2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சேற்றில் விளைந்தது...

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். நள்ளிரவாகியும் நித்திரைவரவில்லை. தூரத்தில் நாயொன்று எதற்கோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. தலைமாட்டுக்குள் கையைவிட்டு தீப்பெட்டியைத் தேடினேன். என் மனைவியும் எழுந்துவிட்டாள்.

'என்னங்க இன்னம் தூங்கல்லயா...'

நான் எதுவும் பேசவில்லை, பாயில் கிடந்த துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, தீப்பெட்டியை கையில் எடுத்தவாறு திண்ணைக்கு நடந்தேன். மறுபறத்தில் என் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான். காலையில்தான் பல்கலைக்கழகத்திலிருந்து வந்தான். அவன் ஒரு பட்டதாரி. கிழிந்த பாயில் நுளம்புக்கடிக்குள் அவன் தூங்கும் பரிதாபத்தை சில வினாடிகள் பார்த்துக்கொண்டே திண்ணைக்குச் சென்று குத்தியில் அமர்ந்துகொண்டேன்.

முற்றத்துத் தென்னந்தோப்பிலிருந்து விளையாடிய 'குளு குளு' காற்று என்னையும் தழுவி எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டுபோகிறது. உலகமே உறங்குகிறது. என் கண்கள் மாத்திரம் அந்தப் பாக்கியத்தை இழந்துவிட்டன. நான் கண்ட கனவு நனவாகிவிட்டது. ஆம் என் மகன் ஒரு பட்டதாரி.

'வாப்பா... இனி ஒண்டுக்கும் கவலப்படாதங்க வாப்பா... எனக்கி பேங்குல வேல கெடக்கப்போகுது... நம்மட கஸ்டமெல்லாம் இனி வெலகப்போகுது...'

காலையில் அவன் வந்தவுடன் சொன்ன வார்த்தைகள் எரியும் என் காதுகளுக்குள் இன்னும் தேன் வார்க்கிறது. காலையில் அவனைப் பார்க்க எத்தனை பேர் வந்தார்கள். அத்தனைபேரும் படித்தவர்கள். வந்தவர்களை உக்கார வைப்பதற்கு என் மகன் பட்டபாடு கொஞ்சமா! வீட்டில் நல்ல பாயில்லை. நாங்கள் படுக்கும் கிழிந்தபாய்களைக் கொண்டு பொருத்தி ஒருவாறு சமாளித்துவிட்டான்.

வந்தவர்களுக்கு தேனீர் கொடுக்க அவன் பட்ட சங்கடத்தைப் பார்த்துவிட்டு நான்தான் பக்கத்துக் கடைக்குச் சென்று வழமைபோல பல்லிழித்து,
'வாறமாசம் வெள்ளாம வெட்டினா மொதல்ல ஒண்ட கடனத்தான் அடக்கிற...'

என்று கடைக்காரனுக்கு நம்பிக்கை கொடுத்து கொஞ்சம் சீனி வாங்கி வந்து கொடுப்பது பெரும் பாடாகிவிட்டது. எப்படியோ வந்தவர்களை சமாளித்து அனுப்பிய என் மகன் பட்டதாரிக்கு இன்றிரவுச் சாப்பாடு பகல் ஆக்கிய பழஞ்சோறும் பொட்டியான் சுண்டலும்தான். என்னால் என்ன செய்யமுடியும்! முடிந்தவரை உழைத்து இவனைப் படிப்பித்திருக்கிறேன். இனி இவன்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்.

இவனைப் படிப்பிக்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா! காலையில் கண் கழுவிக் கொண்டு என் மகன் காலை உணவுமில்லாமல் பாடசாலை செல்லும்போது என் வயிறு பற்றி எரியும். இவன் அடிக்கடி வந்து கொப்பி, புத்தகமென்று கேட்கும்போது கையில் இருந்தால் வாங்கிக் கொடுப்பேன், இல்லையென்றால் எப்படிச் சமாளித்தானோ எனக்குத் தெரியாது.

இவன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இப்படித்தான் ஒருநாள் திடீரென்றுவந்து,

'வாப்பா... ஸ்கூலால ட்றிப் போபறாங்க வாப்பா... நானும் போப்றன்... எனக்கும் நாலாயிரம் ரூவா தாங்க... கட்டாயம் தரணும்...'
என்று வற்புறுத்திவிட்டு என் தலைமீதும் மனம் மீதும் பெரும் பாறாங்கல்லை ஏற்றிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

'என்னங்க... ஒரமா யோசிக்காதங்க... மகன் அப்பிடி என்னத்த கேட்டுட்டாரு... காசி நாலாயிரம்தானே.. நீங்க கவலப்படாதங்க எல்லாப் புள்ளைகளும் போக்கொள்ள நம்மட புள்ளயும் போகத்தானே வேணும்... காசப்பத்தி நீங்க யோசிக்காதிங்க... நான் என்ர காக்கா அனிவாட்ட போப்றன்... நான் கேட்டா என்ர காக்கா இல்லண்டு செல்லமாட்டா... அண்டக்கி வீட்ட வந்த காக்கா சென்ன... தங்கச்சி நீ என்ன வேணுமெண்டாலும் எனக்கிட்டகேளு... நீ எண்ட ஒரே ஒரு தங்கச்சி, ஒனக்கு தராம வேற ஆருக்கு எண்டு... நான் காக்காட்டபோய் பின்னேரம் கேக்கப்போறன்... அவரு எனக்கி இல்லண்டு செல்லமாட்டாரு...'

என்று என் மனைவி என் தலைப்பாரம் இறங்கப் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் பேச்சு எனக்கு நம்பிக்கை கொடுத்தது. சொன்னது போலவே சென்றுவிட்டாள். ஹனிபா வீட்டுவாசல் திறந்தே கிடந்திருக்கிறது. எந்தச் சலனமுமில்லாத முகத்துடன் என் மனைவி கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்றிருக்கிறாள்.

'காக்கா... இரிக்கங்களா..!'

'ஓமோம்... வாங்க தங்கச்சி... எங்க மச்சான் வரல்லயா..?' ஹனிபா நல்ல கனிவுடன் தான் வரவேற்றிருக்கிறான். சத்தமில்லாமல் சமயலறைக்குள் வேலை செய்துகொண்டிருந்த ஹனிபாவின் மனைவி கொஞ்சம் சத்தம் போட்டுக் கூப்பிட்டாள்.
'ஞ்சப்பாருங்க... கொஞ்சம் வாங்க...'

மனைவியின் குரல் கேட்டால் மறுகணம் தாமதிக்கமாட்டார் ஹனிபா.
'என்னபுள்ள கூப்பிட்ட...'

'ஞ்சப்பாருங்க... என்னயாம் ஒங்குட அருமத்தங்கச்சி வந்நிருக்கிற... என்னத்தயாலும் கறக்கலாமெண்டு வந்நிருக்காவாக்கும்... என்னத்தயாலும் செல்லி ஆளனுப்புங்க... சரியா...'

மனைவியின் ஆணையை ஹனிபா எப்பொழுதும் தாண்டியதில்லை.
'சரி... சரி... நான் பாத்துக்கிறன்...'

ஹனிபா மீண்டும் வந்து அமர்ந்தார்.

'மறுகா... என்னடா தங்கச்சி மாலபட்டநேரம் வந்திருக்காய்... என்ன வெளக்கம்...'

முகத்தில் ஒரு விருப்பம் இல்லாமல் ஹனிபா கேட்கும் வார்த்தைகளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் மௌனமாக என் மனைவி யோசித்துக் கொண்டிருந்திருக்கிறாள். 'என்னடா தங்கச்சி யோசக்கிற...'

'இல்ல காக்கா... என்ட மகன் ஸ்கூலால ட்றிப் போகப் போறானாம்... நாலாயிரம் ரூவா கேக்கான்... எனக்கிட்டயும் கைல இல்ல... நீங்கதான் பாத்து கொஞ்சம் கடனா உதவி செய்யணும்...'

ஹனிபாவின் முகம் மாறுபட்டதிலிருந்து என் மனைவிக்கிக் கொஞ்சும் சந்தேகம். அதனால்தான் தயங்கித் தயங்கிக் கேட்டிருக்கிறாள்.
'ஐசே... கொஞ்சம் லேட்டாகிட்டயே தங்கச்சி... இப்பதான் இருந்த காசையெல்லாம் குடுத்து என்ட மூத்தவளுக்கு உடுப்பு எடுத்து வந்த... அவளுக்கு நாளக்கி 'பேத் டே'. இனி அவவும் ஒரு சங்கிலி வாங்கணுமாம் நேத்தேல்லாம் புறுபுறுக்காள்... இப்ப கைல அறவே காசில்ல...'

ஹனிபாவின் வார்த்தைகள் என் மனைவிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. என் மனைவியின் கொதிக்கும் மனசைப்போல ஒரு தேனீரைக் கொண்டுவந்து விருப்பமில்லாமல் வரண்ட புன்னகையோடு ஹனிபாவின் மனைவி வைத்துவிட்டுப்போவது என் மனைவிக்கிப் புரியாமலில்லை. தேனீரை எடுத்துப் பருகமனமின்றி அவமானம் தாங்க முடியாமல் ஏமாற்றத்தோடு வீடுவந்த என் மனைவி ஒரு மாதமாக அதைச் சொல்லிச் சொல்லி வெப்பிசாரப்பட்டிருக்கிறாள்.

என் நண்பன் ஒருவனிடம் என் நிலைமையைச் சொல்லி, அவன் மனைவியின் தங்கச் சங்கிலியைக் கொடுக்க அதை ஈடு வைத்து என் மகனுக்கு நாலாயிரம் கொடுத்தேன். என் மகன் சந்தோஷத்தால் இறக்கை கட்டிப் பறந்தான். அவனுக்கென்ன தெரியும் இளங்கன்று. ஆக்கின சோற்றுக்கு கறியில்லாமல் நாங்கள் படுகின்ற துன்பம் அவன் தெரிந்திருக்க நியாயமில்லை. சுற்றுலாச் செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துமுடித்தான். அவனிடத்தில் இருக்கின்ற ஓரிரு ஆடைகளைக் கழுவி அதனை அயன் பண்ணவேண்டும் என்று இவன் தன்னுடைய மாமா வீட்டுக்கு அதான் ஹனிபா வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அவனுக்கென்ன தெரியும் கள்ளங்கபடம் தெரியாதபிள்ளை.

'மாமா... இந்த உடுப்பக் கொஞ்சம் அயன் பண்ணட்டா மாமா...'

'உடுப்பு அயன் பண்றத்துக்கு இதன்ன வண்ணாண்ட ஊடா... நீங்க அயன் பண்ணாமப் போட மாட்டிங்களோ. போங்கபோங்க அதல்லாம் இஞ்ச பண்ணேலா...'

என் மகன் முகஞ்செத்து வந்து என்னிடம் சொல்லிச்சொல்லி அழுததை நினைத்தால் இப்பொழுதும் என் நெஞ்சு கொதிக்கிறது. இப்பொழுது என் மகன் ஒரு பட்டதாரி.

இந்த ஊரில் இவனை எத்தனையோ பேர் மாப்பிள்ளை கேட்கிறார்கள். ஊரிலுள்ள போடிமாரெல்லாம் என் மகனுக்காக போட்டிபோடுகின்ற காலம் வந்துவிட்டது. இப்போதுநான் இல்லாதவன் ஏழை என்று யார் பார்க்கிறார்! ஏனென்றால் என் மகன் சேற்றில் விளைந்த செந்தாமரையாகிவிட்டானே.

போதாக்குறைக்கு பகல் அவரும் வந்தார். யார்! அவன்தான் என் மச்சினன் ஹனிபா. அவன் வசதிக்காரன் என்று காட்டுவதற்கு தன்னுடைய காறில் மனைவியோடு வந்து இறங்கினான். மச்சான் மச்சினன் என்று புதிதாக உறவுமுறை பேசினான். அவன் சுற்றிவளைக்காமலே என் மகனை தன் மகளுக்கு மாப்பிள்ளை கேட்டான். மறுகணமே என் மனம் எரிமலையாய் வெடித்தது. கோபத்தை என் மனசு கொப்பளித்தது.

'டேய் அனிவா... நீயும் ஒரு மனிசனா... ஒனக்கா என்ட மகன் மாப்புள... நீ எல்லாத்தையும் மறக்கலாம் நான் ஒண்டையும் மற்கல்ல... ஒன்னப்போல மனிசத்தன்ம இல்லாத மனச்சாட்சியில்லாத பணத்தாச புடிச்ச மிருகத்துக்கு எண்ட மகனக் குடுக்கிறத அவனச் சும்மாதிரியச் செல்லுவன்...'
என்று கதைத்த கதைகள் அவனை முள்ளாகத் தைத்திருக்கவேண்டும். உடனே ஹனிபா எழுந்து சென்றுவிட்டான்.

இருந்தாலும் நான் அவனுக்குப் பகல் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. அவன்தான் அப்படியென்றால்... நாமும் அப்படியா... என்னால் தாங்கமுடியவில்லை... என்னால் தூங்கவும் முடியவில்லை. வீட்டுக்கு வந்த அவனை நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. திரும்பிப் பார்க்கிறேன். என் மனைவி என் பின்னே நின்று கொண்டிருக்கிறாள்.

'என்னங்க... தூங்கல்லயா... பகல் நடந்தத நெனச்சிக்கி மனசப்பொட்டு கொழப்பாம வந்து படுங்க'

'இல்ல ஆயிஷா... நான் அப்பிடி அனிவாக்கு கதச்சிருக்கப்படா... நீ காலத்தால அவண்ட ஊட்டபோய் மாப்புள ஒனக்குத்தான் என்டுசெல்லு...' என்று சொன்னதும் என் மனைவி சந்தோஷத்தால் பூத்துப்போனாள்.  கரியமேகங்கள் விலகியதால் முழு நிலா பிரகாசிக்க ஒளி மழையில் இரவுக் காடாய்க் கிடந்த உலகம் குளித்துச் சிரித்தது. இப்போது என் மனதைப் போல...

                                                          (ஜே.வஹாப்தீன்)

You May Also Like

  Comments - 0

  • suja Thursday, 28 March 2013 04:26 AM

    சோ பியூட்டிஃபுல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .