2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'கூடவில்லை மின்கட்டணம்'

Kogilavani   / 2016 மே 19 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

மின் கட்டணப்பட்டியலால், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேராவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பி.யான வாசுதேவ நாணாயக்காரவுக்கும் இடையில் கணக்கு - வழக்குத் தொடர்பில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், மின்கட்டணம் கூடவேயில்லை என்று பிரதியமைச்சர் பதிலளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மொழி மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது வாசுதேவ நாணயக்கார எம்.பி, 2015 ஜனவரி மாதம் முதல் மின் கட்டணம் எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி அதிகரிக்கப்பட்டுள்ளதா? அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதா உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

அந்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா, 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. அப்படியாயின், நுகர்வோர் ஒருவரின் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாத மின்கட்டணம் ரூ.892.40 இருக்கும் போது, பெப்ரவரி மாதக்கட்டணம் ரூ.1308.55 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவனையாளரின் மின் கட்டணம் ஒரு மாதத்துக்குள் ரூ.416.15 உயர்வடைந்தது எவ்வாறு என்று வினவினார்.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர், 'உறுப்பினர், அவர்களே, மின் கட்டணப் பட்டியலை சாதாரணமாக பார்க்கும் போது அதிகரித்து இருப்பதாகவே தெரியும். ஆனால், சூத்திரத்தை போட்டுப் பார்த்தால் அது புரியும்.  அதற்கு கணிதம் தெரிந்து இருக்கவேண்டும். உங்களுக்கு „கணிதம் தெரியும் தானே... கோவையை தாருங்கள் கணக்குப் போட்டுப் பாருங்கள்' என்றார்.

இடைமறித்த வாசுதேவ நாணயக்கார, 'பார்க்கும் போதே பட்டியலில் கட்டணம் அதிகரித்துள்ளமை புரிகிறது. இதில், சூத்திரத்தை பார்க்க வேண்டிய தேவை இல்லை' என்றார். இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதேவேளை, இறுதியாக பதிலளித்த பிரதியமைச்சர் மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை, மின்கட்டணத்துக்கு வற், தேசத்தை கட்டியெழுப்பும் வரியும் சேர்க்கப்படவில்லை ஆகையால் கட்டணம் அதிகரித்துள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X