2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘ஏறிய ஏணியை தட்டிவிட வேண்டாம்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கட்சியின் சின்னமான ஏணியில் ஏறி, யானையில் அமர்ந்துள்ளீர்கள். இன்று, ஏறி வந்த ஏணியைத் தட்டி விழுத்துகின்றீர்கள் என்பதே மிகக் கவலையான விடயம். அந்த ஏணியாக, வடக்கு - கிழக்கு மக்களும் இருந்தார்கள். மலையக மக்களையும் தயவு செய்து புறக்கணிக்க வேண்டாம்” என, தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனிடம், வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், கோரிக்கை விடுத்துள்ளார்.  

யாழ். ஊடக அமையத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (28) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சாடினார். 

அங்கு அவர், தொடர்ந்து கூறியதாவது,   “ஓரிரு தினங்களுக்கு முன்னர் காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை பயங்கரவாத இயக்கம் என்றும், மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றியுள்ளார். 

வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளினால் தான், அவர் முன்னர், மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 2002ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன், அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்துப் பேசிய போது, திருப்தியான பல கருத்துக்களை முன்வைத்து, அறிக்கை ஒன்றினை மனோ கணேசன் வெளியிட்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல விடயங்களை செய்வோம் எனக் கூறினார். அன்று, பயங்கரவாதிகள் எனத் தெரியாத அவருக்கு, இன்று பயங்கரவாதிகள் எனத் தெரிகின்றதா?  

எமது தேசிய போராட்டத்தினையும், தேசிய இயக்கத்தினையும் கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த சக்தி வந்தாலும் தலை வணங்கப்போவதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நினைவுகூர்ந்து, நிலைமையினை புரிய வைத்துள்ளார்கள். அவற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .