Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
காரை துர்க்கா / 2019 மார்ச் 20 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே எப்போதும் மகிழ்ச்சியை விரும்புகின்றார்கள். ஆனாலும் மகிழ்ச்சியிலேயே உயர்ந்த மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து, அதனூடாகத் தானும் மகிழ்தல் ஆகும்.
இதற்காகவே மனிதர்கள் கடவுளின் குடியிருப்புக்கு (கோவில்) செல்கின்றார்கள். ஆனால், மறுவளமாகப் பார்க்கில், கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கின்றார். இவ்வாறாக ஆன்மிகமே நம் பண்புகளை உயர்வு நோக்கிக் கொண்டு செல்கின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தின் பிரகாரம், ஆரோக்கியம் என்பது உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நான்கு தளங்களில் உள்ள உயர்வான நிலை என விளக்கம் பகிர்கின்றது.
இவ்வாறாக, உயர்ந்த விழுமியங்கள் பொருந்திய மதமும் ஆன்மிகமும் இன்று மக்களைக் கூறு போடும், வலுவான ஆயுதமாகப் பரிணமித்து உள்ளது. ஏனெனில், மதம் மனித மனங்களுடனும் உள்ளத்து உணர்வுகளுடனும் சங்கமிங்கும் விடயமாகவே உள்ளது.
இது இவ்வாறாக நிற்க, இம்முறை சிவராத்திரி தினத்துக்கு முதல் தினத்தில், மன்னாரில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வு தமிழ் மனங்களைக் காயப்படுத்தி விட்டது. சரி, இந்த நிகழ்வை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, சற்று விலகி நின்று விடயங்களை அலசினால் என்ன?
இலங்கைத் தீவில் ஒட்டுமொத்த தமிழ் மக்களது பேரம் பேசும் வலுவான சக்தி, 2009இல் முள்ளிவாய்க்காலில் துவம்சம் செய்யப்பட்டது. இதனுடன், தமிழ் மக்களது விடுதலை எண்ணம் அணைந்து விடும் எனப் பெரும்பான்மையினம் எதிர்பார்த்தது.
ஆனாலும், தமிழ் மக்களது மனங்களில் தமது அரசியல் அபிலாஷைகள் என்பது, நீறுபூத்த நெருப்பாகவே உள்ளன என்பதையும் அதே சக்தி கண்டு கொண்டது. இக்காலகட்டத்தில், தமிழ் மக்களது அரசியல் விடிவுக்கான பேரம் பேசுகின்ற வலுவான அரசியல் சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பும் மிளிர்ந்தது.
இவற்றை பேரினவாதச் சிந்தனையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; சகித்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்த் தேசிய உணர்வை உடைக்கப் பல வியூகங்களை வகுத்தது; இ(தனை)வர்களைக் கூறு போட்டே தீருவோம் எனச் சபதம் எடுத்தது. அதன் பிரகாரமே, தமது ஒட்டுமொத்த விடுதலைக்கு எதிரானவைகள் என, தமிழ் மக்களால் அன்று புதைக்கப்பட்ட குப்பைகள், தற்போது தோண்டி எடுக்கப்படுகின்றன; தூசு தட்டப்படுகின்றன.
அவையே மதத்தின் பெயரால், சாதியத்தின் பெயரால், பிரதேசத்தின் பெயரால், கட்சிகளின் பெயரால் தமிழ் இனத்தைப் பிளவுபடுத்தல் ஆகும். பொது எதிரியைப் பொருட்படுத்தாது, தங்களுக்குள் பிடுங்குப்பட வைக்கும் தந்திரம் இதுவாகும். ஆகவே, பேரினவாதசக்தியால் நடப்படுகின்ற இவ்வாறான தூண்டுதல்கள், பற்றவைத்தல்கள் மிகவும் ஆபத்தானவைகள்.
இதிலிருந்து தமிழினம் சுதாகரிக்க வேண்டும். இல்லையேல், ஆயுதங்கள் இல்லாமலேயே, குருதி சிந்தும் ஒரு நிலையை தமிழினம் பரிசாகப் பெற்றுக்கொள்ளும்.
1994 காலப்பகுதியில் ஆட்சி அமைத்து, சமாதானப் புறாவாக வலம் வந்தார் சந்திரிகா அம்மையார். தமிழ் மக்கள் வழமை போலவே நம்பினார்கள். ஆனாலும், 1995இல் மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்தது.
அப்போது அவர்களால் ‘முன்னேறிப்பாய்தல்’ எனப் பெயர் சூட்டப்பட்டு, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது (1995) ஜுலை மாதம் ஒன்பதாம் திகதி, யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் மீது, ஆகாய வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது, அங்கு இடம்பெயர்ந்து அடைக்கலம் தேடித் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் விமானத் தாக்குதலால் துடி துடித்து மடிந்தார்கள்.மன்னார் மடுத் திருப்பதி கூட, பல முறை போரின் கோரப்பிடிக்குள் சிக்கியது. அங்கு கூட, பல தடவைகள் பல நூறு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறாக அழித்தவர்கள், அங்கு இந்து - கிறிஸ்தவம் பார்க்கவில்லை. தமிழர்கள் என்றே கொல்லப்பட்டார்கள்.
இதே போல, தமிழர் தாயகத்தில் காலத்துக்கு காலம் பல இந்துக் கோவில்கள் தீ இடப்பட்டன; இடித்து நொருக்கப்பட்டன. இந்துக் கோவில்களில் அடைக்கலம் தேடியிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறாக அழித்தவர்கள், அங்கு இந்து - கிறிஸ்தவம் பார்க்கவில்லை. தமிழர்கள் என்றே கொல்லப்பட்டார்கள்.
மேலும் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சிங்கள, கிறிஸ்தவ இராணுவ வீரனும் தமிழ், கிறிஸ்தவ போராளிகளுமே போரில் எதிர் எதிராக மோதி உள்ளார்கள்; மடிந்தும் உள்ளார்கள். அங்கு ஒரு மதம், அவர்களை இணைத்திருந்தாலும், இனமே அவர்களைப் பிரித்துக் களமாட வைத்தது.
இதை இன்னொரு விதத்தில் பார்ப்போம். கொழும்பில் மூவினத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொள்கின்ற ஆங்கில மொழி மூல பயிற்சிப்பட்டறை நடைபெறுகின்றது என எடுத்துக் கொள்வோம். அங்கு வவுனியாவைச் சேர்ந்த தமிழர், இந்து சமயத்தவர். மன்னாரைச் சேர்ந்த தமிழர் கிறிஸ்தவ சமயத்தவர். குருணாகலைச் சேர்ந்த சிங்களவர் கிறிஸ்தவ சமயத்தவர் எனப் பலர் பங்குபற்றுகின்றார்கள்.
இவர்களிடையே இருவர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அறையில் தங்குங்கள் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர் என வைத்துக் கொள்வோம். இங்கு இனரீதியாகவா மதரீதியாகவா நண்பர்கள் விரும்பி ஒன்று கூடுவார்கள். மன்னாரும் வவுனியாவும் ஒன்றாகுமா? மன்னாரும் குருணாகலும் ஒன்றாகுமா?
ஆகவே, இலங்கைத்தீவில் மதமுரண்பாடுகள் அவ்வப்போது, ஆங்காங்கே காணப்பட்டாலும் அதையும் தாண்டி, இனமுரண்பாடே வீரியம் கொண்டதாக உள்ளது. (வடக்கிலும் கிழக்கிலும், பௌத்த மதம் பிற இனத்தவரது நிலம் பிடிக்கும் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது) இனமுரண்பாடே அ(இ)ழிவுகளை தமிழ் மக்களுக்கு வழங்கியது; வழங்கிக் கொண்டும் வருகின்றது. இவ்வாறாக அழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனம் என, இனரீதியாக ஒன்றுபட்டுப் பலம் கொண்டு எழுச்சி பெறாது, மதரீதியாக முரண்பட்டு பலவீனமடைய வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
மேலும், தமிழ் மக்கள் மதிக்கின்ற தமிழின விடுதலைக்கான முன்னோடியாக தந்தை செல்வா போற்றப்படுகின்றார். இவர் ஒரு கிறிஸ்தவர். இருந்த போதிலும் மதம் கடந்து இனத்தின் பெயரால் தந்தை என்ற உயரிய நாமத்தால் இன்று கூட தமிழ் மக்கள் அனைவருமே மதிக்கின்றோம்; போற்றுகின்றோம்.
முன்னை நாள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையை கிறிஸ்தவ மக்கள் குரு முதல்வராக நோக்கினாலும் இந்து மக்கள் தமக்கு நிலையான சமாதானத்தைக் கொண்டு வரும் சமாதான (இறை) தூதராகவே நோக்குகின்றனர்.
நாங்களே (தமிழ் மக்களே) கற்பனை செய்து பார்த்திருக்காத விரும்பாத பெரும் கொடிய வலிகள் நிறைந்த போர் தமிழன் என்ற ஒற்றைச் சொல்லாலேயே எம் மீது திணிக்கப்பட்டது. கந்தசாமியோ அன்ரனோ, தமிழன் என்பதாலேயே தரப்படுத்தல் எம்மை கீழ் நிலைப்படுத்தியது.
ஆகவே, மீதமுள்ள எமது பலத்தை மதம் கொண்டு அழிக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது; தூபங்கள் தூவப்பட்டு உள்ளது. இரும்பு வளைவுகள் வளையலாம். தமிழ் (தமிழன்) என்ற வளை வழுக்கக் கூடாது.
இன்று பொதுவாக வடக்கு, கிழக்கில் உள்ள கோவில்கள், தேவாலயங்களது பௌதீக வளங்கள் அதிகரித்து உள்ளன; அதிகரித்து வருகின்றன. ஆனாலும் நாம் சிறுபராயத்தில் கும்பிட்ட, ஜெபித்த வீதியின் ஓரமாக இருந்த வைரவர் சூழலும் இயேசு சுருவமும் மனதுக்கு வழங்கிய ஆன்மிக சுகத்தை, நீண்ட வானத்தைத் முட்டும் கோவில் கோபுரங்களும் தேவாலயக் கட்டடங்களும் வழங்குகின்றனவா என்பது வினாக்குறிக்கு உரியதே.
ஆகவே, வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் உறவுகள் இனிமேலும் புதிதாக இந்துக்கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறுவுவதை நிறுத்துவோம். தற்போது இருப்பவற்றைப் பாதுகாப்போம். புனிதமான எம் நல்லுறவுகளுக்கு கொள்ளி வைப்பவர்களை அடையாளம் காணுவோம்.
கடந்த செவ்வாய்கிழமை கூட, அந்தோனியார் கோவிலுக்கு மெழுகுதிரியுடன் சென்று பிரார்த்தனை செய்து விட்டு வரும் இந்து மக்களை காண்கின்றோம். வைகாசி மாதம் வரவிருக்கின்ற முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல் செய்ய காத்திருக்கின்ற கத்தோலிக்க மக்களையும் காண்கின்றோம்.
ஆகவே, கடினமான சொற்களைத் தவிர்ப்போம். உதடுகளை மூடி இதயங்களைத் திறப்போம். எம்மிடம் உள்ள தராசுகளைக் கொண்டு பிறரைத் தீர்ப்பிடுவதைத் தவிர்ப்போம்; எம்மை நாமே தீர்ப்பிடுவோம்.
நாளை எமக்கான தீர்வுகள் கிடைத்து எங்களை நாமே ஆளுகின்ற காலம் நிச்சயமாக வ(மல)ரும். ஏனெனில் எமது கோரிக்கைகள் அறத்தின் பாற்பட்டவை. அங்கே ஆன்மிகம் என்ற அத்திவாரத்தின் மீதே எம் தேசம் கட்டி எழுப்பப்பட வேண்டும்; எழுப்புவோம்.
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago