2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

’’வரும்,,,ஆனால் வராது’’

Janu   / 2026 ஜனவரி 22 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 முருகாநன்தன் தவம்

இலங்கையை புரட்டிப்போட்ட ''டித்வா ''புயலினாலும் அதன்  விளைவாக ஏற்பட்ட வெள்ளப்  பேரழிவுகளினாலும் ஆட்டம் கண்டுபோயிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய  மக்கள் சக்தி அரசின் ஆட்சியை ''கல்வி மறுசீரமைப்பு ''என்னும் செயற்கைப் புயல் தொடர்ந்தும் தாக்கி வருவதுடன் 6 ஆம் தர  ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் உள்ள ''ஒரு முகவரி ''  பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின்  முகவரியையே மாற்றும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அநுரகுமார  அரசு மேற்கொள்ளத் தீர்மானித்த  கல்வி மறு சீரமைப்பு  எதிர்க்கட்சிகளினதும்,சில பிரபல பிக்குகளினதும் சில அமைப்புகளினதும் கடும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளான  நிலையில் 6 ஆம் தர ஆங்கில பாடப் புத்தக மாதிரியில் ஏற்பட்டுள்ள அல்லது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள  பாரிய தவறு ஒன்றுறே  அநுரகுமார அரசை மட்டுமன்றி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பதவிக்கும் நற்பெயருக்கும் அவர் முன்னெடுக்கவிருந்த கல்வி மறுசீரமைப்புக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.

தரம் 6 ஆங்கில பாடநூல் அச்சிடுதலில்  ஏற்பட்ட அல்லது திட்டமிட்டு  ஏற்படுத்தப்பட்ட இந்த   ''பாரிய தவறு''மிகவும் கீழ்த்தரமான விமர்சன, குற்றச்சாட்டு அரசியலுக்கான வாசலைத் திறந்துவிட்டுள்ளது. பிரதமர்-கல்வி அமைச்சர் ஒரு பெண்ணாக இருப்பதனால் அவர் மீது எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி சிங்களவர்கள் போற்றி வணங்கும் சில பிரபல பிக்குகள் கூட முன்வைக்கும் ஆணாதிக்க சிந்தனை,பெண்ணடிமைத்தன வெளிப்பாடான கருத்துக்கள் இலங்கை அரசியலில் பெண்களின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சரான ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும்  சர்ச்சை ,தரம் 6 ஆங்கில பாடநூலில் மாணவர்கள் கலந்துரையாடும் பாடக்குறிப்பு ஒன்றில் அச்சிடப்படுள்ள இணையத்தள 'முகவரி' குறித்ததாகவே உள்ளது. அந்த இணையத்தள முகவரி ஓரின சேர்க்கையாளர்களின் அந்தரங்க ,ஆபாச இணையத்தள முகவரியாகும். அதனால் அந்த கலாசாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன்   தரம் 6 ஆங்கில பாடநூலில் அந்த ''முகவரி ''திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ளது என்பதே குற்றச்சாட்டாகவுள்ளது.

இதனால் பாராளுமன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் பிரதமரான கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிரொலிக்கின்றன  ஹரிணி  அமரசூரிய மிகக் கேவலமாக விமர்சிக்கப்படுகின்றார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட பொது வெளியில் விவாதிக்கப்படுகின்றது.சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக 'அந்தத் தவறுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்' எனக்   ஹரிணி  திட்டவட்டமாக கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்புகள்  ஒரு சில பிரபல பிக்குகள் , சில அரச எதிர்ப்பு யூடியூபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.

 பிரதமர் ஹரிணி மீது பெண் என்ற வகையில்  நடந்து வரும்  தனிநபர் தாக்குதலை எதிர்த்து பெண்ணியவாதிகள் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை.  அப்படிகொடுத்தால் தம்மையும் ஹரிணியுடன் இணைத்து அந்த ''முகவரி''சர்ச்சையில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற அச்சமும் இதற்கு ஒரு காரணமாகவுள்ளது . அத்துடன் அரசாங்கத்தின் மீதான வன்மத்தை கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக இது எதிர்க்கட்சிகளுக்கு வாய்த்திருப்பதால் எதிர்க்கட்சிகள் மிகவும் தந்திரமான விதத்தில் தமது பினாமிகளை களமிறக்கி, இந்த சேறுபூசலை ,கீழ்த்தரமான விமர்சனங்களை, குற்றச்சாட்டுக்களை  முன்னெடுத்து வருகின்றன.

 ஏற்கனவே கல்வி மறுசீரமைப்பை எதிரித்து வந்த  பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச  தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது இந்த தரம் 6 ஆங்கில பாடநூலில் மாணவர்கள் கலந்துரையாடும் பாடக்குறிப்பு ஒன்றில் அச்சிடப்படுள்ள இணையத்தள 'முகவரி' சர்ச்சையை தமது அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி  தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும்  கொண்டுவரவுள்ளது.

பெண் என்ற ரீதியில் தற்போது கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் பதவி விலக  வலியுறுத்தப்படும்  பிரதமரும் கல்வி ,உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய ஒன்றும் சாதாரணமானவரல்ல. அவர் அரசியல் குடும்பத்திலிருந்து செல்வாக்கினால் பதவிகளுக்கு வந்தவருமல்ல.   ஹரிணி அமரசூரிய பல சர்வதேச பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பெற்ற மிகச்சசிறந்த கல்வியியலாளர்.  இலவசக் கல்விக்காகப் போராட்டங்களில் கலந்துகொண்டவர். பாலின சமத்துவம், உரிமைகள், ஆகியவற்றிற்காக வாதிட்டவர்.

   பரீட்சையை  மையமாகக் கொண்ட கல்வி முறையை நாம் அகற்ற வேண்டும். கல்வி மிகவும் அனுபவபூர்வமாக இருக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்களின் கலாசாரம் மாற வேண்டும். பாலினம், மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரிந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்க வேண்டாம். மாறாக அங்கெல்லாம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்.மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். கல்விக்கு அரசு முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற முற்போக்குச் சிந்தனைகள்  கொண்டவர்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான ஹரிணி, 2020 ஆம் ஆண்டுமுதல் முதல் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் .2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட  ஹரிணி  அமரசூரிய  655,289 விருப்பு வாக்குகளை  பெற்றிருந்தார். இந்த வாக்கு எண்ணிக்கையே  இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய வாக்கு எண்ணிக்கை .

இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரலாற்றில் இடம்பிடித்திருந்தார்.2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர் 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த எண்ணிக்கையை   ஹரிணி  அமரசூரிய முறியடித்து இலங்கை அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதியவர் .சிறிமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகியோருக்குப் பின்னர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்  என்ற பெருமையையும் பெற்றவர்.

இவ்வாறான ஒரு பலமான கல்விப் பின்புலத்தையும் தூர  நோக்கு சிந்தனைகளையும் கொண்ட ஹரிணியை, தேசிய கல்வி நிறுவகத்தின்   அச்சுப் பிழைக்காக அல்லது திட்டமிட்டு  சிலரால் அச்சிடப்பட்ட்ட  ஒரு''முகவரி''க்காக இராஜிநாமா செய்ய எதிர்க்கட்சிகள் கோருவது, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது மலிந்த சந்தர்ப்பவாத அரசியல் . ஒரு கட்டமைப்பு ரீதியான நிர்வாகப் பிரச்சினைக்கு ஒரு தனி நபரைப் பலி எடுக்க முயற்சிக்கின்றனர் ஹரிணி அமரசூரிய கல்வியை மறு சீரமைக்க முயன்றதுதான் இந்தளவு குற்றச்சாட்டுக்களுக்கும் கீழ்த்தரமான எதிர்க்கட்சிகளின் ,பிக்குகளின் விமர்சனங்களுக்கும் காரணம்.

இதேவேளை ஹரிணிக்கு எதிரான இந்த விஷமப் பிரசாரங்கள் குற்றச் சாட்டுக்களுக்கு  எதிர்கட்சிகளை மட்டும் குற்றம் சாட்டி விட முடியாது. பிரதமர் பதவிக்கு கண் வைத்திருக்கும் ஜே .வி.பி.அணியை சேர்ந்த முக்கியமான ஒரு அமைச்சரும் அவருக்கு விசுவாசமான ஒரு குழுவும் பிரதமருக்கு எதிராக  வேலைகளை, அவருக்கு நெருக்கடிகளைக்  கொடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலக வைக்கும்  சதிகளையும் செய்து வருகின்றனர் என்பது ஒன்றும்மிரகசியமல்ல. அதன் ஒரு கட்டமாகக்கூட  6 ஆம் தர  ஆங்கில  பாடப்  புத்தகத்தில்    அந்த''முகவரி'' திட்டமிட்டு போடப்பட்டிருக்க முடியும் என்பதனையும் நிராகரித்து விட முடியாது.
 
   பிரதமரும் கல்வி அமைச்சருமான  ஹரிணிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் , பிக்குகள் ,அரச எதிர்ப்பு சமூக  ஊடகங்களின்  எதிர்ப்புகள் ,விமர்சனங்கள்  அவர் ஒரு பெண் என்ற அடிப்படையில் மிகவும் கீழ்த்தரமாக அமைந்துள்ளதால் மறுபக்கம் ஹரிணிக்கான  ஆதரவும் பெருகிவருகின்றது .அதனால்தான் கல்வி அமைச்சரான ஹரிணிக்கு  எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க முடியாதென எதிர்கட்சிகளை சேர்ந்த தமிழரசுக்கட்சி பகிரங்கமாக அறிவித்துள்ளது.அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் தேசிய ஜனநாயகக்கூட்டணி  போன்றவையும் ஆதரிக்காது என்றே தெரிகின்றது.

இவ்வாறான நிலையில்தான் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தி ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலுள்ளது. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக பாரியளவில் பிரசாரம் மேற்கொண்டு அதற்கான முயற்சிகளிலும்  ஈடுபட்ட நிலையில் அதற்கு ஏனைய எதிர்கட்சிகள் சில ஒத்துழைக்க மறுத்து விட்டன.இதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று சமர்ப்பிப்போம், நாளை சமர்ப்பிப்போம்  என சாட்டுப்போக்கு சொல்லத்தொடங்கியுள்ளது. அதேவேளை எதிர்க்கட்சியின் திரிசங்கு நிலையை அறிந்த அரசு நம்பிக்கையில்லா பிரேரணையை  உடனடியாக சமர்ப்பியுங்கள், நாங்கள்  விவாதத்திற்கு எடுக்கத்  தயார் என எதிர்க்கட்சியை சீண்டிக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில் பிரதமரும் கல்வி அமைச்சகருமான ஹரிணி அமரசூரியவுக்கு  எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை ''வரும்,,,ஆனால் வராது''என்ற நிலையில்தான் உள்ளது. 

22.01.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X