2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்

காரை துர்க்கா   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார்.   

மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல் என்பது மிகவும் சவாலான விடயம். வழமையாக, இவ்வாறான வேலைகளைக் கண்காணிக்கவே நேரம் போதுமானதாக இல்லை. அவர்களது முறைப்பாடுகள், அதற்கான தீர்வுகள் என அதனுடனேயே, பெரும் பெறுமதியான நேரத்தை நாளாந்தம் செலவிட வேண்டி ஏற்படுகின்றது. இப்படியிருக்கையில், நாம் எவ்வாறு புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், எவ்வாறு பெட்டிக்கு வெளியே சிந்திக்க (Out of Box Thinking) முடியும், எவ்வாறு எமது வட்டத்துக்கு வெளியே வர முடியும்? என்பது அவரது சலிப்பாக இருந்தது.   

அவர் கூறியது போலவே, எமது தமிழ் அரசியல்வாதிகளும், வழமையான வெறும் அரசியல்வாதிகள் என்ற வட்டத்துக்கு வெளியே வர முடியாதவர்களாக உள்ளனர்; தமிழர் சார்ந்த பொது விடயத்தில், அணிவகுத்துச் செயற்பட முடியாதவர்களாக உள்ளனர்; அற்ப விடயத்தில் கூட, தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்பவர்களாக உள்ளனர்; அடிமைத்தனத்தில் முற்றிலும் மூழ்கியிருக்கும் தமிழ் மக்களுக்கான மீட்பர்களாக வர முடியாதவர்களாக உள்ளனர். தமக்கு வாக்களித்த, தமது சொந்த மக்களாலேயே நம்ப முடியாதவர்களாக உள்ளனர். தமிழ் மக்களின் சந்தேகப் பார்வையில் உள்ளனர்.   

எங்களுக்காக (தமிழ் மக்கள்) அரசியல் செய்ய முன் வந்தவர்கள், எங்களுக்காக (தமிழ் மக்கள்) ஒற்றுமைப்படாதவர்களாக உள்ளனர். இவ்வாறாகத் தமிழ் மக்களும் சலித்துக் கொள்கின்றார்கள்.   

இது ஒருவிதத்தில், பெரும் கொடூரங்கள் நிறைந்த போரில், சிக்கிச் சிதறி நடைப்பிணங்களாக, நெருக்குவாரங்களுடன் வாழும் தமிழ் மக்களை, நம்மவர்களே நடுத்தெருவில் கைவிட்டதுக்கு ஒப்பானது.   
தமிழ் மக்களது உயரிய, மாண்பு நிறைந்த வாழ்வே, முக்கியம் என தமிழ் அரசியல்வாதிகள் கருதுவார்களாயின், தங்களுக்குள் உள்ள சிறிய விடயங்களைப் புறமொதுக்கி, முன்மாதிரியாகச் செயற்படலாம் - செயற்படுவார்கள்.   

அரசாங்க அதிகாரிகளால், வழமையான வட்டத்துக்கு வெளியே வர முடியாது விட்டால், மக்களுக்கான சேவைகள் தடைப்படும். ஆனால், மறுவளமாக தமிழ் அரசியல்வாதிகளால், தமது வழமையான வட்டத்துக்கு வெளியே வர முடியாது விட்டால், ஒட்டுமொத்த தமிழ் மக்களது வாழ்வும் அவர்களது அபிலாஷைகளுடன் கூடிய எதிர்கால வாழ்வும் முற்றாக மூழ்கி விடும்.   

ஆனால் இன்று, தமிழ் அரசியல்வாதிகள், முன்நின்று வழி நடத்த வேண்டிய எழுச்சிப் பேரணிகளும் கடையடைப்புகளும் போராட்டங்களும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன.   

இப்போராட்டங்களில் இவர்கள் வெறும் பார்வையாளர்களாகப் பங்குபற்றும் நிலைதான் ஏற்பட்டு வருகின்றது. அரசியல் தலைவர்களுக்குப் பின்னால், மக்கள் அணி வகுக்க வேண்டிய வேளையில், மக்களுக்குப் பின்னால், அரசியல் தலைவர்கள், “ உங்கள் போராட்டத்துக்கு நாங்களும் ஆதரவு தருகின்றோம்” என இழுபடுகின்றனர்.   

கடந்த 70 ஆண்டு காலமாக, தமிழ் பேசும் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களில் பேரினவாத அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தற்போதும் அதே அசுர வேகத்தில் அணையாது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் எல்லையில், புல்மோட்டையில் தென்னமரவடிக்கு அண்மையாக உள்ள பகுதியில், இரண்டு புதிய சிங்களக் குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது தகவல் அறியும் சட்டம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.   

PEARL Action என்ற ஆய்வு நிறுவனம், கடந்த வாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில், நடைபெற்று வரும் சிங்கள மயமாக்கல் சம்பந்தமான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

பிக்குகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கத்தின் பாதுகாப்புடன் அங்கு பெரும்பான்மை மக்களுக்கான வீடுகள், பௌத்த விகாரைகள், பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுவதோடு தமிழ்க் கிராமங்களது பெயர்களும் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.   

புல்மோட்டை, தென்னமரவடிப் பிரதேசங்கள், குச்சவெளிப் பிரதேச செயலகப் பகுதிக்குள் வருவதாகவும் பிரதேச சபையின் எவ்வித அனுமதியின்றியே அங்கு அலுவல்கள் நடைபெற்று வருவதாகவும் குச்சவெளி பிரதேச செயலகமும் தெரிவித்து உள்ளது.   

ஒருமித்த தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கை பிரிக்க, 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமிழ் மக்களது வரலாற்றுப் பூமியான மணலாறு, வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அங்கு, ஒன்பது கிராம சேவகர் பிரிவுகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிங்கள மக்கள் வாழும், முழுமையான சிங்களப் பிரதேசமாக முல்லைத்தீவில் வெலிஓயா உள்ளது.   

இந்தக் குடியேற்ற நடவடிக்கைகள், நல்லாட்சி என்ற போர்வையில், அரசாங்கம் செய்கின்ற அராஜகமாகும். தமிழர்கள் தாங்கள் இழந்த நிலங்களை நினைத்து அழும் வேளையில், இவ்வாறான பாதகச் செயல் மேற்கொள்ளப்படுகிறது.   

இதைத் திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனோ, துரைரட்ணசிங்கமோ வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை; அவர்கள் சார்ந்த தமிழரசுக் கட்சியும் வெளியே கொண்டு வரவில்லை.   

அடுத்த கட்டமாக, இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளியே கொண்டு வரவில்லை. அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து வருகின்ற வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளும் வெளியே கொண்டு வரவில்லை.   

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ் மக்களது இந்தப்பகுதியை, பௌத்த மயமாக்கல் மூலம் பிரிக்கும் பேரினவாதத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழ் மக்களது பிரதிநிதிகள் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. ஏன் அதையும் தாண்டி, இதனை வந்து கூடப் பார்க்கவில்லை என, அப்பகுதித் தமிழ் மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.   

இந்நிலையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தமிழ் மக்களது நலனுக்காகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரால் இதனைத் தடுக்க முடியுமா?   

நல்லாட்சி அரசாங்கம் மூலம், தமிழ் மக்களது வளமான வாழ்வுக்கு, வழிவகுத்ததாக தெரிவித்து வரும் இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரனால் பிரதமருடன் உரையாடி, இதைத் தடுக்க முடியுமா? ஜனாதிபதி மைத்திரியால் தேசியப்பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனால் ஜனாதிபதியுடன் உரையாடி இதனைத் தடுக்க முடியுமா?  

இவர்கள் எவராலுமே இதனைத் தடுக்க முடியாது; இதனைத் தமிழ் மக்களும் நன்கு அறிவர். ஆனாலும் தமிழ் மக்களது இதய பூமியில் நடக்கும் நிலஅபகரிப்பைத் தெரியாமல், அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர் என்பதே, துயரத்திலும் துயரம் ஆகும்.   

கடந்த எழுபது ஆண்டு காலமாக, கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 300 தமிழ்க் கிராமங்களை, தமிழ் இனம் ஏனைய இனங்களிடம் பறி கொடுத்து விட்டது. இவ்வாறாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் மட்டக்களப்பில் தெரிவித்து உள்ளார்.  

இவ்வாறாகப் பேரினவாதம், தமிழ் மக்களது இருப்பை 70 ஆண்டு காலமாகச் சற்றும் ஈவிரக்கமின்றித் தொலைத்து வருகின்றது; எதிர்காலத்திலும் இதையே செய்யப் போகின்றது.   

ஒரு கணம் சற்று ஆழமாகச் சிந்தியுங்கள்! இந்நிலைமையை நாம் உதிரிகளாக இருந்து எதிர்கொள்ளலாமா? உறுதி பூணுவோம்! இன்றே நாம் அனைவரும் தமிழ் அன்னையின் குழந்தைகள் என, ஒன்று சேருவோம். எங்களுக்குள் இருக்கும் சிறிய முரண்பாடுகளால், பொது எதிரி பெரிய இலாபம் அனுபவிக்க, நாம் அனுமதிப்பதா?   

தவறு விடுவது தவறில்லை. ஆனால், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தவறுவதே பெருந்தவறு. நாளை உ(எ)ங்கள் சந்ததி எம்மண்ணில் மானத்துடன் வாழ வேண்டுமெனின், பதவிகளுக்காக ஓர் இனத்தின் கனவுகளை அடைமானம் வைப்பது பெரும் துரோகம்.   

ஆகவே, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்த் தலைவர்களே! குறுகிய சுயநல வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள்; கட்சி அரசியலிருந்து வெளியே வாருங்கள். அவ்வாறாகத் தூய இதயங்களோடு வருவீர்களாயின், தங்கள் வாழ்வில் துன்பங்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் தொடர்ந்து சுமந்து வரும் ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றப்படும்; ஆனந்தம் அலை பாயும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .