2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’

Thipaan   / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை. அதேபோல, பூர்வீகத் தமிழர்களின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றது” என,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் தொடர்பில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.

“6,7,8 மற்றும் 9ஆம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்றுப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறுகளே இல்லை. வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் அவ்வாறான நிலைமை காணப்படுகின்ற நிலையில், சித்திரத்தில் அதனைவிடவும் மோசமான நிலைமையொன்றே உள்ளது. சித்திரங்கள், வடிவங்கள் மற்றும் கலை வடிவங்கள், சிங்கள மரபையே கொண்டிருக்கின்றன. தமிழ் மரபுகள் முற்றாக மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ் மன்னர்களின் வரலாறுகள், முற்றுமுழுதாக இல்லாமற் செய்யப்பட்டுவிட்டன.

“சிங்களவர்கள், ஆரியர்களாக இங்கு வருவதற்கு முன்னமே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கிருந்தனர். எனினும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, வரலாறு திணிக்கப்படுகின்றது. “ஆங்கிலேயருக்கு எதிராக சிங்களவர்கள் மட்டுமன்றி தமிழர்களும் போராடினர். இந்து-பௌத்த பாடசாலையை, சேர்.பொன் இராமநாதனே நிறுவினார். போயா தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற யோசனையையும் அவரே முன்வைத்தார். இவையெல்லாம் மறைக்கப்பட்டுவிட்டன” என்றார்.

“இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய வரலாறுகளை, மாணவர்கள் கற்கின்றனர். இலங்கை வரலாற்றை கற்கும் போது, அதில் தமிழர் வரலாறு இல்லை” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .