2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விக்னேஸ்வரனும் தீர்ப்பும்

என்.கே. அஷோக்பரன்   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், அண்மையில் அரசமைப்பு ரீதியாகவும் தமிழர் அரசியல் தொடர்பிலும் இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்பு மிக்கதுமானதொரு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.   

இந்தத் தீர்ப்புக்குள் பொதிந்துள்ள அரசமைப்பு முக்கியத்துவம், வௌிப்பார்வைக்குப் பலருக்குப் புலப்படாது போயிருக்கலாம். அது, இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை, தனிநபர்களின் அரசியல் பிரச்சினையாகப் பார்க்கும், அணுகும் போக்கை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், இவற்றைத் தாண்டி, இந்தத் தீர்ப்பு, இந்த நாட்டின் அரசமைப்பையும் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பையும் அரசியலையும் குறிப்பாக, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான, தமிழர் அரசியலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை, மிகச் சுருக்கமாகப் பார்ப்பதுவே இந்தப் பத்தியின் நோக்கமாகும்.   
வடமாகாண சபையின் அமைச்சரவையில் அங்கம் வகித்த டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகிய இருவரையும், வடமாகாண சபையின் இறுதிக் காலகட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், குறித்த இருவரையும் அவர்கள் வகித்து வந்த மாகாண அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக்கி, புதிய இருவரை நியமித்தார்.   

முதலமைச்சர், தன்னைப் பதவியிலிருந்து விலக்கியது தவறு என்றும் அந்த முடிவைத் தவறென்று முடக்குவதற்கு, டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ‘றிட்’ மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், முதலமைச்சர் விக்னேஸ்வரன், நீக்கப்பட்ட மற்றோர் அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்கள்.   
இந்த வழக்கின் தீர்ப்பானது, 2019 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வௌியாகியிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் வாதிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, நீதியரசர் பிரியந்த பெர்ணான்டோவின் முழுமையான இணக்கத்துடன், நீதியரசர் மஹிந்த சமயவர்தனவால் வழங்கப்பட்டிருந்தது.  

தீர்ப்பின் சுருக்கம்  

மனுதாரராக டெனீஸ்வரனின் வாதமானது, அவரை அமைச்சராக நியமனம் செய்தவர் வடமாகாண ஆளுநர் என்றும் இலங்கையின் அரசமைப்பின் படி, குறிப்பாக 13ஆம் திருத்தத்தின் கீழ், மாகாண அமைச்சர்களை, முதலமைச்சரின் ஆலோசனையின்படி நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்றும், அமைச்சர்களைப் பதவி நீக்குவது தொடர்பில், அரசமைப்பு வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாத பட்சத்தில், பதவியில் நியமிக்கும் அதிகாரம் உள்ளவருக்கே, பதவி நீக்கும் அதிகாரம் உண்டு எனும் பொருள்கோடல் கட்டளைச் சட்டம் உரைக்கும் வகையில், தன்னைப் பதவி நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்றும், ஆகவே, தன்னைப் பதவி நீக்கும் அதிகாரம், முதலமைச்சருக்கு இல்லையென்றும், எனவே, தன்னை முதலமைச்சர் பதவி நீக்கியது, செல்லாது என்ற அடிப்படையில் அமைந்திருந்தது.   

மறுபுறத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதமானது, மாகாண அமைச்சர்களின் பதவி நீக்கம் பற்றி, அரசமைப்பு வௌிப்படையாக எதுவுமே குறிப்பிடாததால், குறித்த விடயம் தொடர்பிலான பொருள்கோடலொன்று அவசியமாகிறது.   

இலங்கை அரசமைப்பின்படி, அரசமைப்புக்குப் பொருள்கோடல் வழங்கும் ஏகபோக அதிகாரம், இலங்கையின் உயர் நீதிமன்றத்துக்கே இருக்கிறது; ஆகவே, குறித்த பொருள்கோடலைப் பெற்றுக்கொள்வதற்காக, குறித்த வழக்கானது, அரசமைப்பின் 125ஆவது சரத்தின் கீழ், உயர்நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதாக அமைந்திருந்தது.   

மேலும், பதவி நீக்கும் அதிகாரம் சட்டத்தின்படியும் பொதுவுணர்வின்படியும் முதலமைச்சரிடமே இருக்கவேண்டும் என்றும் அவர்தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.  
தன்னுடைய தீர்ப்பில் நீதியரசர் மஹிந்த சமயவர்தன, 125ஆவது சரத்தின் கீழ், உயர்நீதிமன்றத்துக்கு குறித்த வழக்கை அனுப்ப மறுத்திருந்தார். பொருள்கோடல் தொடர்பில் முரண்பாடு இருந்தால் மட்டுமே, உயர்நீதிமன்றத்துக்குக் குறித்த வழக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற முன்னாள் பிரதம நீதியரசர் சமரக்கோனின் தீர்ப்பொன்றை எடுத்துக்காட்டிய நீதியரசர் சமயவர்தன, இந்த வழக்கில் பொருள்கோடல் கட்டளைச்சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, குறித்த நபரொருவரைப் பதவிக்கு நியமிப்பவருக்கே, குறித்த நபரொருவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உண்டு என்றும், மாகாண அமைச்சர்களை ஆளுநரே நியமிப்பதால், அவர்களைப் பதவிநீக்கும் அதிகாரமும் மாகாண ஆளுநருக்கே உண்டு என்றும் அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்றும் ஆகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறித்த அமைச்சரைப் பதவி நீக்கிய முடிவு செல்லாது என்றும் தீர்ப்பளித்த நீதியரசர் சமயவர்தன, குறித்த முடிவை முடக்கும் ‘றிட்’ ஆணையைப் பிறப்பித்ததுடன், நீக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்குப் பதிலாக, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மனுதாரர் டெனீஸ்வரனுக்கு வழக்குச் செலவை வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.  

இந்த வழக்கின் தீர்ப்பு, தமிழ் மக்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வடமாகாண சபையில் பதவிக்காலம், ஏலவே முடிந்துவிட்டதால், நடைமுறை ரீதியில் நேரடியான விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை.   

ஆயினும், இலங்கை உயர்நீதிமன்றின் நீதியரசராகப் பதவிவகித்த நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு, அசாதகமான தீர்ப்பாக இது அமைந்ததில், அரசியல் ரீதியில் இதனை விமர்சிப்பவர்கள், நீதியரசருக்கே நீதி தெரியவில்லை என்ற ரீதியிலான சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை உரைப்பதும் பரப்புரை செய்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்ல.   

அது, இந்த வழக்கு சுட்டி நிற்கும் அரசமைப்பு ரீதியிலானதொரு முக்கியத்துவத்தை மழுங்கடிப்பதாக அமைவதுடன், வெறும் தனிமனிதப் பிரச்சினையாக இதைச் சுருக்குவதாகவே அமைகிறது.   

ஆகவே, இந்தத் தனிமனித அரசியல் பிரச்சினைகளைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியல், இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற அடிப்படைகளில், இந்தத் தீர்ப்பை நாம் பார்க்க வேண்டியது அவசியம்.  

தீர்ப்பின் அரசியல் முக்கியத்துவம் என்ன?  

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், அரசமைப்புக்கான 13ஆவது திருத்தமும் மாகாண சபைகளும் தீர்வுக்கான அடிப்படையாக அமைந்துவிடுகின்றன.   

இந்த 13ஆவது திருத்தமானது, இந்தியாவின் கடுமையான அழுத்தத்தின் பெயரில் ஜே.ஆரால் கொண்டுவரப்பட்டது. இந்திய மாதிரியிலானதோர் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பாக இது கொண்டுவரப்பட இந்தியாவால் உத்தேசிக்கப்பட்டிருந்தாலும், ஜே.ஆரின் சாணக்கியத்தால், அதன் ‘அடர்த்தி’ குறைக்கப்பட்டு, யதார்த்தத்தில் கிட்டத்தட்ட பெருப்பிக்கப்பட்டதோர் உள்ளூராட்சி மன்றம் போலவே, மாகாண சபைகள் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன.   

இதனாலேயே தமிழர் தரப்பானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக ஏற்க மறுத்துவருகிறது. ஆயினும், இணக்கப்பாடு நோக்கிய பயணத்தில் ஈடுபடும் தமிழ்த் தலைமைகள், 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்களைக் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, தமது முயற்சிகளைத் தொடர்கிறார்கள்.   

ஆனால், மத்திக்கும் மாகாணத்துக்குமாக அதிகாரப் பகிர்வு என்பது, மிகச் சிக்கலானதொன்றாக ஜே.ஆர் வடிவமைத்த 13ஆவது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி மூன்றாவது திருத்தம் பற்றி விவரமாக ஆராயும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஆய்வொன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது:  

