2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

என்மீது தவறில்லை: மறுதணிக்கைக்குழுவின் தலைவர் சேகர்

Gavitha   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அந்தத் திரைப்பட விவகாரம் தொடர்பில் தன்மீது தவறில்லை என  மறுதணிக்கைக்குழுவின் தலைவர் எஸ்.வி.சேகர் விளக்கமளித்துள்ளார்.

திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்த நிலையில், கடந்தவாரம் பேட்டியளித்த அத்திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன்,

திரைப்படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பியதாகவும் திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், திரைப்படத்தை திரையிட அனுமதி மறுத்தாகவும் அதைத்தொடர்ந்து திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியபோது, மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும் தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தை பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்; எனவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில், எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இத்திரைப்படத்துக்கு தணிக்கை குழு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. 4 பேர் கொண்ட குழு, அதற்குப்பின்னர்  நான் உட்பட 10 பேர் கொண்ட குழு மற்றும் டெல்லியில் உள்ள ஒரு குழு. இந்த மூன்று குழுக்களும் சான்றிதழ் தர மறுத்த நிலையிலேயே, இப்படத்தின் மறுப்புக்கு நான் தான் காரணம் என்று கு.கணேசன்  பொய்யான காரணத்தை கூறியிருக்கிறார்.

இசைப்பிரியாவின் மரணம் கொடுமையானது. கொடூரமானது. அதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுபவன் நான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான், அந்தப் பெண்ணை பற்றி தவறாக சொல்லிவிட்டதாக பிரசாரம் செய்வது இவர் தன்னுடைய வியாபாரத்துக்காக பயன்படுத்திய விளம்பரமாகவே நினைக்கிறேன்.

நான் அந்தப் பெண்ணைப் பற்றி தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை. தணிக்கைக்குழுவுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை, இந்திய நாடாளுமன்றத்தால் அங்கிகாரம் செய்யப்பட்ட சட்டங்கள்.
அந்த சட்டங்கள் படிதான் திரைப்படங்களுக்கான சான்றிதழ்கள் கொடுப்பது பற்றி தீர்மானிக்க முடியும்.

நிறைய பேர் என்னை புரிந்துகொள்ளாமல் திட்டிவிட்டீர்கள். பரவாயில்லை. என்னுடைய சகோதரர்கள் திட்டியபோல் நினைத்துக்கொள்கிறேன்.

ஆனால், திட்டப்பட்ட வார்த்தைகளை யாருமே திரும்ப எடுத்துக்கொள்ள முடியாது. கூடிய விரைவில் காலம் நான் தவறு செய்யாதவன் என்பதை உங்களுக்கு நிரூபிக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .