2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'முன்னாள் சட்டத்தரணி' என்பதை தவிர்க்கவும்

Gavitha   / 2016 மே 03 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'ஊடகங்களில், நபரொருவரின் பெயரைக் குறிப்பிடும் போது, பெயருக்கு 'முன்னாள்; சட்டத்தரணி' என்ற பதத்தை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பாவித்தால் நீதித்துறையைப் பற்றி அறியாதவர்கள் கூட நீதியைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள்' என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை நாடாளுமன்றத்தில் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாவிடினும், கட்சி சார்பாக தினேஜ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் உரையாற்ற, சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற சொற்பதத்தை ஊடகங்களில் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பை, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே விடுத்துள்ளார்.

அப்படியென்றால் அரசாங்கம் என்பதற்கு முன்னால், நல்லாட்சி என்ற சொற்பதம் எங்கிருந்து வந்தது? அதற்கு அனுமதி யார் வழங்கினார்கள்?' என்று அவர் கேள்வியெழுப்பினார்.

'இது தொடர்பில் ஊடக அமைச்சின் பணிப்பாளர் நாயகமே அறிவித்தல் விடுத்திருக்க வேண்டும். மாறாக இத்தனை காலமும் பணிப்பாளர் அறிவித்தல் விடுக்கும் நிலை மாறி, செயலாளர் அறிவித்தல் விடுத்திருப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், இந்த அறிவித்தல் ஜனாதிபதியின் சுய விருப்பத்தின் அடிப்படையில் வெளியிடவில்லை என்றால், இவ்வாறான அறிவித்தல் விடுவதற்கான காரணத்தையும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெளிவுபடுத்த வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.

மேலும், 'கட்சி தொடர்பான விடயங்களுக்கு கொள்கை ரீதியான சட்டங்களை பயன்படுத்த முடியாது' எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X