2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திச் சட்டமூலம் முக்கூட்டு எதிர்ப்பினால் 3 சபைகளில் தோல்வி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், முக்கூட்டு எதிர்ப்பினால், மூன்று மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாடாளுமன்றத்தில் வைத்தும் இந்த சட்டமூலத்தைத் தோற்கடிக்கச் செய்வோம்” என்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. 

 

“ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆகியன இணைந்தே, இந்தச் சட்டமூலத்தை, மூன்று மாகாண சபைகளில் தோற்கடித்துள்ளன. அந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது மட்டுமல்லாது. அச்சட்டமூலத்துக்கு எதிராக, நீதிமன்றத்துக்குச் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.  

“இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின், ஜனாதிபதியிடம் இல்லாத ‘சுப்பிரி’ அதிகாரங்களை விடவும், பிரதமருக்கு ‘சுப்பிரி’ அதிகாரங்கள் கிடைக்கும். ஆகையால், இந்தச் சட்டமூலம் தொடர்பில், ஜனாதிபதி தன்னுடைய ‘சுப்பிரி’ அதிகாரத்தை காண்பிக்கவேண்டும்” என்று, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். 

“அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘சுப்பிரி’ அதிகாரங்களைப் பெற்று, ‘சுப்பிரி’ வேலைகள் சிலவற்றைச் செய்வதற்கு முயல்கின்றார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

உத்தேச அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் ஊடாக ‘சுப்பிரி’ அமைச்சரொருவர் நியமிக்கப்படுவர். எனினும், அவ்வாறான அமைச்சரொருவர் தேவையில்லை. எனினும், தற்போது உள்ளபடியே சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமாயின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும் என்று கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்திருந்தார். இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றமுடியாது என்றும் சுட்டிக்காட்டினார். 

‘சுப்பிரி’ அதிகாரங்களை கொண்ட அமைச்சரொருவர் நாட்டுக்குத் தேவையில்லை என்பதனால் இந்தச் சட்டமூலத்து தாம் எதிர்ப்பு என்று, ஜே.வி.பி தெரிவித்துள்ளது. உத்தேச அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜே.வி.பியின் எம்.பியான சுனில் ஹந்துதெந்தி தெரிவித்தார்.  

இதேவேளை, உத்தேச அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது ஊவா, வடக்கு, வடமத்திய ஆகிய மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதியன்று மேல் மாகாண சபையில், இந்தச் சட்டமூலம், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .