2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

'பான் கீ மூன் வருகையின் பிரதிபலன் மார்ச்சில் தெரியவரும்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் சார்ந்த செயற்பாடுகளுக்கு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தற்போது பாராட்டு தெரிவித்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் இலங்கை மீதான நன்மதிப்பும் உயர்வடைந்துள்ளது. அதன் பிரதிபலன் அடுத்த வருடம், மார்ச் மாதம் வெளிவரவுள்ள ஜெனீவா அறிக்கையில் தெரியவரும் என திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும், சர்வதேசம் உள்ளிட்ட தரப்பினரின் அழுத்தங்களுக்கு தாம் எக்காரணம் கொண்டும் தலை சாய்க்கப் போவதுமில்லை, எவர் தலையையும் தடவி உதவி பெற வேண்டிய நிலைக்கு போவதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயமானது இலங்கைக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்தபோது இருந்த நிலைமை ஆட்சி மாற்றத்தின் பின்னர் முற்றாக மாற்றமடைந்துள்ளதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர்; நல்லிணக்கம் சார்ந்த செயற்பாடுகளை முழுமைப்படுத்த அரசாங்கத்துக்கு இன்னும் காலம் தேவை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு பான் கீ மூன் இணக்கம் தெரிவித்துள்ளார். இது எமக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்' என்றார்.

'கடந்த ஆட்சி காலத்தில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர்களை அமைச்சர்கள் சிலர் இழிவுபடுத்தியமை, ஐ.நா அலுவலகத்துக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்தமை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமை உள்ளிட்ட சில செயற்பாடுகளால், சர்வதேசம் எம்மை ஓரம்கட்டின.

இந்நிலைமை தற்போது இல்லை. நாம் எக்காரணம் கொண்டும் சர்வதேச அழுத்தங்களுக்கு தலை சாய்;க்கப்போவதில்லை. மாறாக எம்மால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கம் சார்ந்த செயற்பாடுகளுக்கு சர்வதேசமே இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனையே ஐ.நா. செயலாளரின் வருகையும் சுட்டிக்காட்டுகின்றது. மாறாக தலையை தடவி உதவி கேட்பதற்காகவே பான் கீ மூன் வரவழைக்கப்பட்டதாக சிலர் கூறுவது வேடிக்கைக்குரியதாகும்' எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X