‘அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான பிரதான தடைகளில் ஒன்று வலிதாக்கப்பட்ட ஓர் ஒற்றையாட்சி அரசொன்றைக் கட்டுப்படுத்தும் சட்டகத்தின் கீழ், 13ஆவது திருத்தம் தொழிற்படுகின்றது என்பது, இதன் ஓர் அம்சம் தேசிய நாடாளுமன்றம் அதன் சட்டவாக்க அதிகாரத்தைத் துறத்தலோடு, எந்தவிதத்திலும் பராதீனப்படுத்துதலோ ஆகாது என்பதுடன், ஏதேனும் சட்டவாக்க அதிகாரம் கொண்ட ஏதேனும் அதிகார சபையான மாகாண சபைகளுக்கு, ஏற்பாடு செய்கின்ற 154எ உறுப்புரையுடன் ஒத்திருப்பதாகத் தோன்றவில்லையெனச் சுட்டிக்காட்டப்பட்டது. இப்புறக் கட்டுப்பாடுகளுக்குள் தொழிற்படுவதாலும் 13ஆவது திருத்தம், அரசமைப்புடன் ஒத்திருப்பதாகப் பொருள்கொள்ளும் வகையில் 13ஆவது திருத்தம் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையினர் எடுத்த அதிகாரப் பகிர்வு பற்றிய குறுகிய நோக்காலும் மாகாண சபைகளால் அதிகாரங்களின் பிரயோகம், முரண்பாடான ஒரு சந்தர்ப்பத்தில் மத்திய அரசாங்கத்துக்கு மட்டும் சாதகமாகத் தீர்க்கப் படக்கூடிய ஓர் அரசமைப்பு ஐயப்பாட்டுடன் தொடங்குகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை (அத்துடன் பகிர்ந்தளிப்பு வாய்ப்புகளுக்கான ஆதரவை) மய்யப்படுத்துகின்ற 1978 அரசமைப்பின் கீழ், மிதமிஞ்சிய வல்லமையுள்ள ஜனாதிபதிப்பதவி, ஒத்திசைவான அதிகாரப்பகிர்வு முறைமைக்குப் பகையானதென்ற கருத்தும் நிலவியது. அதிகாரப் பகிர்வுக்கும் மாகாண சுயாட்சிக்கும் ஒரு முக்கிய இடர்பாடாக ‘ஒருங்கிய நிரல்’ காணப்பட்டது. ‘ஒருங்கிய நிரலில்’ கூறப்பட்ட விடயங்கள் மீதான சட்டவாக்க, நிறைவேற்று அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படுதலை உறுதிப்படுத்த முனைகின்ற அரசமைப்பு ஏற்பாடுகள் எப்படியிருந்தாலும், அரசமைப்பின் வேறு ஏற்பாடுகளும் (எடுத்துக்காட்டாக உறுப்புரை 76 மற்றும் மேலும் குறிப்பாக மாகாணச் சட்டங்களுக்கு மேல் தேசியச் சட்டங்களுக்கு முந்து தலைமை வழங்குகின்ற உறுப்புரை 154எ) அதேபோன்று ஒருங்கிய அதிகாரங்களின் பிரயோகம் தொடர்பில் இரு தசாப்தங்களுக்கு மேலாக, மத்திய அரசாங்கத்தின் நடைமுறையும் மாகாண சபைகள் அவ்வதிகாரங்களை அர்த்தமுள்ள முறையில் அனுபவிக்க இயலாதவையெனக் காட்டியுள்ளன’.  
ஆகவே, ஏலவே ஒருங்கிய நிரல் உள்ளிட்ட மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பிலான கடும் அதிருப்தியும் முரண்பாடும் நிலவிவரும் நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பானது, மாகாண அமைச்சரவையை மாற்றியமைக்கும் அதிகாரம் கூட, முதலமைச்சரிடம் கிடையாது. அது, ஜனாதிபதியால் தன்னிச்சையாக நியமிக்கப்படும் ஆளுநரிடமே இருக்கிறது என்பதை வௌிப்படுத்தி நிற்கிறது.   

13ஆவது திருத்தம் என்பது, அதிகாரப் பகிர்வு நோக்கத்துடன், மாகாண சபைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. ஆகவே, ஒரு குறித்த மாகாண மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் ஒருவருக்கு, தன்னுடைய அமைச்சரவையை மாற்றியமைக்கும் அதிகாரம் இல்லை; அது, மக்களால் தேர்தந்தெடுக்கப்படாத, மத்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிர்வாகியான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே உண்டு என்பது, 13ஆவது திருத்தத்தின் குறைபாட்டையே சுட்டிநிற்கிறது.   

ஆகவே, இந்தத் தீர்ப்பு விக்னேஸ்வரனின் தோல்வி அல்ல; 13ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான அடிப்படையாகவேனும் அமையும் என்று எண்ணியிருந்த அனைவரதும் தோல்வி.  

இது, டெனீஸ்வரனின் வெற்றியல்ல; 13ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏதுவானதொரு தீர்வுமல்ல; தீர்வின் அடிப்படையுமல்ல என்று வாதிடுபவர்களின் வெற்றி.   

அந்த வகையில் பார்க்கும் போது, அரசியல் தீர்வு என்ற வகையில் 13ஆவது திருத்ததின் அர்த்தமற்ற தன்மையை மீண்டுமொருமுறை அழுத்தமாக தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்ததற்காக டெனீஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கு, தமிழ் மக்கள் நன்றி சொல்லலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .