2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்

A.P.Mathan   / 2018 நவம்பர் 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் திடீரெனப் பிரதமரை மாற்றிய ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு, இந்தியாவுக்கான பயண ஆயத்தத்தில் இருந்தோம். இலங்கையிலுள்ள இந்திய  உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், இலங்கையிலிருந்து ஊடகத்துறைசார்ந்த 20 பேருக்கான சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணம், மும்பாயை நோக்கியதாக இருந்தது. ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலையில் மும்பாய்ப் பயணம் தொடங்கியது.

இந்தப் பயணம் ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும், நெருக்கடியான சூழ்நிலையில் பயணிக்கின்றோமே என்ற ஆதங்கம், எல்லோர் மனதிலும் இருந்தது. பயணித்த அனைவரும் ஊடகவியலாளர்கள் என்பதால், முன்னைய இரவில் இடம்பெற்ற அதிர்ச்சி மாற்றம் பற்றிய வாதப் பிரதிவாதங்களே தொடர்ந்தன.

இரண்டேகால் மணிநேரப் பயணம் முழுவதும், அரசியல் குழப்பம் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களாகவே இருந்தன. அதிகாலைப் பயணம் என்பதால், நான் உட்பட அநேகமானோர் முன்னைய இரவு தூங்கவில்லை. நெருக்கடியான காலத்தில் ஊடகவியலாளர்களின் மனம் எப்படி இருக்கும் என்பதை, எம்மோடு பயணித்த அனைத்து ஊடகவியலாளர்களின் உரையாடலிலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒக்டோபர் 27ஆம் திகதி காலை 8.15 மணிக்கு, மும்பாயிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமானநிலையத்தைச் சென்றடைந்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும், மும்பாய் சர்வதேச விமானநிலையத்தின் உதவிப் பிரதித் தலைவர் சவ்ரப் சிங்கும் வரவேற்றனர். இந்தியப் பாரம்பரியப்படி மாலை அணிவித்து, திலகமிட்டு வரவேற்றனர்.

உலகின் முன்னணி விமானநிலையங்களில் ஒன்றாகத் திகழும் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமான நிலையத்தின் பிரமாண்டத்தை நேரில் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை, சவ்ரப் சிங் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தியாவிலுள்ள 125 விமானநிலையங்களில் 5 மட்டுமே அரச- தனியார் கூட்டிணைவுடன் இயங்குகின்றன. ஆனால், இந்த 5 விமானநிலையங்களும் இந்தியாவின் 55 சதவீதமான வான் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைப் பேணுகின்றன. அந்தவகையில், இந்தியாவின் அதிக பயணிகள், சரக்குகள் போக்குவரத்தைக் கையாளும் விமானநிலையமாக, டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்துக்கு அடுத்ததாக மும்பாய் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமானநிலையம் விளங்குகிறது.

ஜிவிகே நிறுவனத்தின் முதலீட்டில், கம்பீரத் தோற்றத்துடன் இருக்கும் மும்பாய் விமானநிலையத்துக்குச் சொந்தமான 810 ஹெக்டெயர் அரச காணி இருக்கின்றபோதிலும், 566 ஹெக்டெயர் நிலப்பரப்பை மாத்திரமே பயன்படுத்தி வருகின்றனர். 2006ஆம் ஆண்டுமுதல் ஜிவிகே தனியார் நிறுவனத்தின் நடத்துதலின்கீழ் மும்பாய் விமானநிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. சாதாரண விமானநிலையமாக இருந்த இந்த விமானநிலையத்தை, சர்வதேசத் தரத்துக்கு உயர்த்திய பெருமை ஜிவிகே தனியார் நிறுவனத்தையே சாரும்.

ஒற்றை ஓடுபாதையுடைய உலகின் முன்னணி விமானநிலையமாக சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமானநிலையம் திகழ்கிறது. ஒரு மணித்தியாலத்தில் சராசரியாக 40 விமானங்கள் வந்துபோகின்றன.

இவ்விமானநிலையத்தின் சாதனையாக 24 மணித்தியாலத்தில் 1003 விமானங்கள் (சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் 52 விமானங்கள்) இயக்கப்பட்டிருக்கின்றன. 2006ஆம் ஆண்டு, ஜிவிகே நிறுவனம் பாரமெடுக்கும்போது, உலகின் 82ஆவது இடத்திலிருந்த மும்பாய் விமானநிலையம், தற்போது முன்னிலையை அடைந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.44 சதவீதத்தையும் மாநிலத்தின் மொத்த வருமானத்தில் 3.35 சதவீதத்தையும் இவ்விமானநிலையம் வழங்கிவருகிறது. அதுமாத்திரமன்றி 49 ஆயிரம் மக்களுக்கான நேரடித் தொழில்வாய்ப்பையும் 958,000 மக்களுக்கான மறைமுக வருமானத்தையும் இந்த விமானநிலையம் வழங்கிவருகிறது. குறித்த விமானநிலையத்தில் 52 மில்லியன் பயணிகள், ஒருவருடத்தில் பயணிக்கின்றனர். வான்போக்குவரத்து இயங்குநிலை வருடத்துக்கு சராசரியாக 320 மில்லியனாகக் காணப்படுகிறது.

இலங்கையின் மத்தல விமானநிலையத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இருக்கும் இத்தருணத்தில், தனியார் மயமாக்கல் தொடர்பான பேச்சுகள் எழுந்தபோதே, பல்வேறுபட்ட எதிர்ப்புகள் வெளிப்பட்டன. அதுமாத்திரமன்றி, பலாலி விமானநிலையத்தின் செயற்பாடுகளை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தருணத்தில், தனியாரின் கீழியங்கும் மும்பாய் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமானநிலையத்தின் செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றன என்பதை அறிவதில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

PPP என்று ஆங்கிலத்தில் கூறப்படுகின்ற அரச - தனியார் கூட்டிணைவு முறையில் இந்த விமானநிலையம் இயங்குகிறது. 22 சதவீதமான பங்குகளை இந்திய அரசாங்கம் வைத்திருக்கின்றபோதிலும் 78 சதவீதமான பங்குகள் தனியாரிடமே இருக்கின்றன.

அதில், ஜிவிகே தனியார் நிறுவனத்துக்கு 55 சதவீதமான பங்குகள் சொந்தமாக இருப்பதால், அவர்கள்தான் மும்பாய் விமானநிலையத்தின் இயக்குநர்களாகச் செயற்படுகின்றனர். இந்தியாவின் தேசியப் பறவையான மயிலை மய்யமாக்கிய வடிவமைப்பைக்கொண்டதே மும்பாய் விமானநிலையம். இரவில் ஒளிதரும் வர்ணங்களில் விளக்குகள் ஒளிர்ந்தாலும் பகலில் இயற்கை சூரிய ஒளி, தாராளமாக உட்புகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமன்றி, கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளுக்கூடாக மயில் வர்ணங்கள் நிலத்தில் படியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

‘ஆடம்பரம்’ என்ற சொல்லை, நிஜத்தில் அனுபவிக்கக்கூடிய விமானநிலையத்தில் செயற்பாடுகளின் துரிதம், கடுகதியானது. ஒற்றை ஓடுபாதையை வைத்துக்கொண்டு, உலகின் முன்னணி விமானநிலையமாகத் திகழ்வதென்பது சாதாரண விடயமல்ல. அதற்கான உழைப்பு அளப்பரியது. பசுமை, வாயுத்தூய்மை, கழிவு முகாமைத்துவம் என அனைத்தையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்கள்.

விமானநிலையத்தைச் சுற்றி, சேரிகள் இருக்கின்றன. ஹிந்திப் படங்களில் காண்கின்ற அல்லது காலா திரைப்படத்தில் பார்த்த சேரிக் குடில்கள்தான் சுற்றிலும் இருக்கின்றன. ஆனாலும், அவர்களுக்கும் இந்த விமானநிலையத்தினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் வருமானம் கிடைக்கிறதென்பது திருப்தியானது. ஆனாலும், மிகையொலிகளால் அந்த மக்கள் பாதிப்படைவார்களே என்ற சந்தேகம் நமக்கிருந்தது. அதற்கான விளக்கத்தையும் மும்பாய் சர்வதேச விமானநிலையத்தின் உதவிப் பிரதித் தலைவர் சவ்ரப் சிங் வழங்கினார்.

“நகரக் குடியிருப்பின் மத்தியில் இருக்கும் இந்த விமானநிலையத்தை இயக்குவதென்பது இலகுவானதல்ல. விமானநிலையத்தைச் சுற்றியுள்ளவர்களின் சுகாதாரம் எமக்கு முக்கியமானது. அதில் எந்தக் குறையும் வரக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒலிதாங்கிகள் பல பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஆகையால், மிகையொலித் தாக்கமென்பது மிகக்குறைவு. அதுமாத்திரமன்றி, கழிவு முகாமைத்துவம் இங்கு இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விமானநிலையத்துக்குள் இருக்கின்ற கழிவறைகளில் காற்றழுத்தமூடான சுத்திகரிப்பு முறையே கையாளப்படுகிறது. ஆகையால், கழிவுநீர் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதையும்தாண்டிய கழிவுநீர்களைச் சுத்திகரித்து மீள்சுழற்சிக்குட்படுத்துகிறோம்” என்றார்.

இந்தியா போன்ற மிகப்பெரிய வல்லரசு நாட்டில், தனியார் நிறுவனமொன்றினால் சுதந்திரமாகச் சர்வதேச விமானநிலையமொன்றை இயக்கமுடிகிறதென்றால், இலங்கையில் ஏன் முடியாதென்ற கேள்வி சுயமாகவே எழுவது நியாயமானது. ஆனால், இலங்கையில் வேறுவிதமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதால், தனியார் மயப்படுத்தல் என்ற சொல்லைக் கண்டவுடனேயே வெறுப்பு ஏற்படுகிறது. மத்தலவை இந்தியாவுக்குப் பாரங்கொடுத்தால், இலங்கையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் மும்பாய் சர்வதேச விமானநிலையத்தின் உதவிப் பிரதித் தலைவர் சவ்ரப் சிங்கிடம் கேட்டோம்.

“மும்பாய் விமானநிலையத்தின் 78 சதவீதமான பங்குகளைத் தனியார் நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. அவற்றில், எங்களின் ஜிவிகே நிறுவனத்துக்கே அதிக பங்குகள் இருக்கின்றன. எமது நோக்கம் தரமான விமானநிலையத்தை நடத்திச்செல்வதே. அதற்கான வடிவமைப்புகள், சர்வதேச - உள்ளூர் பயணிகளுக்கான வசதிகள், அதிநவீன தொழில்நுட்பத்துடனான வான்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் என அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துவருகிறோம். 

“இதில், தனியார் நிறுவனங்களின் தலையீடு என்பது தரத்தைப் பேணுவது, பராமரிப்பு என்பன மாத்திரமே. குறிப்பாகச் சொல்லப்போனால், நாங்கள் வெறும் விளம்பரதாரர்கள்தான். எம்மை விளம்பரப்படுத்தி வருவாயை அதிகரித்துக்கொள்கிறோம். அதைத்தவிர வேறு விடயங்களில் எமக்குத் தலையிடமுடியாது. விமானநிலையக் கட்டமைப்பின் பிரதான நான்கு விடயங்களில் எங்களால் தலையிட முடியாது. அதுதான் மிக முக்கியமானது. அவையாவன- சுங்கத் திணைக்களம், குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம், விமானநிலையப் பாதுகாப்பு, வான்போக்குவரத்துக் கட்டுப்பாடு. இந்தப் பிரதான நான்கு விடயங்களையும் இந்திய அரசாங்கமே கையாளும். இதில் எந்தவிதத் தலையீட்டையும் நாங்கள் செய்யமுடியாது. ஒரு விமானநிலையத்தின் உயிர்நாதமே இந்த நான்கு விடயங்களும்தான். இவற்றை இந்திய அரசாங்கம் தரமாகப் பார்த்துக்கொள்வதால், தனியாருக்கான தலையிடி குறைந்துவிடுகிறது” என்ற தெளிவான விளக்கத்தைத் தந்தார்.

மத்தல அல்லது பலாலி விமானநிலையங்களைத் தனியார் நிறுவனங்களின் பராமரிப்புக்கு வழங்கினாலும், இதே நடைமுறையை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும். ஆகையால், தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதப் பாதகமும் இடம்பெற்றுவிடாது. இலங்கையின் வகிபாகம் என்பது, எதிர்காலத்தில் விமானப் போக்குவரத்துக்கான மத்தியநிலையமாகத் திகழும் என்ற எதிர்வு கூரலையும் சவ்ரப் சிங் வெளிப்படுத்தினார். இலங்கையிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ், நைரோபி, தன்சானியா, ஷாம்பியா, கௌதங், மொறீசியஸ், சீனா, ஹொங் கொங், ஜப்பான் போன்ற பிரதான விமானநிலையங்களுக்கும் அவுஸ்திரேலியாவின் பிரதான விமானநிலையங்களுக்கும் இலங்கையிலிருந்து விமானங்களை இயக்குவது, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் எனவும் சவ்ரப் தெரிவித்தார். தரமான விமானநிலையம், உட்கட்டுமான வசதிகள், துரித சேவையுடன் முறையான விளம்பரப்படுத்தல் இருந்தால், இலங்கையின் கேந்திரத்துவத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் ஜிவிகே நிறுவனத்தினர் வலியுறுத்தினர். 

ஆகையால், தனியார் மயப்படுத்தல் என்ற பயத்தைப் போக்கி, அதிலுள்ள நன்மைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் பராமரிப்பை மாத்திரமே மேற்கொள்கின்றன. தேசிய பாதுகாப்பு என்பதை இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். குறிப்பாக வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை முழுமையான கண்காணிப்பில் நமது வான்படை வைத்திருக்க முடியும் என்பதைக் கவனத்திற்கொள்க.

பாரிய முதலீடுகளைச் செய்யக்கூடிய ஜிவிகே போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் மாத்திரமே, முறையான முதலீடுகளூடாக நாட்டின் பெருமையை உலகறியச் செய்யமுடியும் என்ற உண்மையையும் நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X