Thipaan / 2016 நவம்பர் 05 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
சொந்த மண்ணில் வாழக் கிடைப்பது என்பது ஒரு வரமும் கொடுப்பினையுமாகும். ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது’ என்பார்கள். அதுபோலவே,இலங்கையில் பிறந்த யாராவது அமெரிக்காவிலோ, லண்டனிலோ அல்லது கனடாவிலோ மிகவும் சந்தோசமாக, பணம் படைத்தவராக, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவரது மனதில் தனது தாய்மண் பற்றிய நினைவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.
வாழ்வின் நிர்ப்பந்தங்களாலும் காலத்தின் கட்டாயத்தின் பெயரிலும் உள்நாட்டுக்குள்ளும், நாடுகடந்தும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடம், தமது சொந்த இடத்துக்குத் திரும்புதல் பற்றிய கனவொன்று இருக்கவே செய்யும். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து இரண்டரை தசாப்தங்களாக அகதி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
அது, ஒரு கறைபடிந்த அனுபவம். சரித்திரத்தில் நிகழ்ந்திருக்கவே கூடாத ஒரு கசப்பான சம்பவம். சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், மற்றைய சிறுபான்மையினரான முஸ்லிம்களைக் ‘கறுப்புக் கண்ணாடி’ போட்ட மனப்பாங்கோடு பார்க்கத் தொடங்கியிருந்த 90 களின் ஆரம்பம் அது! யாழ். குடாநாட்டில் தமிழர்களோடு பிட்டும் தேங்காய்ப் பூவையும் விட இறுக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த 90 ஆயிரம் முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி, குறுகிய நேர அவகாசத்துடன் விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதே அவ்வரலாறு! புலிகளின் தரப்பில் இருந்து பல காரணங்கள் சொல்லப்பட்டன. முஸ்லிம்களின் நன்மை கருதியே வெளியேறச் சொல்வதாகப் பல கதைகள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் என்னவென்பதைச் சொற்ப காலத்துக்குள்ளேயே முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர்.
முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்குச் சாதாரண தமிழ் மக்கள் மனதளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், மௌனம் காத்தனர். விரல்விட்டு எண்ணக் கூடிய முற்போக்காளர்களைத் தவிர, அதிகமான தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு அடிப்படைக் காரணங்களில் இச்சம்பவம் மிக முக்கியமானது. அதுமட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூய்மை, அதன்மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை எல்லாவற்றையும் ஓரிரவில் இல்லாமல் செய்த நிகழ்வாக இது அமைந்தது. முஸ்லிம் இளைஞர்கள் தமிழர்களின் விடுதலை வேட்கைக்காக ஆயுத இயக்கங்களுடன் இணைந்து போராடிக் கொண்டிருந்த சமகாலத்தில், புலிகள் கிழக்கில் பள்ளிவாசல்களில் படுகொலைகளைச் செய்துகொண்டு, வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதை முஸ்லிம்களால் மாத்திரமன்றி குறிப்பிட்டளவான தமிழர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. புலிகள் இதை திட்டமிட்டே செய்திருந்தாலும், பிறகு இதற்காகக் கடுமையாக மனம் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் அளவுக்கு ஒரு பாரதூரமான மனித உரிமை மீறலாக இது காணப்பட்டது.
உடுத்த உடையோடு, மாற்றுத் துணியின்றி, கையில் மாத்திரைகளோ, பணமோ, பொருளோ எதுவுமின்றி வடக்கில் இருந்த ஓர் இலட்சத்துக்குச் சற்றுக் குறைவான முஸ்லிம்கள் மிக மோசமான முறையில் வெளித்துரத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வீடுகளை விட்டு, சொத்துக்களை இழந்து, வியாபாரங்களை விட்டு ஒரு ‘சொப்பின் பேக்’குடன் தாய்மண்ணில் இருந்து வெளியேறுவது எவ்வளவு கொடூரமானது? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்களாகத் தம்முடைய வாழ்தலுக்கான கனவையெல்லாம் பறிகொடுத்து அவர்கள் வெளியேறினார்கள்.
கால்நடையாகவும் உழவு இயந்திரங்களிலும் அங்கிருந்து பயணித்த முஸ்லிம்கள் புத்தளத்திலும், மன்னார், முசலி மற்றும் வடமேற்கில் உள்ள வேறுபல கிராமங்களிலும் தஞ்சம் புகுந்தனர். இன்னும் சிலர் நாட்டின் நாலா பாகங்களுக்கும் சென்று குடியமர்ந்தனர். அப்பிரதேசங்களில் இருந்த ஏனைய முஸ்லிம்களின் உதவியுடன் மீதமிருந்த வாழ்வை வாழத் தொடங்கினர். இவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை ஆரம்பமாகியது.
இந்த அகதி வாழ்க்கையில் 26 வருடங்கள் கடந்தோடி விட்டன. ஆனால் பெருமளவிலான வடபுல முஸ்லிம்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பட்ட வாழ்வியல் கஷ்டங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவர்கள் எல்லோரும் இன்றும் உண்பதற்கு உணவின்றி, உடுத்த உடையின்றி வாழ்கின்றார்கள் என்று சொல்ல முடியாது.
அவர்களது வாழ்க்கையில் பல மாறுதல்கள், முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஓர் இலட்சமாக வந்த மக்கள் இன்று பல இலட்சங்களாகப் பெருகியிருக்கின்றனர். சிலர் இடம்பெயர் சூழலில் பேரப் பிள்ளைகளை கண்டிருக்கின்றனர். 26 வருடங்களாக இதுதான் வாழ்வு என்றான பிறகு, அவர்கள் அதற்கேற்றால் போல் வாழத் தங்களைப் பழக்கிக் கொள்வதே சமயோசிதமாகும். சந்ததியைப் பெருக்காமலும் உழைக்காமலும் ஒரு சிறிய வீட்டையேனும் கட்டாமலும் எல்லா முஸ்லிம்களும் இரண்டு தசாப்தங்களாகக் கொட்டிலிலேயே வாழ்ந்திருக்க வேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு அகதி வாழ்க்கை வாழ்பவர்களுக்கே வடக்கில் இடமுண்டு எனக் கூறுவதற்கும் தார்மீக உரிமையில்லை.
இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற வடக்கு முஸ்லிம்களில் ஒரு சில குடும்பங்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும்,பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் நடுத்தர வாழ்க்கையைக் கூட எட்டிப் பிடிக்கவில்லை. அன்றாட உழைப்பை நம்பியே அவர்களது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அதிகமானோருக்கு முழுமையாகக் கல்லால் கட்டப்பட்ட நிரந்தர வீடுகள் இல்லை. கிடுகினாலும் தகரத்தினாலும் வேயப்பட்ட வீடுகளிலேயே இவ்வாறானவர்கள் வசிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் வாழ்கின்ற நிலமும் அவர்களுக்குச் சொந்தமில்லை என்பது அவர்களுடைய மனதில் எப்போதும் இருக்கின்ற வலியாகும். எனவேதான், தமது பூர்வீகத்துக்குத் திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணம் அவர்கள் மனதில் தொடர்ச்சியாக இருக்கின்றது. தாம் பிறந்து வளர்ந்து, பின்னர் துரத்தப்பட்ட யாழ். மண்ணில் தமது பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை கொண்டு சென்று குடியமர்த்திவிட வேண்டுமென்பது பல ‘பெரிசு’களின் கடைசி ஆசையாக இருக்கின்றது.
வட மாகாணத்தில் வாழையடி வாழையாக வாழ்ந்த மக்களைப் புலிகள் தங்களுடைய சொந்த நியாயத்தின்படி அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர், பல வருடங்கள் கழித்து “அது ஒரு கசப்பான அனுபவம்” என்று கூறிய புலிகள், இந்த வரலாற்றுத் தவறுக்குப் பரிகாரம் செய்யக் காத்திரமாக முயற்சிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட உடன்படிக்கையில் சில விடயங்கள் உடன்பாடு காணப்பட்ட போதும், எழுத்தில் இருந்த விடயம் இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தப்படவில்லை.புலிகள், தமிழர்களில் காட்டிய அக்கறையை யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் காட்டவில்லை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் ஏனைய விடயங்களையும் அவ்வியக்கம் கையாண்ட விதம், அவர்களது மனவோட்டத்தைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது. இதன் காரணமாகவும் போர்ச் சூழல் காரணமாகவும் அங்கு மீளக் குடியேற முஸ்லிம்களும் அப்போது அச்சம் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர், நாட்டின் நிலைமைகள் மாற்றமடைந்தன. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு ஏதுவான சூழல் ஏற்பட்டது. இங்கு தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதே என்றாலும் வட மாகாணத் தமிழர்கள் விடயத்தில் காட்டிய அக்கறையை அரசாங்கமோ சர்வதேசமோ முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காண்பிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த வடபுலத் தமிழர்களை ஏதோ ஓர் அடிப்படையில் மீளக் குடியேற்றுவதற்குத் தமிழ் அரசியல்வாதிகளும் உலக நாடுகளும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டன. போருக்குப் பின்னரான அபிவிருத்தி, சகவாழ்வில் அது ஒரு முக்கியமான விடயமாகக் கருதப்பட்டது. இது நல்ல விடயமே என்பதில் மறுகருத்தில்லை. ஆனால், தீவிர யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர், அதாவது 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் இவ்வாறான ஒரு கரிசனை காட்டப்படவில்லை.
ஆரம்பத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இது பற்றிப் பெரிதாகக் கவனம் செலுத்தாமையே இதற்குப் பிரதான காரணம் எனலாம். மானிடவியல் யதார்த்தத்தின்படி, தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டனர். தமிழர்களைத் திருப்திப்படுத்தினால் பெரும் தலையிடி முடிந்தது என்ற எண்ணத்தில்தான் ஆட்சியாளர்களும் இருந்தனர். நிலைமை இவ்வாறிருந்மையால், ஒரு தொகுதித் தமிழர்களுக்கு முன்னதாகவே இடம்பெயர்ந்திருந்த வடபுல முஸ்லிம்கள் 25 வருடங்களாக முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை. இது மிகவும் கவனத்துக்குரிய விடயமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, அண்மைக் காலங்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஓரளவுக்கு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் இவ்விடயம் சர்வதேச மயப்படுத்தப்பட்டது போதாது; அல்லது சர்வதேசம் அதைக் கண்டு கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.
ஐ.நாவின் விசாரணை அறிக்கையை 2002 இற்கும் 2009 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்கு வரையறுக்காமல் அதனது கால எல்லையை 1990 ஆம் ஆண்டுவரை பின்னோக்கி விரிவுபடுத்துமாறும், வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்குமாறும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வடபுல முஸ்லிம்கள், தங்களது சொந்த இடத்துக்குத் திரும்புவதில் உள்ள சிக்கல்கள், தடைகள் பற்றி ஐ.நாவிடமும் அரசாங்கத்திடமும் பல தடவைகள் எடுத்துரைத்துள்ளனர். அந்த மண்ணில் பிறந்து, அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி என்ற வகையில், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்விவகாரத்தில் ஒப்பீட்டளவில் கூடிய கவனம் எடுத்துச் செயற்படுகின்றார். என்றாலும், அவரால் மட்டும் இக்காரியத்தைத் தனித்து நின்று செய்ய முடியாத அளவுக்குச் சவால்கள் இருப்பதாகவே தெரிகின்றது. குறிப்பாக, வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு சில தமிழ் அரசியல்வாதிகள் ஒத்துழைக்கின்ற போதிலும், வேறுசில தமிழ் அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இரு தினங்களுக்கு முன்னர் இதே கருத்தை அமைச்சர் ரிஷாட், பிரான்ஸில் நடைபெற்ற நிகழ்விலும் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில், “அவ்வாறு எதுவும் இல்லை” என்றும் “மீள்குடியேற்றச் செயலணி, மாகாண சபைக்கு உரிய இடத்தை வழங்குவதில்லை” என்றும் வடபுலத் தமிழ் அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். இது தப்பபிப்பிராயங்களை இருபக்கத்திலும் ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் வடபுல முஸ்லிம்களின் அகதி வாழ்க்கைக்கு 26 வருடங்களாகி உள்ளது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம், வட மாகாண முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் கரிநாள்களும், நினைவு நிகழ்வுகளும் அனுஷ்டிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நினைவு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உள்நாட்டில் இடம்பெற்ற பல விசேட நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றியமை நல்லதொரு முன்மாதிரியாக இருந்தது. இவ்வாறான நிலையில் சுமந்திரன் எம்.பி தெரிவித்த கருத்து மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு என்று சொல்லியுள்ள சுமந்திரன், அம்மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையில் வடமாகாண சபையின் செயற்பாட்டைச் சாடும் விதத்தில் உரையாற்றியுள்ளார். இதனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற ஓரிரு அரசியல்வாதிகள் சுமந்திரனை விமர்சிக்க முற்படுவதை காணக் கூடியதாக உள்ளது.
குறிப்பிட்ட ஓர் இனத்துவ அடையாளத்துடன் வாழ்கின்ற மக்கள், அடியோடு ஒரு பிரதேசத்தை விட்டு வெளியேற்றப்படுவது இனச் சுத்திகரிப்பே. அத்துடன், ஒரு செயலால் பாதிக்கப்பட்ட மக்கள், அதை எவ்வாறு உணர்கின்றார்களோ அதுவே இங்கு முக்கியமானதாகும். உதாரணமாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான யுத்தம் என்று அரசாங்கங்களால் சொல்லப்பட்ட நடவடிக்கையை ‘இனஅழிப்பு’ என்று தமிழர்கள் சொல்கின்றார்கள். இப்படி இன்னும் எத்தனையோ..... அதுபோலவே வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் அமைந்தது. இருப்பினும், இது இனச்சுத்திகரிப்பா, இல்லையா? என்று இப்போதும் சண்டை பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதைவிடுத்து, அம்மக்களை மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளே இப்போது அவசியமானவை.
தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற நீண்டநாள் எதிர்பார்ப்பில் உள்ள வடமாகாண முஸ்லிம் பெரியவர்களும், கதைகளில் கேட்ட தமது பூர்வீகத்தைத் காண வேண்டும் என்ற அவாவில் இருக்கும் வடபுல முஸ்லிம்களின் இளைய தலைமுறையினரும் மீண்டும் முழுமையாக யாழ். குடாவில் மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்விடயத்தை சர்வதேசமோ அரசாங்கமோ இரண்டாம் பட்சமாகப் பார்க்கக் கூடாது. மிக முக்கியமாக, ரிஷாட் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், வடமாகாண சபைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து, பெறக் கூடிய உதவிகளைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். மறுபக்கத்தில், வடமாகாண சபையும் தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நோக்கக் கூடாது. தமக்காகப் போராடிய ஓர் இயக்கமே இம்மக்களை வெளியேற்றியது என்ற அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு முஸ்லிம்கள் மீளத் திரும்பி, குடியேறுவதற்கான கதவுகளைத் திறந்து, வரவேற்க வேண்டும். அவ்வாறு நடந்தால், இன நல்லிணக்கத்துக்கான மிக முக்கியமான ஓர் அடைவாக அது அமையும்.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago