Lenin Raj / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (21) ஏழாண்டுகள் நிறைவடையும் நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, பெரும் சந்தேகத்தை வெளியிட்டு, முக்கிய புள்ளிகள் பலருக்கு எதிராகக் கையை நீட்டியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னதாகவே அறிந்து வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களான ஹேமசிறி பெர்னாண்டோ, ரவி செனவிரத்ன, அப்போதைய பொலிஸ் மா அதிபர், சிஐடியின் அப்போதைய பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர மற்றும் சஹ்ரானின் தந்தை இப்ராஹிம் ஆகியோர் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் குறித்த தாக்குதல் தொடர்பில் முன்னதாகவே அறிந்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சிவநேசத்துறை சந்திரகாந்தனை மாத்திரம் விளக்கமறியலில் வைத்திருப்பது ஏன் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றுக்குத் திங்கட்கிழமை (21) இரவு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்,
"மாவநெல்லையில் புத்தர் சிலையைச் சிதைத்தமை தொடர்பில் புத்தளம் - வனாத்துவில்லு பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லத் தடையாக இருந்தவர் ஷானி அபேசேகர ஆவார். அவரையும் கைது செய்ய வேண்டும். சஹ்ரானுடைய மனைவியின் வீட்டினைச் சோதனையிடச் சென்றபோது பாதுகாப்புத் தரப்பினரை அங்குச் செல்லவிடாது தடுத்தது யார்? ஷானி அபேசேகரவே அதனையும் தடுத்தார்.
குற்றம் ஒன்று நடைபெறப்போகின்றது என முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தவர்கள் தற்போது விசாரணை செய்பவர்களாக மாறியிருக்கின்றார்கள். அதேநேரம் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட சிலருக்குக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீது பிறிதொரு குரோதம் காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்டவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அந்த கலந்துரையாடலில் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவொன்றும் சேமிக்கப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலில் சுரேஷ் சலேவைத் தகுதியற்ற முறையில் மிக மோசமாக நிந்தித்துக் குற்றம் சுமத்தியுள்ளார் சிறில் காமினி. அதனை அடிப்படையாகக் கொண்டு அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக, சுரேஷ் சலே இரகசியப் பொலிஸ் பிரிவு மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பல பிரிவுகளிடம் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சிறில் காமினி அளித்துள்ள சாட்சியமும் என்னிடம் காணப்படுகின்றது. இதனாலேயே சிறில் காமினி தொடர்ச்சியாக சுரேஷ் சலேவைப் பின்தொடர்கின்றார்.
இப்ராஹிம் என்பவர் இரு தற்கொலையாளிகளைப் பெற்றெடுத்து அவர்களுக்கு நிதியுதவியும் செய்தவர். அவர் தற்போது வழக்குகளிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றுச் சுகபோக வாழ்க்கையை வாழ்கின்றார். அவர் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி எவ்வித கேள்விகளையும் எழுப்பவில்லை. ஆனால் சுரேஷ் சலே பதிவு செய்துள்ள வழக்கிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ள அவர் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் அருட்தந்தை சிறில் காமினி" என்றார்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago