2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'இரத்தத்துக்குள் இனவாதத்தை பாய்ச்சுகின்றனர்'

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர்களின் இரத்தத்துக்குள் இனவாதத்தைப் பாய்ச்சி, இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இனவாதிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளித்துவிட வேண்டாம் என, கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ராம் கோரியுள்ளார்.   

இனவாதிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோதோ அல்லது இனவாதத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களை வெளிப்படுத்துகின்றபோதோ, பக்கச்சார்பின்றி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்கத்தை மையப்படுத்திய நல்லாட்சியில் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளமை தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இந்த நாட்டில் கடந்த ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத சக்திகள் தலைதூக்கியிருந்தன. அதன் காரணத்தாலேயே அந்த ஆட்சியைச் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம்கள் ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றினார்கள்.  

அவ்வாறான நிலையில், தற்போது மீண்டும் இனவாத சக்திகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, மட்டக்களப்பில் விகாரதிபதி மிக மோசமாகத் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துகொண்டிருக்கின்றார். அவர் மீது இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.  

அதேநேரம், பொதுபலசேனா அமைப்பும் மீண்டும் தலைதூக்கி இனவாதத்தன்மையிலான கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. மறுபக்கத்தில் முஸ்லிம் சமுகத்ததையும் பிரித்துப்பார்க்கும் வகையிலான கருத்துக்களும் வேகமாகப் பரப்பபட்டு வருகின்றன.   

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்துமே, யுத்தம் நிறைவடைந்த சூழலில் இனங்களுக்கிடையில் மீண்டும் மோதல்களை உருவாக்குகின்றமையைப் போன்றே காணப்படுகின்றது. திரைமறைவில் எதோவொரு சக்தி இருந்துகொண்டு இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தூண்டுதல் அளிக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.   

இந்த நாடு நல்லாட்சியை நோக்கியப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அப்பயணத்தை சிதைப்பதற்கு பல சக்திகள் முனைகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆகவே, நாட்டின் எதிர்கால சந்ததியாகிய இளைஞர்கள் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளுக்கு துணைபோகாது இன, மத, பேதமின்றி ஒன்றிணைய வேண்டுமெனக் கோருகின்றேன் என்றுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .