Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர உள்ளிட்ட, அக்கட்சியின் அக்காலத் தலைவர்கள், 1979ஆம் ஆண்டளவில் ‘ஸ்ரீ லங்கா நிதஹஸ் பக்ஷயே கமனக்க அவசானய’ (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதிப் பயணம்) என்ற தலைப்பில், நாடு முழுவதிலும் மக்கள் மத்தியில் சிறப்புரையொன்றை நிகழ்த்தி வந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதன் அழிவை நெருங்கி வருகிறது என்பதே, அதன் கருப்பொருளாக இருந்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1959ஆம் ஆண்டு, பிக்கு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர், அவரது வாழ்க்கையை விவரிக்கும் விவரணப் படமொன்று, அவரது கட்சியால் நாடு முழுவதும் காண்பிக்கப்பட்டது. ‘கமனக்க அவசானய’ என்பதே அதன் பெயராகும். அதிலிருந்தே, மேற்படி விவரணப் படத்துக்கான பெயர் பெறப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியினர், அந்தப் பிரசாரத்தை நிகழ்த்தி வந்த காலத்தில், உண்மையிலேயே ஸ்ரீ ல.சு.க, அதன் இறுதிப் பயணத்தை மேற்கொள்ளும் அளவுக்குப் பலவீனமாக இருக்கவில்லை. அதன் பின்னர், அக்கட்சி 1994ஆம் ஆண்டு முதல், 2014ஆம் ஆண்டு வரை, நாட்டை ஆட்சி செய்து
ஆனால், தற்போது அக்கட்சி, அதன் இறுதி ஊர்வலத்தில் பயணிக்கிறது என்றே தெரிகிறது. அதன் தலைவர்களில் முக்கியமானவர்கள் பலர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளியேறி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மிகச் சிலர் மட்டுமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீ ல.சு.க என்ற பெயரில் செயற்பட்டு வருகிறார்கள்.
கட்சியின் தலைவர்களதும் உறுப்பினர்கள், ஆதரவாளர்களதும் எண்ணிக்கை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற நிலைமைகளைப் பார்த்தால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே உண்மையான ஸ்ரீ ல.சு.கவாக இருக்கிறது. கட்சியின் மிகச் சில உறுப்பினர்கள், ஆதரவாளர்களோடு அதன் பெயர்ப் பலகை மட்டுமே, தற்போது கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கிறது.
2015ஆம் ஆண்டு, மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற போது, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள், தமது எதிர்காலத்தைப் பற்றி, மிகவும் அச்சமடைந்து இருந்தனர். எனவே, மஹிந்த அப்போது, ஸ்ரீ ல.சு.க உறுப்புரிமையை இடைநிறுத்தம் செய்து, மைத்திரியிடம் கட்சித் தலைமையை ஒப்படைக்கத் தாமாக முன்வந்தார்.
ஆனால், கட்சியில் மிகப் பெரும்பான்மையினர், மஹிந்தவின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். மைத்திரி, கட்சிக் கட்டுப்பாடு என்ற விடயத்தில், கடுமையாக இருந்திருந்தால் அந்த நிலை மாறி, கட்சி அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். ஆனால், அது நடைபெறவில்லை.
பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அக்கட்சி, கடந்த வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அமோக வெற்றியைப் பெற்றது. அத்தேர்தலின் போது, ஸ்ரீ ல.சு.கவின் ஆதரவாளர்களில் நான்கில் ஒரு பகுதியினரே, மைத்திரி தலைமையிலான ஸ்ரீ ல.சு.கவை ஆதரித்தனர். ஏனையோர் மஹிந்தவுடன் சென்றுவிட்டனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மஹிந்த அணியினர் மாபெரும் வெற்றியை அடைந்த பின், மைத்திரி அணியில் மீதமாக இருந்தவர்களும் மஹிந்தவின் பக்கம் தாவ முயற்சி செய்தனர்.
அதன்படியே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை, ஸ்ரீ ல.சு.கவைச் சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாகவும் பிரதி சபாநாயகராகவுமாக இருந்துகொண்டே ஆதரித்தனர்.
அதன் விளைவாக, அவர்கள் அமைச்சர், பிரதி சபாநாயகர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்ய நேர்ந்தது. அப்போது, பொதுஜன பெரமுன தம்மை வரவேற்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் மகிழ்ச்சியோடு இராஜினாமாச் செய்தனர். ஆனால் பொதுஜன பெரமுன அவர்களை, அவ்வாறு வரவேற்கவில்லை.
அவர்கள், பொதுஜன பெரமுனவுக்கு அவசியமில்லை என்பது, அதன் அர்த்தமல்ல. அவர்கள் வந்தால், அவர்களுக்குத் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்க வேண்டி வரும். ஆனால், ஏற்கெனவே சகல தேர்தல் தொகுதிகள் மீதும் ஏற்கெனவே பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் கண்வைத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள், இவர்கள் வருவதை விரும்பவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபாலவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, அரசியல் திரிசங்கு நிலையை எதிர்நோக்கி வருகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியோடு அவருக்குத் தொடர்ந்தும் இருக்க முடியாது. ஒருபுறம், ஐ.தே.கவுக்கு எதிர்காலம் இல்லைப் போல் தெரிகிறது. மறுபுறம், மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான மோதல், உச்சநிலையை அடைந்தது.
எனவே, அவர் மஹிந்தவைத் ‘தாஜா’ செய்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முடியுமா என்று முயற்சித்துப் பார்த்தார். அதற்காக ஸ்ரீ ல.சு.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுவாரத்தைகள் ஆரம்பிக்கப்படடன. ஆனால், அவற்றைப் பற்றி அவ்வளவு அக்கறை செலுத்தாமல், பொதுஜன பெரமுன, தமது ஜனாதிபதி வேட்பாளரைத் தீரமானித்து விட்டது. கடந்த 11ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
இப்போது, ஸ்ரீ ல.சு.கவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. ஐ.தே.கவுடன் மீண்டும் இணையவும் முடியாது. அது, கட்சியின் ஆதரவுத் தளத்தை, மேலும் பலவீனமடையச் செய்துவிடும். அதனால், ஐ.தே.கவுக்கோ தமக்கோ, தேர்தல் வெற்றிகளை அடைய முடியும் என்று கூறவும் முடியாது.அதேவேளை, அது வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள, பொதுஜன பெரமுனவின் தலைவர்களை, மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும். அதன் மூலம், பழிவாங்கலுக்கு ஆளாகும் அபாயமும் இருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டே, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள், பகிரங்கமாகவே பொதுஜன பெரமுனவில் இணைந்துவிட்டனர்; மஹிந்த, பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது சுதந்திர கட்சியினதும் ஐ.ம.சு.முவினதும் யாப்புகளுக்கு முரணானதாக இருந்தும், பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால், தாம் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தால், மைத்திரி மௌனமாக இருக்கிறார்.
மறுபுறத்தில், தம்மை அலட்சியப்படுத்தும் பொதுஜன பெரமுனவிடம் ஸ்ரீ ல.சு.க மண்டியிடவும் முடியாது. அவர்கள், முன் எவ்வளவு தான் பணிந்து போனாலும், அவர்கள் ஸ்ரீ ல.சு.கவை பெரிதாக மதிப்பதில்லை. ஸ்ரீ ல.சு.க இல்லாமல், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலைப்பாட்டில், பொதுஜன பெரமுன செயற்படுவதாகத் தெரியவில்லை.
இரு கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பொதுஜன பெரமுன, ஸ்ரீ ல.சு.க தம்மை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தபோதிலும், அதற்குப் பகிரங்கமாக, ஸ்ரீ ல.சு.க என்ன பெறப் போகிறது என்று கூறுவதுமில்லை.
தம்மோடு, பொதுஜன பெரமுன இணையாவிட்டால், தமது கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என, ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர போன்றோர்கள் கூறி வருகிறார்கள்.
எனினும், அதனால் பொதுஜன பெரமுன, தமது நிலைப்பாட்டைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே, ஸ்ரீ ல.சு.க தனித்துப் போட்டியிடுவதால், பொதுஜன பெரமுனவுக்கு நட்டம் ஏற்படாமல் இல்லை. ஆனால், ஸ்ரீ ல.சு.க தனித்துப் போட்டியிட்டால், அக்கட்சி படுமோசமான முறையில் தோல்வியடைந்து, தமது இறுதிப் பயணத்தைத் துரிதப்படுத்திக் கொள்ளுமேயல்லாது, அக்கட்சிக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
தமது உண்மையான பலத்தை மூடி மறைக்க, ஸ்ரீ ல.சு.கவுக்கு தற்போதுள்ள ஒரே வழி, ஏதாவது காரணத்தைக் கூறி, பொதுஜன பெரமுனவை ஆதரிப்பது மட்டுமே ஆகும். அதனால் தான், தமது கொள்கைக்கு நெருக்கமான ஒரு குழுவைத் தான் ஆதரிப்போம் என, ஸ்ரீ ல.சு.க எம்.பியும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, ஞாயிற்றுக்கிழமை (25)கூறியிருந்தார் போலும்.
ஆனால், அவமானத்தோடு தான் அவர்கள் பொதுஜன முன்னணியுடன் இணைய வேண்டும் போலிருக்கிறது.
ஐ.தே.க தற்கொலை செய்துகொள்ள போகிறதா?
ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சி, பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.
ஆனால் ஊடகவியலாளர்கள், “உங்கள் ஜனாதிபதி வேட்பாளரை ஏன் இன்னமும் தெரிவு செய்யவில்லை” என்று, ஐ.தே.க தலைவர்களிடம் கேட்டால், “நாங்கள் உரிய நேரத்தில், அதனை அறிவிப்போம்” என்று கூறுகிறார்கள்.
அவர்கள் உரிய நேரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? தேர்தலுக்கு ஆகக் கூடியது, இரண்டரை மாதங்கள் தான் இருக்கின்றன. ஏனெனில், அத்தேர்தல் அனேகமாக, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் உரிய காலம் இது தான்.
ஆனால், ஐ.தே.கவுக்குத் தமது வேட்பாளரை அறிவிக்க முடியாது. காரணம், கட்சித் தலைவர்களுக்கு இடையே அது தொடர்பாக கடுமையான முரண்பாடுகள் இருக்கின்றன. அதனால் கட்சி, உத்தியோகபூர்வமாக ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் இருக்கிறது. அதுவே உண்மையான காரணம்.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே, கட்சியின் வேட்பாளர் எனச் சில மாதங்களுக்கு முன்னர், ஐ.தே.க தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், அதனை அப்போது கட்சியின் பல பிரதேசத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையைப் பற்றி, நீண்ட காலமாக, ஐ.தே.கவின் பலர் அதிருப்தி தெரிவித்து வருவதே அதற்குக் காரணமாகும்.
தலைமைக்கு எதிரான இது போன்ற நீண்ட காலக் கிளர்ச்சியொன்று ஐ.தே.கவுக்குள் மட்டுமே நிலவி வருகிறது. 2001ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாக ரணிலின் தலைமைக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி எழுந்தது.
கட்சியின் செயலாளராகவிருந்த இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க தலைவரான காமினி அத்துகோரளையே அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, டபிள்யூ ஜே. எம் லொக்குபண்டார போன்றோரும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்களாக இருந்தனர். ஆனால், ரணில் மிகச் சாதுரியமாக அந்தப் பிரச்சினையைச் சமாளித்தார்.
ரணிலின் தலைமையில் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதே, இந்தக் கிளர்ச்சிக் காரர்களின் பிரதான வாதமாகியது. ஆனால், அதே ஆண்டு, அதாவது 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலேயே ஐ.தே.க வெற்றி பெற்று, ரணில் பிரதமரானார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் இதே குற்றச்சாட்டின் பேரில், ரணிலுக்கு எதிராகக் கட்சிக்குள் இருந்து கிளர்ச்சிகள் வெடித்தன. எனினும், ஐ.தே.கவின் செயற்குழுவில் பெரும்பான்மையினர் ரணில் ஆதரவாளர்கள் என்பதால், அந்தக் கிளர்ச்சிகள் வெற்றி பெறவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்தும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகியது. அதனையும் ரணில் சாணக்கியமாக சமாளித்தார்.
ஆனால், இம்முறை நிலைமை மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவே தெரிகிறது. இதற்கு முன்னர், ரணிலின் தலைமைக்குச் சவால் விடுத்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இம்முறை தமது நிலைப்பாட்டில் மிகக் கடுமையாக இருக்கிறார். போதாக்குறைக்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், அவரை ஆதரிப்பதாகவே தெரிகிறது. அத்தோடு, ரணிலின் நெருங்கிய ஆதரவாளர்களாகவிருந்த மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாஷிம் போன்றவர்களும் பகிரங்கமாகவே, சஜித்தை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க போன்ற ஒரு சிலரே சஜித்தைப் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.
தாம் ஐ.தே.க சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஆரம்பத்தில் சூசகமாக தெரிவித்து வந்த சஜித், இப்போது அது தொடர்பாகக் கட்சி எவ்வித முடிவும் எடுத்தில்லா நிலையிலும், தாமே ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளையிலும் அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையிலும் பிரமாண்டமான இரண்டு கூட்டங்களை நடத்தினர்.
இவ்வாறு, ஐ.தே.கவுக்குள் சஜித்துக்கான ஆதரவு பெருகி வந்த போதிலும் கட்சித் தலைவர் ரணில், இன்னமும் சஜித்தின் திட்டத்தை முறியடிக்க முயற்சிப்பதாகவே தெரிகிறது. ஆனால், கட்சிக்குள்ளும் நாட்டிலும் சஜித் தான் ஐ.தே.க வேட்பாளர் என்றதோர் அபிப்பிராயம் உருவாகியிருக்கும் நிலையில் அதற்கு எதிரனதொரு முடிவைக் கட்சித் தலைமையால் இப்போது எடுக்க முடியுமா என்பது சந்தேகமே.
அவ்வாறானதொரு முடிவைக் கட்சித் தலைமை எடுத்தால், சஜித்தும் அவரை இதுவரை ஆதரித்தவர்களும் நாட்டின் முன்னாலும் கட்சிக்குள்ளும் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கும். அந்த நிலையில், அவர்கள் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதும் கட்சியை அச்சுறுத்தும் சவாலாக இருக்கிறது. இந்த நிலை, ஐ.தே.கவுடன் இணைந்துள்ள சிறிய, சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாட்டையும் மாற்றலாம். எனவே, கட்சித் தலைவர்கள், விரைவில் சுமூக முடிவொன்றை எடுப்பதே கட்சியைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago
55 minute ago