2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'சண்டியர்களை போல சத்தம் போட முடியாது'

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

55 மில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்புத்தொகை தொடர்பிலான பிரேரணை, நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'சபையில் சத்தம் போட்டு, சண்டியர்களைப் போல செயற்பட முடியாது' என்று கடுந்தொனியில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்;று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை தினப்பணிகளுக்கு நகர்த்தப்பட்டது.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, 'இந்த யோசனை தவறானது, பிற்பகல் 6.30க்கு வாக்கெடுப்பு நடத்த உத்தேசித்திருந்ததாகவும் அவ்வாக்கெடுப்பு, உரிய நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்டதாலும், அதன்போது எழுந்த சிக்கலான நிலைமையைக் கவனத்தில் கொண்டும், இப்பிரேரணை தொடர்பில் மீண்டுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு குறிப்பிட்டுள்ளமை தவறானது. சிக்கலான நிலைமையல்ல, வாக்கெடுப்பு பெறுபேறு தவறாக அறிவிக்கப்பட்டதுதான். உண்மையில், பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன என்று, அவைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினரால் அன்று அறிவிக்கப்பட்டது. உண்மையில் வாக்கெடுப்பின் போது இருதரப்புக்கும் 31 வாக்குகளே கிடைத்தன.

எங்களுடைய வாதம் தொடர்பிலான செய்தியும் அவ்வாறே சென்றிருக்கின்றன. ஆகவே, சிக்கலான நிலைமை என்பது தவறானதாகும்' என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, இது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். அந்தக் கூட்டத்துக்கு உங்களின் கட்சியின் சார்பில், விஜித ஹேரத் எம்.பி சமூகமளித்திருந்தார் என்று சுட்டிக்காட்டினார்.

அதன்போது எதிரணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் எழுந்து நின்று ஒழுங்குப் பிரச்சினையை எழுப்புவதற்காக ஒலிவாங்கிக்கான அனுமதியைக் கோரி நின்றனர். ஆளும் தரப்பு பக்கத்தில் ஒரு சில உறுப்பினர் சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால், சபையில் இரைச்சல் நிலைமை ஏற்பட்டிருந்தது.

ஒழுங்குப் பிரச்சினைக்கான ஒலிவாங்கிக்காக எழுந்திருந்த விமல் வீரவன்ச, ஒரு கணம் 'பொயின்ட் ஓப் ஓடர்' என்று உரத்த தொனியில் அனுமதியைக் கோரிநின்றார்.

இதன்போது ஆளும்தரப்பில் இருந்தவர்களும் ஹேய்... ஊய்... ஆஹய்... என்று சத்தமிட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எழுந்து ஏதோவொன்றைக் கூற விளைந்தார்.

அப்போதும் ஆளும்தரப்பிலிருந்து சத்தம் வந்ததால், சற்று கோபமடைந்த பிரதமர் 'வாயை மூடிக்கொண்டு அமருங்கள்' என்று உரக்கக் கூறினார். அதன்பின்னரே அவை அமைதியடைந்தது. அதன்போது கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'பிரச்சினைகள் தொடர்பில் கேள்கிளைக் கேட்பதற்கும் பேசுவதற்கும் தார்மிகம் இருக்கின்றது. ஆனால், சண்டியர்களைப் போல சத்தம் போட முடியாது. அவர்கள் ஒழுக்கத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

இதற்கிடையில் அந்த யோசனைக்குச் சபையில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் நிதி அமைச்சின் கீழான கட்டளைகள், தீர்மானங்கள் மற்றும் தத்துவங்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.

இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்த விமல் வீரவன்ச எம்.பி அவையிலிருந்து எழுந்து வெளியே சென்றபோது, ஆளும் தரப்பினர் கோஷம் எழுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X