2025 மே 03, சனிக்கிழமை

வன்முறை வாழ்க்கை: அச்சத்தை விதைக்கும் அரசியலும் அடாவடித்தனங்களும்

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவாரம் கண்டியில், அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தின் போது, கும்பல் ஒன்றினால், சில பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் காணொளியை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தது.   

அந்தக் காணொளியை முழுமையாகக் காணுமளவு மனத்தைரியம் என்னிடம் இருக்கவில்லை. இவ்வளவு வன்முறையும் வன்மமும் நிறைந்து போயுள்ள ஒரு சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றதொரு கேள்வி, மீண்டுமொருமுறை எழுந்தது.   

ஒரு குடிமகனின், அடிப்படை உரிமையைக் கூடப் பாதுகாக்க வக்கற்ற ஓர் அரசாங்கம், எத்தகைய அபத்தமானது? ஆனால், அந்த அபத்தத்தையும் மீறி, அது தன்னுள் உட்பொதித்து வைத்திருக்கும் ஆபத்துகள்தான், அச்சத்தை ஏற்படுத்துகின்றன.   

எமது நாட்டில், ‘அரசியல் அறம்’ என்பதொன்று இல்லை. வேண்டுமென்றால், தாராண்மைவாதிகள் அது இன்னமும் இருப்பதாகச் ‘சப்பைக் கட்டு’க் கட்டலாம். ஆனால், கசப்பான உண்மை யாதெனில், இங்கு எஞ்சியிருப்பது அறத்தால் வழிநடத்தப்படும் அரசியலல்ல; அரசியலால் வழிநடத்தப்படும் அறமாகும்.  

அரசியலே அறத்தை அளவுகோலிடுகிறது. இன்று, இலங்கையில் சிறுபான்மையினர் மீது ஏவப்பட்டுள்ள திட்டமிட்டுள்ள வன்முறைகள், அதன் அரசியல் அறத்தின் அளவுகோலை விளங்கிக் கொள்ளப் போதுமானது.   

இப்போது முஸ்லிம்களின் மீது கட்டவிழ்கின்ற வன்முறைகள், இதற்கு முன்னர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அதன் மோசமான விளைவுகளைத் தமிழர்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள். 

அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு எனத் தமிழர்களில் ஒரு பகுதியினர் நடந்து கொள்வதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இன்று, முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள், நாளை மீண்டும் தமிழர்கள் மீது கட்டவிழாது என்பதற்கான உத்தரவாதத்தை இவர்களால்த் தர முடியுமா?   

எமக்கு வேண்டாதவர்களுக்கு, ஏதேனும் கெடுதல் நடந்தால், நம்மில் சிலருக்கேனும் அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. ‘தனக்கு மூக்கறுத்தாலும் எதிரிக்குச் சகுணப் பிழை’ என்கிற மனநிலை இது. எதிரியே ஆனாலும், எதிரிக்கு ஏற்படுகிற எல்லாக் கெடுதலும் எங்களுக்கு நன்மையாகி விடாது. எதிரிக்கு ஏற்படுகின்ற கெடுதல், யாரால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பன பற்றி நாம் யோசிக்க வேண்டும்.   

எதிரிக்கு எதிரி, எப்போதும் நண்பனல்ல. ஏனென்றால் மனித உறவுகளும் சமூக உறவுகளும் ஒரே நேர்கோட்டில் வைக்கக் கூடியவையும் அல்ல. நட்பும் பகையும் என்று வெட்டொன்று துண்டிரண்டாக வகுக்கக் கூடியவையும் அல்ல. எதிரிக்கு எதிரி, எங்கள்  எல்லோரையும் விடப்  பெரிய எதிரியாகவும் இருக்க இயலும்.   

நாட்டின் அனைத்துத் தரப்பிலும் மக்கள் அறிய வேண்டிய பல உண்மைகளில் ஒரு சிறு பகுதியேனும் மக்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், இன்று மக்கள் மத்தியிலிருந்து இன, மொழி, மத வேறுபாடுகள் கடந்த அமைதிக்கான ஒரு வெகுசன இயக்கம், வலுவுடன் இயங்கிக் கொண்டிருக்கும். அல்லது, இன்று அத்தகைய ஓர் இயக்கத்துக்குத் தேவையில்லாமலே போயிருக்கலாம்.  

ஆனால், எமக்கு எவ்வாறு செய்திகள் வழங்கப்பட்டன. ‘பழிக்குப் பழி’; ‘உயிருக்கு உயிர்’ என்கிற விதமாகவே போர்ச் செய்திகள் வழங்கப்பட்டன. போரால் முழு நாடும் சிதைவது பற்றிய கவலையை விட, எதிரிகளில் நாலு பேர் மோதலில் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கிற மகிழ்ச்சி பெரிது.   

நாட்டையும் போரையும் இப்படிப் பார்க்கிற விதமாக, மக்களை இனவாத வெறுப்பின் அடிப்படையிலேயே பழக்கப்படுத்திய அரசியல் எங்களுடையது. இந்த அரசியலே, வன்முறை வாழ்க்கையை எமக்குப் பரிசளித்துள்ளது.  

ஞானசார தேரரின் அடாவடித்தனமும் அதை வேடிக்கை பார்க்கும் அரசியலும் வன்முறையை வாழ்க்கையாக்கிய அரசியலின் குறியீடுகள். ரத்ன தேரரின் உண்ணாவிரதமும் அத்தோடு ஒட்டி அரங்கேறிய வன்முறைகளும் மிகத் தெளிவான சில செய்திகளை, எமக்குச் சொல்லிச் செல்கின்றன.   

இன்று நிறுவனமயப்பட்ட வன்முறை, அரசியலின் பேரால் வாழ்வில் ஓர் அங்கமாயுள்ளது. இதை எதிர்த்துக் குரல் கொடுப்பது, எமது கடமை. அல்லாவிடின் இதைவிட வன்முறையான வாழ்க்கையையே, எமது குழந்தைளுக்கு நாம் பரிசளிப்போம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   

சமூக நீதிக்கான ஒருங்கிணைந்த போராட்டம், காலத்தின் தேவையாகிறது. வன்முறையைச் சமூகத்துக்குப் பரிசளிப்பதன் ஊடு, அடக்குமுறையையும் எதிர்ப்பைக் களைதலையும் நியாயப்படுத்தும் அரசியலை நோக்கி, நாடு நகர்கிறது.   

சட்டத்தினதும் ஒழுங்கினதும் பேரிலான அரச வன்முறையைச் சமூக நீதிக்கான போராட்டம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியிலிருந்து நாம் தொடங்க வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X