2025 மே 16, வெள்ளிக்கிழமை

70 வயதை தாண்டிய முதியோர் 386,080 பேர் உள்ளனர்

Kanagaraj   / 2015 ஜூன் 18 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 70 வயதை தாண்டிய 386,080 முதியோர்கள் உள்ளனர். அவர்களுக்கு  மாதாந்தம் 2,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துகே அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட  அமைச்சரவை முடிவுகள் சில...

01.  2015ஆம் ஆண்டுக்காக அங்கிகரிக்கப்பட்ட முழு கடன் வரையறை 1,780,000 மில்லியன் ஆகும். இவ்வருடம் ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை 684,253.41 மில்லியன் ரூபாவை இலங்கை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது.

இவற்றில் முழு உள்நாட்டு கடன் 526,204.05 மில்லியன் ரூபாவும் முழு வெளிநாட்டு கடன் 158,049.36 மில்லியன் ரூபாவுமாகக் காணப்படுகின்றன. 

02.  நிதிச்சேவை ஆணைக்குழுவின் 2015ஆம் நிதியாண்டுக்கான சிபார்சுகளை செயற்படுத்துவதற்கும் அந்த சிபார்சுகளை செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. 

03.  நிதி ஆணைக்குழுவுக்கான புதிய அலுவலகக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கும் Corporate Social Responsibility - CSR நிதியினை அரச நிறுவனங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதக்காக குழுவொன்றை நியமிக்க அங்கிகாரம்.

04.  தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னிலை வகிக்கும் நாடு என்ற ரீதியில் இந்த நிலையை மேலும் நிலை நிறுத்திக்கொள்ளவும் குறித்த துறையில் முதலீடுகளை மேற்கொள்ள ஏற்புடைய சூழலை ஏற்படுத்திக்கொள்ளவும் அரசாங்கத்தின் உயர் நிறுவனங்களின் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் அமைச்சுக்கள் உள்ளடங்கிய குழுவை நியமிக்க அங்கிகாரம்.  

05.  2015ஆம் ஆண்டுக்கான நெல்கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 160,301.8 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதுவே இக்காலப்பகுதியில் ஒரு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அதிக தொகையாகும். 

அடுத்த போகத்தின் நெல்லினை கொள்வனவு செய்வதற்காக தற்போது களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை கேள்வி கோரலின் அடிப்படையில் விற்பனை செயவதற்கும் பெரும்போக நெற் செய்கைக்கும் அமைச்சரவை அங்கிகாரம்.

06.  நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 1980 – 1990 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக வேண்டி பெற்றுக்கொள்ளப்பட்ட இடங்களில் வசித்து வந்த மத்திய தர வர்க்கத்தினருக்காக இரத்தினபுரி, பெலியகொட, பத்தரமுல்லை, இரத்மலானை மற்றும் மாதிவெல ஆகிய வீட்டுத்தொகுதியில் குறித்த இடங்களில் வசிக்கும் மக்களுக்கு குறித்த இ;டங்களின் உரிமைத்தினை பெற்றுக்கொடுக்க அனுமதியளித்துள்ளது. 

07.  சுமார் 40 தொடக்கம் 70 வருடங்கள் பழைமை வாய்ந்த  துறைமுகத்திலிருந்து கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலை வரையான எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் குழாய் தொகுதியொன்றினை அமைப்பதற்கு ஒப்பத்தக்காரர் ஒருவரை தெரிவு செய்துகொள்ளும் நோக்கில் திறந்த விலைமனுக்களை கோருவதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம்.

08.  தேசிய மின் சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்ப்பில் தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக அரச நிறுவனங்களில் மின் சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பிலும் அரச அலுவலகங்களில் ஊழியர் குழுக்களை இவ்வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கிகாரம்.

09.  41ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்காக ஏற்கெனவே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஒரு சில போட்டி நிகழ்ச்சிகள் ஏற்கெனவே முடிவடைந்துள்ளன. 2016ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவை வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நடத்துவதற்கு அங்கிகாரம். 

10.  வெஸ்கோ மற்றும் கொஸ்கோ ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரப்பிரசாதங்களை வழங்குவதற்குமான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கிகாரம்.

11.  விஞ்ஞானிகளை பறிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஒன்றிணைந்த உயிரியல் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அமைப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளுதல் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்துக்கு அங்கிகாரம்.

12.  உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்காக ஒழுக்கக் கோவையொன்றினை அறிமுகம் செய்வதற்கும் அதனை செயற்படுத்துவதற்கும் மாகாண சபைகளுக்கு குறித்த கோவையினை அனுப்பி வைத்து அதன்படி அவற்றின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்குமாக அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. 

13.  வீரஹெட்டியாவில் ஜோர்ஜ் ராஜபக்ச விளையாட்டு திடலில் காட்சி மாடத்தினை நிர்மாணித்தல் மற்றும் ஹொரன பஸ் நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டம் கட்டம் 11ஐ செயற்படுத்தல் தொடர்பிலான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.

14.  KFAED நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள 25 பாலங்களின் மீள் கட்டுமாணப் பணிகளுக்காக ஆலோசனை சேவையினை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை விதிகள் கருத்திட்டம் 3 பிரிவின் கீழ் மிகுதியாகக் காணப்படும் தொகையில் இதுவரையில் வேலைகள் ஆரம்பிக்கப்படாத 08 வீதிகளுக்கும் பதிலாக உடனடியாக புனரமைப்பு தேவைப்படுகின்ற புதிய வீதிகளை மாற்றீடு செய்வதற்கான அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கிகாரம். 

15.  இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு கொள்கலன் முனையத்துக்கு கொள்கலன்களைக் கையாளும் பாரம்தூக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்காக தகைமைகளைப் பெற்றுள்ள தரப்பினரிடமிருந்து விலை மனுக்களை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது. 

16. 2015-2020 தேசிய புகையிரத மூலோபாய வழிமுறை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 02 என்ஜின் பெட்டிகளுடன் 12 பயணிகள் பெட்டிகளுடன் கூடிய 06 பவர் செட்கள், என்ஜின் பெட்டியொன்றுடனும் டம்மி பெட்டியொன்றுடனும் 06 பயணிகள் பெட்டிகளுடன் கூடிய 12 பவர் செட்கள், 160 பயணிகள் பெட்டிகள் மற்றும் 65 தொன் கொள்ளளவைக் கொண்ட 30 எரிபொருள் போக்குவரத்து வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது. 

17.  உயிரிழந்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் அறிந்து கொள்ளல் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு 'இராணுவ விசேட அட்டை' யை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .