2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'சிங்களவர்களுடன் இணைந்து செயற்படுவோம்'

Kogilavani   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நம் கொள்கையுடன் ஒத்துப்போகின்ற அனைத்துச் சிங்களவர்களுடனும் நாம் ஒத்துழைத்துச் செயற்படுவோம். வட மாகாண ஆளுநராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள ரெஜினோல்ட் குரே பற்றி, தற்போதைக்கு எதுவும் கூறுவதற்கில்லை. முன்னர் இருந்த ஆளுநர் ஒருவரால், வடக்கு மக்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன. அவருக்குப் பின்னர் வந்த ஆளுநர்களின் காலத்தில், அந்நிலைமை சற்று மாற்றம் கண்டது. இதனால், இனிவரும் ஆளுநரால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மட்டுமே உள்ளது' என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

'புதிய ஆளுநராக வரவிருப்பவர், மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வை உரிய அளவில் வழங்க வேண்டும் என்ற கருத்தை, முன்வைத்து வந்தவராவார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இவ்வாறான எண்ணக்கருக்களைக் கொண்ட ஒருவர், தமிழ் மக்களின் பிரதேசத்துக்கு ஆளுநராக வருவது வரவேற்கத்தக்கது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு 'நமக்கு மத்தியில் இருக்கும் சிங்களவர்களில், அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறை காட்டுபவர். தமிழர்களும் ஆட்சி, அதிகாரங்கள், உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையில் தெளிவாக உள்ளவர்.  இதனை, அவரின் பல உரைகளில் இருந்து அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள், போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் எனப் பலர் கருத்துக் கூறத் தயங்கிய பல விடயங்களை, வெளிப்படையாகக் கூறியவர். அந்த வகையில், எங்கள் கொள்கையுடன் ஒத்துள்ளவர்களுடன் இணைந்து செயற்படுதல் வேண்டும். அவருடன் இணைந்து செயற்படுதல், எமக்கு அவசியமானதாகும்.

ஆட்சி அதிகாரங்களைக் கையாளத் தெரியாதவர்கள் என்ற குற்றச்சாட்டு, தற்போது எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு, தென்னிலங்கையாலும் வெளிநாட்டவர்களாலும் முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு, உள்ளூராட்சி சபைகளில் பெரும்பாலான இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்த நிலையில், அது சரியாகச் செயற்படவில்லை எனவும், ஊழல் நிறைந்தும் காணப்பட்டதாகக் கூறப்பட்ட நேரத்தில், மாகாண சபை, நமது கைக்குக் கிடைத்தது.

பின்னர் உள்ளூராட்சி, மாகாண சபை அதிகாரங்களுக்குக் கீழ் வந்தது. இடம்பெற்ற தவறுகளைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அதன்படி, தனக்குக் கீழ் உள்ள அமைச்சு என்ற வகையில், பல நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டார்.
மத்திய அரசின் ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது, எமது போராட்டமாக இருந்து வருகின்றது. அந்த வகையில், ஓரளவு அதிகாரங்கள் எம்மிடம் வருகின்ற போது, அதனை எவ்வாறு கையாள்கிறோம் என்பது, பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது.

அதிகாரம் கிடைத்தால், அதனை பாவிக்கத் தெரியாமல் உள்ளீர்கள் என்ற பாரிய குற்றச்சாட்டு, எம்மில் எழுந்துள்ளது. கிடைக்கும் அதிகாரங்களை நாம் சரியாகக் கையாளவேண்டும். தற்போது நல்லாட்சி வந்துள்ளதாகக் கூறுகின்றனர். நல்லாட்சியை, தான்தோன்றித்தனமாகச் செய்யமுடியாது. நல்லாட்சியினை, மக்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையில் உபயோகிக்க வேண்டும்.

ஆகவே, நாம் சிலதை, உட்கட்சிப்பூசல் என்று கூறி மூடி மறைக்கமுடியாது. கட்சிச் செயற்பாடானது, அதன் முழுப்பொறுப்பு கூறலும், மக்களுக்காகவே இருக்க வேண்டும். கட்சிக்கானதாக இருக்கக் கூடாது.

அவ்வாறு குற்றச்சாட்டுகள் எழுகின்ற போது, அவை சரியாக அணுகப்பட வேண்டும். சரியான விசாரணை இடம்பெறவேண்டும். அது சரியாக இடம்பெறுகிறது என்ற நம்பிக்கை, மக்கள் மத்தியில் ஏற்படவேண்டும். வெறுமனே மூடிமறைக்க முற்பட்டால், அது நல்லாட்சி அல்ல. ஆகவே, நாம், ஆட்சி அதிகாரங்களை கையாள தெரியாதவர்கள் என்றக் குற்றச்சாட்டுக்கு மீண்டும் ஆளாகி விடுவோம். ஆகவே, மாகாணசபை உறுப்பினர்கள் சில விடயங்களை, உட்கட்சி சார்ந்து விவாதித்து தீர்வு கிட்டவில்லையெனில் மக்களுக்காக வெளிப்படையான விசாரணைகளை செய்யவேண்டும்' என்று சுமந்திரன் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X