2025 மே 21, புதன்கிழமை

2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி

Kogilavani   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளது. நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர். இதன்படி, இந்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றுப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்டவேண்டும் என்று கோரினார். இதனடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர். அதற்கமைய சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றுப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மையினர்த்தவர்கள் சகலரும் ஆதரவளித்தனர்.

இத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிரணியில் அங்கம் வகிக்கும்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுக் காலை உறுதியளித்திருந்த போதிலும், மாலை நடைபெற்ற வாக்கெடுப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) எதிர்த்து வாக்களித்தனர். எனினும், எதிரணியில்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அங்கம் வகிக்கும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன இத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 13 எம்.பிக்கள் சமூகமளிக்கவில்லை.

த.தே.கூவில் இருவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் ஆகிய இருவரும் சமூகமளிக்கவில்லை.

ஐ.தே.முவில் மூன்று

ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கான ரத்ன தேரர், புத்திக பத்திரன, காணியமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகிய மூவரும் சமூகமளிக்கவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, கீதா குமாரசிங்க, கனக ஹேரத், பிரேமலால் ஜயசேகர, மனுஷ நாணயக்கார, லொஹான் ரத்வத்த, சிறிபால கம்லத் மற்றும் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மற்றும் வரவு- செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறும். இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .