2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

GSP+ சலுகைக்கு, “நிபந்தனைகளை விதியுங்கள்”

Janu   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீஎஸ்பி ப்ளஸ் வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள். இதுதான் தமிழரின் எதிர்பார்ப்பாகும் என ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்புக் குழுவிடம் எடுத்துரைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான குழு எழுத்து மூல ஐந்து அம்ச கோரிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள். இலங்கை தொடர்பில் ஐ.நாவில் பிரதான பங்களிப்பு செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி விட்டது. இந்நிலையில் எமது கடைசி சர்வதேச நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் இலங்கை விவகாரத்தை அணுகுங்கள் என்றும் எடுத்துரைத்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் உடனடி இடை நிறுத்தம், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல் உடனடி ஆரம்பம், உண்மை ஆணைக்குழு (Truth Commission) மூலம் காணாமல் போனோர் மற்றும் பொறுப்பு கூறல் விவகாரங்களின் உடனடி அர்த்தப்பூர்வ நடவடிக்கை, நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை, நவீன அடிமைத்துவம் அம்சங்களைக் கொண்ட மலையக தமிழர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்ட வாழ் மக்களை ஐரோப்பிய கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வந்து அவர்களது காணி உரிமை உட்பட வாழ்வுரிமைகளை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பான  முன்மொழிவுகளை எழுத்து மூலமாகவும், உரையாடல் மூலமாகவும், இலங்கைக்கு வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்கலாமா? என ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜீஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பு குழுவினரிடம் நாம் நேரடியாக சமர்ப்பித்தோம்.

இந்த நிபந்தனைகளை திகதி குறித்து   நிறைவேற்றினால் மாத்திரமே இலங்கைக்கு ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் வரிச் சலுகை கண்காணிப்புக் குழுவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவிற்கும் இடையில் சந்திப்பு உரையாடல் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது.

கூட்டணி  சார்பில் தலைவர் மனோ கணேசன் எம்.பி, பிரதி தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜ.ம.மு.) சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி, ஜ.ம.மு. சட்ட விவகார செயலாளர் சக்சின் கணேசன் ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் தூதுவர் கார்மென் மொரேனோ, அரசியல் செயலர், கரோலினா மற்றும் ஐந்து பேர் கொண்ட ஜிஎஸ்பி ப்ளஸ் கண்காணிப்பு ஆகியோரும் கலந்துரையாடலில் இடம் பெற்றனர்.     

இது தொடர்பில், மனோ எம்.பி. தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பு குழுவினரிடம்  கையளித்த முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

(01) பயங்கரவாத தடை சட்டம்

இன்றைய தேவைக்கு குற்றவியல் சட்டக்கோவை தாராளமாக போதுமானது. இதுவே ஜே.வி.பியின் கடந்த கால நிலைப்பாடாக இருந்தது. எனினும், புதிய சட்டம் அவசியமாயின் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்வரை இன்றைய பயங்கரவாத தடை சட்ட பாவனை உடனடியாக இடை நிறுத்தப்பட வேண்டும்.

(02) புதிய அரசியலமைப்பு

இந்த அரசு தேர்தல் வேளையில், கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்த பட்ட  புதிய அரசியலமைப்பு பணியை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து, மீள ஆரம்பிப்போம் என உறுதி அளித்தது. அவ்வேளையில், நானும், இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அந்த புதிய அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் இருந்தோம். இந்த பணி இந்த வருடமே செய்து முடிக்கப்பட வேண்டும். வருடங்கள் கடந்தால் இதை ஒரு போதும் செய்து முடிக்க முடியாது என்பது எமது அனுபவமாகும். ஆகவே, இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, தேசிய இனப்பிரச்சினைக்கு  அர்த்தமுள்ள அதிகார பகிர்வின்  மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.  

(03) பொறுப்பு கூறல்

உடனடியாக உண்மை ஆணைக்குழு (Truth Commission) ஆரம்பிக்கப்பட்டு, பொறுப்பு கூறல் அடிப்படையில் வலிந்து காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

(04) தமிழ் அரசியல் கைதிகள்

பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இன்று பத்து தமிழ் கைதிகள் நீண்டகாலமாக உள்ளனர். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். கைதிகளின் பெயர் பட்டியல் விபரங்களை, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் சார்பாக மு.கோமகன் தயாரிக்க, மக்கள் போராட்ட முன்னணி சார்பாக தோழர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அது இங்கே ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பு குழுவினரிடம் தரப்படுகிறது.

(05) பெருந்தோட்ட மக்கள் மலையக தமிழ் மக்கள் பரப்பில் இருக்கின்ற பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் மிகவும் நலிவுற்ற பிரிவினர். இந்த மக்களின் நிலைமை இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய ஜீஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அதற்கான தரவுகள்:

(அ) தோட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலை ஐரோப்பிய காலை உணவு மேசை வரை செல்லும் விநியோக பாதையின் ஆரம்பமான பெருந்தோட்டங்கள் நவீன அடிமைத்துவ அம்சங்களைக் கொண்டிருக்கின்றமை

(ஆ) அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பெருந்தோட்ட மக்களை போதுமான அளவு உள்வாங்காததால், அவர்கள் தனியார் கம்பனிகளின் தயவில் வாழ வேண்டி உள்ளமை.    

(இ)  நவீன அடிமைத்துவ தினக்கூலி தொழிலாளர் என்ற நிலையில் இருந்து, பெருந்தோட்ட தொழில் துறையில் கூட்டுப் பங்காளராக மாறுகின்ற கூட்டு வர்த்தக மாற்றம் வராமை.

(ஈ) தேசிய நீரோட்டத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் தள்ளி வைக்கப்பட்ட காரணத்தால், சம உரிமை மறுக்கப்பட்டு, நில உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, வாழ்வாதார உரிமை ஆகியவை மறுக்கப்பட்டு, பொது நிர்வாக, சமூக கட்டமைப்பு மற்றும் நாட்டின் பொது நலச் சேவைகள் கிடைக்காமை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .