
மாறாக, யூகோஸ்லாவியா தொடர்ந்தும் ஒன்றுபட்ட நாடாக இருக்கும் தேவையையே வற்புறுத்தினார். குரோஷியப் பிரிவினையின்போது, மேற்குநாடுகளுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்த, அதன் தலைவர் துஜ்மன், பின்னர் சேர்பியர்களுக்கு எதிரான இனத் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டார்.
அதுமட்டுமன்றிக் குரோஷியாவின் க்றயினா மாகாணத்திலிருந்து இரண்டரை இலட்சம் சேர்பியர்கள் ‘இனச்சுத்திகரிப்பு’க்கு உள்ளாயினர். பொஸ்னியாவில், பொஸ்னிய முஸ்லிம் மேலாதிக்கச் சிந்தனையுடைய அலியா இஸெத்பெகோவிச், அமெரிக்க ஆதரவுடன் பொஸ்னியாவின் மூன்று தேசிய இனங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார்.
அக்காலத்தில் அமெரிக்கா, முஸ்லிம் தீவிரவாதத்தை வளர்த்து வந்தது என்பதையும், சோவியத் ஒன்றியம் உடைவதை ஊக்குவித்ததும், முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொண்டு, ரஷ்யாவை மேலும் பலவீனப்படுத்துகிற பணிகளிலும் தீவிரம் காட்டியதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.
இத்தகைய பின்னணியிலேயே பொஸ்னியாவில் சேர்பிய, குரோஷிய, முஸ்லிம் தேசிய இனங்களுக்கிடையிலான மோதலுக்கான நிலை உருவானது. இம்மூன்று சமூகங்களும் மதத்தால் மட்டுமே வேறுபட்ட, ஒரே ‘சேர்ப்’ இனத்தவராவார். அத்துடன், மதம் சார்ந்த அரசியலும் அந்நிய ஆக்கிரமிப்புமே மூன்று சமூகங்களையும் வெவ்வேறாக்கின என்பதும் நாம் நினைவிலிருத்த வேண்டிய உண்மைகளாகும்.
எனினும், இன்னொரு முறை நடந்த அந்நியக் குறுக்கீட்டின் மூலம், பொஸ்னிய சரித்திரம், மூன்று சமூகங்களுக்கிடையிலும் மும்முனைப் போராட்டமாக வெடித்தெழ நேர்ந்தது. இதன் விளைவுகளில், சேர்பிய இனத்தவரது குற்றங்கள் மட்டுமே பேசப்பட்டதுடன், அவை மிகைப்படுத்தப்பட்டு, அதேபொய்கள் இன்னும் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றன.
சேர்பியாவையும் மொண்டி நெக்ரோவையும் மசிடோனியாவையும் கொண்டிருந்த எஞ்சிய யூகோஸ்லாவியா, எவ்வகையிலும் பொஸ்னியாவில் குறுக்கிட இயலாதவாறு தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இவை எமக்குச் சொல்லப்படாத செய்திகள்.
நேட்டோ தலைமையில் அமெரிக்கா, சேர்பியா மீது குண்டுமழை பொழிந்தது. சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபொடன் மிலஷோவிச், யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயத்தால் போர்க்குற்றவாளியாக்கப்பட்டார்.
சேர்பியாவில், சோஷலிஸக் கட்சி தோற்றாலும் சேர்பியாவுக்கும் ரஷ்யாவுக்குமுள்ள பண்பாடு, மத, மொழி ஒற்றுமைகள் என்பன காரணமான நீண்டகால நல்லுறவு வலுப்பெற்றுள்ளது.
ரஷ்யா மீள எழுச்சி பெற்று வருகிற நிலையில், ஒரு வலுவான சேர்பியாவை, அமெரிக்கா விரும்பவில்லை. சேர்பியாவைப் பூரண அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, ரஷ்யாவுக்கு எதிராகப் பாவிக்க இயலாததாலேயே, முதலில் மிலஷோவிச்சைப் பலவீனப்படுத்தப் பாவிக்கப்பட்ட கொசோவோ தீவிரவாதம், நாட்டைப் பிரிக்கும் அளவுக்குப் போக அனுமதிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டம் இந்தத் தீர்ப்பாயத்தின் வழி நடந்தேறுகிறது.
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், பொஸ்னியாவின் இரத்தக் களரிக்கு மிலஷோவிச் பங்களித்தவரல்ல. எனினும், வெளி உதவியுடன் சேர்பியர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் குரோஷிய இனத் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் பற்றிப் பேசப்படுவதில்லை. முஸ்லிம் தீவிரவாதிகளுடைய குற்றங்களும் பேசப்படுவதில்லை.
பொஸ்னியாவில் அமெரிக்கா, நேட்டோ, ஐ.நா எனும் மூன்று அந்நிய சக்திகளை சேர்பியர்கள் எதிர்கொண்டனர். அதனால் அவர்களது மனித உரிமை மீறல்கள் நியாயமாகிவிடாதபோதிலும், அவர்களை மட்டுமே குற்றவாளிகளாக்குவது தவறான நோக்கமுடையது.
நேட்டோப் படைகள் வரன்முறையின்றி, சர்வதேசச் சட்டங்களை மதிக்காமல் குண்டுமழை பொழிந்து, ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றது. இது குற்றமாகத் தெரியவில்லை. இன்று, உலகெங்கும் அமெரிக்கா, ஆக்கிரமிப்பின் ஊடாக ஏராளமான குற்றங்களைப் புரிந்துள்ளது. அவை குறித்து, யாரும் வாய் திறப்பதில்லை.
பிரால்ஜக்கின் செயல் வலுவான செய்தியொன்றைச் சொல்கிறது. பிரால்ஜக்கை ஊடகங்கள், ‘போர்க்குற்றவாளி நஞ்சருந்தி மரணம்’ என அறிவித்ததன் மூலம், அவரைப் போர்க்குற்றவாளியாகவே சித்திரித்தன.
யூகோஸ்லாவியாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம், அரசியல் நோக்கம் கொண்டது என ஸ்லோபொடன் மிலஷோவிச் தனது குற்ற விசாரணையின் போது, பலமுறை எடுத்துக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகத்திடம் நீதியைக் கோரி நிற்போருக்கான முக்கியமான படிப்பினையைச் சொல்கிறது. அவர்கள் வழங்கும் நீதி எமக்கான நீதியாக இருக்க அவசியமில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
50 minute ago
5 hours ago