2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புகைப்பொருள் நிறுவனங்கள் வழங்கும் ரூ.500 மில்லியனுக்கு எதிர்ப்பு

Gavitha   / 2016 நவம்பர் 27 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஜனாதிபதி நிதியத்துக்கு 500 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு எடுக்கப்படும் தீர்மானமானது சட்டவிரோதமானது என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“வரவு-செலவுத் திட்ட யோசனையின் ஊடாக, புகைத்தலுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டத்துக்காக, புகைப்பொருள் நிறுவனங்களிடமிருந்து 500மில்லியன் ரூபாயை, ஜனாதிபதி நிதியத்துக்கு நன்கொடையளிக்கும் தீர்மானமானது சட்டவிரோதமானதாகும். 

உலக சுகாதார நிறுவனமானது 2003ஆம் ஆண்டு கைச்சாதிட்ட, புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு மாநாட்டு கொள்கைக்கு அமைவாக, சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக, புகைப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையை பெற்றுக்கொள்வது உசித்தமானது அல்ல என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தப் பிரகடனத்தில் 182 நாடுகள் கைச்சாத்திட்டுள்ள, ஆசிய வலயத்தில் கைச்சாத்திட்ட முதலாவது நாடு இலங்கையாகும். அதனூடாக இலங்கையானது, ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆகையினால், புகைப்பொருள் நிறுவனங்கள் 500 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்குவதையோ, அதனை ஜனாதிபதி நிதியத்தில் வைப்பிலிடுவதையோ நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இது பிரகடனத்தின் உறுப்புரைகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்றும் சுட்டிக்காட்டினார். 

2020ஆம் ஆண்டளவில் இலங்கையை புகைத்தல் அற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக, புகைப்பொருட்களுக்காக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புகைத்தலுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  

பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்செய்யப்பட்டுள்ளது. சிகரெட் பெட்டிகளில், 80 சதவீதமான எச்சரிக்கை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதேபோல, வெள்ளைப் பெட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, புகைப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து சதவீதங்களினால் குறைந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .