2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கம் வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் வேண்டும்

Gavitha   / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூஸிலாந்திலிருந்து அழகன் கனகராஜ்

“வலய மாற்றத்தில், ஆசியா மற்றும் பசுப்பிக் வலயங்கள் முக்கியமானவையாகும். அதில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு ஏற்றவகையில், மாற்றங்களைச் செய்யவேண்டும். அதற்கு, நல்லிணக்கம் மிகமிக முக்கியமானதாகும். அந்த நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின், மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு வருகைதந்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஹொக்லேன்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து, கடந்த சனிக்கிழமை (01) மாலை, சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,  

“இரண்டும் சிறிய நாடுகளாகும். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையில், பலமான உறவுகள் இருக்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம், கிரிக்கெட் மற்றும் றக்பி ஆகியவற்றில் பொதுவான தொடர்புகள் இருக்கின்றன.  

சமூகக் கொள்கையொன்று இருப்பதை, இங்குதான் அறிந்துகொண்டேன். சமூக வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தேர்தல் முறைமைகளிலுள்ள பாரிய மாற்றங்களை இங்கு உணரமுடிகின்றது. நாடாளுமன்ற முறைமை தொடர்பில் நாங்களும் கற்கவேண்டியிருக்கின்றது.  

நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதாகும். பயங்கரவாத தடைச்சடத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதனைச் செய்தாலும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதனைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம். 

நாங்கள், எங்கிருந்தாலும் இலங்கையர்கள் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது. நாட்டில், அமைதி நிலவுகின்றது. நல்லிணக்கத்துக்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 30 வருட யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமையொன்று இனிமேல் ஏற்பட்டுவிடவே கூடாது. என்பதற்கான நல்லிணக்கம் தொடர்பில் அரசியல் விவகாரத்திலும் பல்வேறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஜனாதிபதி வசமிருந்த நிறைவேற்று அதிகாரங்களில் பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரும் வகையில் தேர்தல் முறைமைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. நீங்கள் எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து முறைமையொன்றையே அங்கும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். 

நியூசிலாந்து நாடாளுமன்ற முறைமை தொடர்பில் கற்பிக்குமாறு, இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் அழைப்பு விடுகின்றேன். சட்டமும் ஒழுங்கும் பலமானதாகவே இருக்கின்றன. 

எதிர்கால சந்தந்தியினரான பிள்ளைகள், பிள்ளைகளாக இருக்கவேண்டுமாயின, அரசியல் முறைமையில் பலமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை வந்துப் பாருங்கள், அதற்கு பின்னர் உதவிக்கரம் நீட்டுங்கள்” என்று அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .