2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இயற்கை எழில்மிக்க ஹெரிடன்ஸ் கந்தலம

Super User   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



-றிப்தி அலி

கிராமவாசிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டதே இந்த இடமாகும் என இந்த நிறுவனத்தின் முகாமையாளரான பிரியன் விஜேரத்ன தெரிவித்தார். ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் இன்று இந்த நிறுவனத்தினால் பல நன்மைகளை அடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆம்....அந்த இடம் எது? ஏன் எதிர்ப்பு தெரிவித்தனர்? தற்போது ஏன் ஆதரிக்கின்றனர்? என்ற பல கேள்விகள் தற்போது உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் தானே. அவை அனைத்திற்குமான பதில் இந்த கட்டுரையில் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறான கேள்விகளுடனே மத்திய மாகாணத்தின் எல்லை பிரதேசங்களில் ஒன்றான தம்புள்ளை நகரத்திற்குட்பட்ட கந்தலம கிராத்திலுள்ள ஹெரிடன்ஸ் கந்தலம ஹோட்டலினுள் நுழைகின்றேன். இந்த கந்தலம கிராமம் மாத்தளை மாவட்டத்திலுள்ள வரலாற்று பிரசித்தி வாய்ந்த தம்புள்ளை மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.

இந்த கிராமத்தின் வனப்பகுதி மற்றும் வாவி ஆகியவற்றுக்கு மத்தியில் உள்ள மலையினை குடைந்து ஹெரிடன்ஸ் கந்தலம ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற கட்டிட வடிமைப்பாளரான ஜெப்ரி பாவாவின் வடிவமைப்பில்  1994ஆம் ஆண்டு இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டது.

இதன்போது கிராமவாசிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரினால் இந்த ஹோட்டல் நிர்மாணத்திற்கு பலத்த எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஹோட்டல், 2005ஆம் ஆண்டு மீள் புனரமைப்பு செய்யப்பட்டது. மொத்தமாக 287 ஏக்கர் காட்டுப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் காணியிலேயே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் சீகிரிய முனை மற்றும் தம்புள்ளை முனை என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் என்னவென்றால் சீகிரிய முனையிலிருந்த பார்த்தால் உலகில் பிரசித்தி பெற்ற சீகிரிய குன்றினை அவதானிக்க முடியும்.

அதேபோன்று தம்புள்ளை முனையிலிருந்து பார்த்தால் பிரசித்தி பெற்ற தம்புள்ளை ரன்கிரி விகாரையினை அவதானிக்க முடியும். இவ்வாறான சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஹோட்டலின் குறித்த இரண்டு முனைகளுக்கும் இடையிலான நீளம் ஒரு கிலோ மீற்றராகும்.

டீலக்ஸ், சூட், ரோயல் சூட், லக்ஷரி பனோரமிக் லக்ஷரி என எட்டு வகையான 152 அறைகளை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது. சீகிரிய முனையில் 75 அறைகளும் தம்புள்ள முனையில் 77 அறைகளும் உள்ளன. இந்த அறைகளில் தேனீர் தயாரிப்பான், கேபிள் அலைவரிசைகளுடனான தொலைக்காட்சி, வெளிநாட்டு தொலைபேசி வசதி, மினி பார், இலவச வைபை சேவை, 24 மணி நேர அறை சேவை, சலவை வசதி போன்ற பல வசதிகள் உள்ளன.

இந்த சேவைகளுக்கு மேலதிகமாக மூன்று உணவகங்கள் மற்றும் மூன்று நீச்சல் தடாகங்கள் ஆகியவற்றையும் இந்த ஹோட்டேல் கொண்டுள்ளது. இவற்றில் ஒரு நீச்சல் தடாகம் இயற்கையானதாகும். அதாவது மலைகளின் பாறைகளுக்கு மத்தியிலேயே இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையான இந்த நீச்சல் தடாகத்தினை வெளிநாட்டவர்களே அதிகம் விரும்புவதாக அங்கு பணியாற்றும் ஊழியரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்பா வசதி, சிறுவர் விளையாட்டு திடல், தினசரி பொழுதுபோக்கு, நூலகம், வைபை சேவை சந்தை தொகுதி, 24 மணி நேர வைத்திய சேவை, கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானம், நூலகம் மற்றும் கணணி வசதி ஆகியவற்றையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

நான்கு சிறிய கூட்ட அறைகள் மற்றும் பாரிய வரவேற்பு மண்டபத்தினையும் கொண்டுள்ளது. அலுவலகங்களிலிருந்து வருகை தருவோர் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காகவே இந்த நான்கு கூட்ட மண்டபங்கள் உள்ளன. இதற்கு மேலதிகமாக காஞ்சனா எனும் பெயரில் வரவேற்பு மண்டபமொன்றும் இந்த ஹோட்டலில் உள்ளது.

கடந்த வருடம் மீள் புனர்நிர்மாணம் செய்த இந்த வரவேற்பு மண்டபத்தில் திருமணம், பிறந்தநாள், விருது வழங்கல் நிகழ்வுகள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 180 பாகை அரை வட்ட வடிவிலேயே இந்த மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பு மண்டபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் திருமண வைபவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணத்திற்கு இந்த ஹோட்டல் பிரபல்யம் பெற்றுள்ளது. இதனால் அதிகமான புதுமண தம்பதிகளினை இந்த ஹோட்டலில் அவதானிக்க முடிந்தது. புதுமண தம்பதிகளுக்கான ஹோட்டல் என செல்லமாக அழைக்கப்படும் இந்த ஹோட்டிலுள்ள அனைத்து பெயர்களும் "ஹ" என்ற சிங்கள எழுத்திலேயே ஆரம்பிக்கின்றன.

இதன் அடிப்படையில் சீகிரியவை ஆட்சி செய்த காசியப்பனின் பெயரிலும் அறையொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுற்றுலா பிரயாணிகளை மகிழ்வூட்டுவதற்காக யானை சவாரி, குதிரை சவாரி, படகோட்டம்,  பறவை பார்வையிடல், பலூன் சவாரி, புராணகமா (புராதன கிராமம்) விஜயம்,  துவிச்சக்கர வண்டி பயணம், வண்ணத்து பூச்சி பார்வையிடல் போன்ற பல சேவைகள் இந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய ஹோட்டல்களில் இது போன்ற வசதிகள் காணப்பட்டாலும் ஹெரிடன்ஸ் கந்தலமவுடன் ஒப்பிட முடியாது. இந்த சேவைகளில் யானை சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக ஒரு யானை மற்றும் 10 குதிரைகளை இந்த ஹோட்டேல் சொந்தமாக கொண்டுள்ளது.

அத்துடன் ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள புராணகமா எனும் புராதன கிராமம் இந்த ஹோட்;டலினாலேயே பாராமரிக்கப்படுகின்றது. ஹோட்டலிலுள்ள யானையிலிருந்து வெளியாகும் கழிவு சாணத்தின் ஊடாக கடதாசி இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது இந்த ஹோட்டேலில் அனைத்து செயற்பாடுகளும் சூழல் நட்பான வகையிலேயே செயற்படுகின்றன. இதனாலேயே ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்படும் கடாதாசி மற்றும் யானையின் சாணம் ஆகியவற்றை கலந்து மீண்டும் கடதாசி தயாரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த கடதாசி தயாரிப்பு செயன்முறை ஹோட்டலிற்குள்ளேயே இடம்பெறுகின்றது. இங்கு தயாரிக்கப்படும் கடதாசியினை கொண்டு பல பொருட்கள் மீள் உற்பத்தி செய்யப்பட்டு ஹோட்டலிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன் ஹோட்டலினை சுற்றி வாவி காணப்பட்டாலும் ஹோட்டலிலிருந்து சிறு துளி நீர் வாவியுடனோ வாவியிலிருந்து சிறுதுளி நீரோ ஹோட்டலினுள் கலக்கக்கூடாது என்ற கொள்ளையினை இந்த ஹோட்டல் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் ஹோட்டலுக்கு தேவையான ஒரு துளி நீர் கூட வாவியிலிருந்து பெறப்படுவதில்லை. அத்துடன் இங்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறு துளி நீர்கூட வாயியுடன் இணைவதில்லை.

ஹோட்டலில் பயன்படுத்தப்படும் நீர் மீள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஹோட்டலுக்கு இறுதி நாட்களில் அதிக கேள்வி உள்ளது. அதாவது வார இறுதி நாட்களில் இந்த ஹோட்டலின் அனைத்து அறைகளும் முன்கூட்டியே பதிவுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் உள்நாட்டு சுற்றுல்லா பயணிகளே விஜயம் மேற்கொள்ளும் இந்த ஹோட்டலிற்கு மத்திய கிழக்கு நாட்டு சுற்றுல்லா பயணிகளும் விஜயம் மேற்கொள்வது வழமையாகும். இதனால் முஸ்லிம் சுற்றுல்லா பயணிகளின் வசதி கருதி ஹலால் வகையான உணவுகள் பரிமாற்றப்படுகின்றமை முக்கிய செயற்பாடாகும்.

இவ்வாறு பல முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ஹோட்டலின் ஊடாக பொதுமக்களுக்கு பல சமூகசேவை நிகழ்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தம்புள்ள பிரதேசத்திலுள்ள 17 விகாரைகள் மற்றும் மற்றும் 34 பாடசாலைகள் ஆகியவற்றின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்த ஹோட்டல் நிதியுதிவி வழங்கியுள்ளது.

இதற்கு மேலாக குறித்த ஹோட்டலில் தொழில் புரிபவர்களில் 60 சதவீதமானவர்கள் இந்த கிராமத்தவர்கள். கிராமத்திலுள்ள இளைஞர்களை தெரிவுசெய்து ஹோட்டல் தொடர்பிலான பல பயிற்சிகள் வழங்கிய பின்னர் தொழிலுக்காக ஹோட்டலில் உள்வாங்கப்படுகின்றனர்.

இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஹோட்டலிற்கு விஜயமொன்றை மேற்கொள்வதில்லையா? ஆம் ஹஜ் பெருநாள் மற்றும் தீபாவளி போன்ற விடுமுறைகள் வருகின்ற இந்த காலப் பகுதியில்  இந்த ஹோட்டலை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் பண்டிகை விடுமுறையினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

0094665555000 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் kandalama@heritancehotels.comஎன்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X